“குழந்தைத் திருமணம்” என்ற கொடூரம்! (7) மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

5 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

“குழந்தைத் திருமணம் சமூகத்தை பலவீனப் படுத்துவதாகவும், ஆரோக்கியமற்ற சந்ததிகளை உருவாக்கிவிடும்” என்று விவேகானந்தர் கூறினார். கல்வியறிவின்மை மற்றும் பெண்களுக்குப் பாது காப்பின்மை காரணமாக ஏற்படும் இந்த தீய பழக்கத்தை ஒழித்து பெண்களுக்கு கல்வியும், சுதந்திரமும் அளிக்க வேண்டும். குழந்தைத் திருமணம், அதனால் சிறு வயதிலேயே கர்ப்பம் தரித்தல் ஆகியவை தாய் மற்றும் குழந்தையின் உடல் நலத்தையும் சேர்ந்து பாதிக்கும் என்று விவேகானந்தர் கவலைப் பட்டார். குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதென்பது சமுதாய சீர்திருத்தத்தின் முக்கிய அங்கமாகும். பெண் கல்வியும், தற்சார்புத் தன்மையும் கிடைத்தால் இது போன்ற மூடப் பழக்கங்கள் தானாகவே ஒழிந்து விடும் என்பதே அவர் கருத்தாக இருந்தது.

தந்தை பெரியாரின் பார்வையில்…

சமூக நீதியையும், பாலியல் நீதியையும் தன் இரண்டு கண்களாகக் கொண்ட தந்தை பெரியார் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக கடுமையாகப் போராடினார். 1929இல் நடந்த செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் குழந்தைத் திருமணத்தை எதிர்த்து தீர்மானம் போட்டார். “குழந்தைத் திருமணம் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் கடுமையான கொடுமை மற்றும் பெண்ணடிமைத்தனம்” என்றார் தந்தை பெரியார். “இந்த ஏற்பாட்டால் பெண்களின் கல்வி மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும். பால்ய விவாஹம் என்பது குழந்தைகளை, பெண்களை அவர்களின் மன உணர்வுக்கு விரோதமாக, நிர்ப்பந்திப்பதான, அவர்களை அடிமைப்படுத்துவதற்கான ஒரு செயல்” என்றார். “பெண்களின் கல்வி மற்றும் சுதந்திரத்தை ஒடுக்கும் ஒரு செயல். பொருளாதார ரீதியாகப் பெண்கள் சுதந்திரம் பெற்றால் மட்டுமே இதைத் தடுக்க முடியும். இதனால் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே விதவையாகி, வாழ்நாள் முழுவதும் புறக்கணிக்கப்படும் போக்கை மாற்ற அந்த குழந்தைகளுக்கு மறுமணம் செய்விக்க வேண்டும்” என்றார். “திருமணம் அறிவு முதிரச்சியடைந்த ஆணும், பெண்ணும் செய்து கொள்ளும் ஏற்பாடே ஒழிய கட்டாயத்திற்காகவோ, சம்பிரதாயத்திற்காகவோ செய்து கொள்வதாக இருக்கக் கூடாது” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார்.

தந்தை பெரியார் பாலியல் நீதியைப் பற்றிக் குறிப்பிடும்போது “பெண்கள் கையில் இருக்கும் கரண்டியைப் பிடுங்கி விட்டு, புத்தகத்தைக் கொடுங்கள்” என்றார். “ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் படித்தால் அவன் மட்டுமே படித்தவனாவான். ஆனால் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படித்ததாகும்” என்று கூறினார். “குழந்தைகளுக்குக் குழந்தைத் திருமணம் ஒழிய வேண்டுமென்றால் பெண்களுக்குக் கல்வி அவசியம்” என்றார். “பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இருந்தால், அவர்கள் யாரையும் சாராத நிலையில் இருந்தால் இந்தக் கொடுமையிலிருந்து விடுதலை அடைய முடியும்” என்றும் தந்தை பெரியார் கூறினார். 1929இல் செங்கல்பட்டு நடந்த சுயமரியாதை மாநாட்டில் ‘பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும்’ என்று தந்தை பெரியார் தீர்மானம் போட்டார்.

“கல்யாணம் பண்ணச் சொல்லிக் கேட்டேனா?”

தந்தை பெரியார் எதையும் சொன்னதோடு நிறுத்தும் தலைவரில்லை. தனக்கு சரியென்று பட்டதை தன் வாழ்க்கையில் நடத்திக் காட்டியவர். குழந்தைத் திருமணம் ஒன்று அவரது இல்லத்தில் நடந்தது. தந்தை பெரியாருக்கு இரண்டு தங்கைகள் (பெரியவர் கண்ணம்மாள், மற்றொருவர் பொன்னுத்தாய்). பொன்னுத்தாயின் கணவர் பெயர் கல்யாண சுந்தர நாயக்கர். அவர்களது பெண் அம்மாயி. அந்த பெண் குழந்தைக்கு ஒன்பது வயதுக்கும்போது பனிரெண்டு வயதான ஒரு சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனால் திருமணமாகி முப்பதாவது நாளிலேயே அந்த பையன் விஷக்காய்ச்சல் வந்து இறந்து விட்டான். அந்தக் குழந்தை தந்தை பெரியாரிடம், “நைனா, நான் கல்யாணம் பண்ணச் சொல்லிக் கேட்டேனா? என்னை இந்த கொடுமைக்கு ஆளாக்கி விட்டீர்களே” என்று கதறியது. அது பெரியார் அய்யாவை மனதளவில் பெரிதும் பாதித்தது. அந்த குழந்தைக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டுமென்று முடிவு எடுத்தார். அப்பொழுது பெரியாருக்கு முப்பது வயது. பெரியார் அய்யா அதனால் பெரும் குழப்பம் குடும்பத்தில் நிகழும் என்று கவலைப் படவில்லை.

பெரும் புரட்சித் திருமணம்

ஒரு நாள் வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் வெளியே போயிருந்த போது அந்த விதவைக் குழந்தை அம்மாயி (விதவைகள் வெளியே போக முடியாது என்ற கட்டுப் பாட்டினாலும்), ராமசாமியும் (பெரியார் அய்யாவும்) மட்டும் வீட்டிலிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நல்ல வாய்ப்பை ராமசாமி இழக்க விரும்பவில்லை. ஏற்கனவே தன் நண்பர் மூலம் ஒரு மாப்பிள்ளையை அம்மாயிக்கு வேறு ஊரில் ஏற்பாடு செய்திருந்தார். (இவர் நல்ல பிள்ளை, பால வீட்டில் இருந்து கொண்டார்). அம்மாயிக்கு நண்பர் உதவியால் திருமணம் நடந்து விட்டது. வீட்டில் உள்ளவர்கள் ஈரோடு வீட்டிற்குத் திரும்பவும் புது மணப் பெண்ணாக மாப்பிள்ளையும் அம்மாயியும் வந்து சேர்ந்தனர். அவ்வளவுதான்! ஒரு பெரும் பிரளயமே வீட்டில் நிகழ்ந்தது ஒரே ரகளை!

தந்தை பெரியார் அவரது முப்பதாவது வயதிலேயே செய்த இந்த பெரும் புரட்சி அந்த காலத்தில் நம் மக்களிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. விதவைகளுக்கு சமூகக் கொடுமைகளை இழைத்து வந்த இந்த சமூகத்தில் விதவைத் திருமணம் என்பது யாருமே கேள்விப்படாத ஒரு செயலாக இருந்தது. குழந்தைத் திருமணம் ஒரு சமூகக் கொடுமை என்ற பெரியார், அதனால் விளைந்த சிறுமிகளின் விதவைக் கோலம் மற்றொரு பெருங்கொடுமை என்றும் எண்ணினார். அதனால் தன் வீட்டிலேயே விதவைத் திருமணம் என்னும் பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார். ஆனால் அவர் வீட்டில், அவர் சார்ந்த ஜாதியிலோ அதனை அவ்வளவு எளிதாக எடுத்து கொள்ளவில்லை. அந்த நிகழ்வுக்காக அவர் ஆறு ஆண்டுகள் “ஜாதி விலக்கம்” செய்யப்பட்டார்.

சாரதா சட்டம்

இப்படி சீர்திருத்தவாதிகள் ஒரு புறமும், ஸநாதனவாதிகள் மறுபுறமும் கயிறு இழுக்கும் போட்டி போல் வாத, பிரதி வாதங்களை நிகழ்த்திக் கொண்டிருந்ததால், அந்நியர்களான ஆங்கிலேய அரசை, குழந்தை திருமணத் தடைச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் ஏற்பட்ட சிக்கலால் நிறையத் தடுத்தது. 1891 ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடைச் சட்ட முன் வரைவு கொண்டு வரப்பட்டாலும் அதை ஸநாதனவாதிகள் (ஆட்சி மன்றங்களில் அவர்கள்தான் மிக பெரும்பான்மையினர்) எதிர்ப்பால் உடனே சட்டமாக்க முடியவில்லை. பல ஆண்டுகள் இழுத்தடிப்புக்குப் பின் (37 ஆண்டுகள் குப்பபின்) 1929 ஆம் ஆண்டு, செப்டம்பர் 28ஆம் தேதி குழந்தைத் திருமண தடைச் சட்டம் நிறைவேறியது. அந்த கால கட்டத்தில் ராவ் சாஹிப் ஹரி பிலாஸ் சாரதா கடுமையாக அதற்காக போராடியதால் அவர் பெயரிலேயே ‘சாரதா சட்டம்’ என்று அந்தச் சட்டம் நிறைவேறியது. அதன்படி பெண்களுக்கு 14 வயதும், ஆண்களுக்கு 18 வயதுமந்தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்குக் கீழ் வயதில் திருமணம் செய்விப்பது கிரிமினல் குற்றமென்றும் அதற்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் அந்த சட்டம் கூறியது. அதனால் குழந்தைத் திருமணம் செய்யும் பழக்கம் குறையத் தொடங்கியது.

ஆங்கிலேய அரசு 1929ஆம் ஆண்டே சட்டம் கொண்டு வந்தாலும் வழக்கம்போல் பார்ப்பனக் குடும்பங்களிலும், கிராமங்களிலும் ரகசியமாகவும், திருட்டுத் தனமாகவும் ஆங்காங்கு குழந்தைத் திருமணங்கள் நடந்து வந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின் 1978 ஆம் ஆண்டு 1929இல் இருந்த சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டு வந்து, மற்றொரு குழந்தைத் திருமண தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டப்படி பெண்களின் திருமண வயது பதினெட்டாகவும், ஆண்கள் திருமண வயது 21 ஆகவும் மாற்றப்பட்டது. வயதில்தான் மாற்றங்கள் செய்யப்பட்டதே ஒழிய வேறு பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் அந்தச் சட்டத்தில் செய்யப்படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *