பெண்களை கணவன் இறந்த பின் மனைவியை ஈவு, இரக்கமின்றி பெண்ணை நெருப்பில் தள்ளிக் கொன்ற காலக்கட்டம் எழுபத்தைந்து ஆண்டுகள் போராட்டத் திற்குப் பின் முடிவுக்கு வந்தது ஒருபுறமென்றால், கொலைக்கு ஆளாகாத பெண்களை “விதவைகளாக்கி” கொடுமைப்படுத்தி குற்றுயிரும், கொலையுயிருமாய் கொடுமைப்படுத்தியது இந்து மதம் என்ற ஸநாதன மதம். ஒரு காலக்கட்டத்தில் “விதவை” என பெண்ணை வாழ்நாள் முழுவதும் சித்திரவதைச் செய்து வைத்திருப்பதைவிட அவரைக் கொன்றுவிடுவதே நல்லது என்று ஆத்திரம் தீர தந்தை பெரியார் கூறினார். சமூக நீதியையும், பாலியல் நீதியையும் தன் இரண்டு கண்களாகக் கொண்டிருந்த தந்தை பெரியார் விதவையாக்கி மூலையில் பெண்ணை உட்கார வைப்பதைவிட அவளை கொன்றே விடலாம் என்று கூறினார் என்றால் அந்த விதவைப் பட்டம் எவ்வளவு கொடூரமானது? என்று நினைத்துப் பாருங்கள். அதிலும் மனுஸ்மிருதிதான் பெண்ணின் சமூக வாழ்வில் இந்தக் கொடுமை நிகழ்ந்தது.
பார்ப்பனரின் வேத (இந்து) மதத்தில் விதவைகள் எப்படி உருவானார்கள்? “பெண்ணை ‘ருது’ காலத்திற்கு முன் தக்க வரனுக்குக் கலியாணம் செய்து கொடாத தகப்பனும், மனைவியை ருது காலத்திற் புணராத கணவனும் நிந்திக்கப்படுவார்கள்.” (அசல் மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 9, ஸ்லோகம் 4.) “குலம், நல்லொழுக்கம் இவைகளிலுயர்ந்தவனாயும், தன் ஜாதிக்குத் தக்க ஜாதியுள்ளவனாயிருக்கிற வரனுக்கு, தன் பெண் எட்டு வயதுக்குட்பட்டிருந்தாலும் விவாகம் செய்து கொடுத்து விடலாம்” (அசல் மனுதர்மம் அத்தியாயம் 9, ஸ்லோகம் 88).
இது போன்ற அறிவுரைகள் மட்டுமின்றி மேலும் அசல் மனுதர்மம் என்ன கூறுகிறது தெரியுமா?
அனைத்துப் பெண்களும் சூத்திரப் பெண்கள்தான் என்பதை மனுதர்மம் “ஸ்தீரினாந்த சூத்ர ஜாதினாம்” என்கிறது. பெண்கள் அனைவரும் சூத்ரஜாதி என்பதே இதன் பொருள். “ந ஸ்திரீ சூத்ர வேதமத்யதாம்” – பெண்களும், சூத்திரர்களும் வேதங்களை ஓதக்கூடாது. யாகங்களில் ஓதப்படும் வேத கோஷங்கள் காதில் விழாதபடிக்கு புடவையால் காதை மூடிக்கொள்ள வேண்டும். “ஸ்திரீதாம உபயநயனஸ்தா னே விவாஹம் மனு ரப்ரவீத்” — பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்திர சமஸ்காரங்களும் கிடையாது. ஆக மனுதர்மப்படி பார்ப்பனப் பெண்களுக்கு “இரட்டைப் பிறப்பு” (துவிஜாதி) கிடையாது. அதனால் இறக்கும் வரையில் அவர்கள் “சூத்திரர்”களே! ‘சதி’யைப் பற்றி “சிதா வாரோஹணம் பிரம்மச்சரியம்” என்று மனு உத்தரவிடுகிறார். ‘சதி’ கொடுமையிலிருந்து தப்பிய இளம் விதவைகளை அவலட்சணமாக்க கணவன் மறைந்ததும் மொட்டையடித்து, முக்காடிட்டு, மூலையில் உட்கார வைத்துக் கொடுமைப்படுத்தப்பட்டனர். அந்தச் சிறுமிகள், இதைப் போன்ற கொடுமைகள் பெண்கள் மேல் சுமத்தப்பட்டன. (சான்று: “இந்து மதம் எங்கே போகிறது?” அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், பக்கம் 176 – 178)
பெண்களுக்குக் கல்வியும் கிடையாது. வேதம் ஓதவும் முடியாது. உபநயனமும் கிடையாது. பூஜை செய்யும் உரிமையும் கிடையாது. கணவனுடன் வாழவும் உரிமை கிடையாது. இவை அனைத்திற்கும் அடிப்படை பெண்கள் அவரனஸ்தர்கள் என்பதால்தான். ‘சதி’ வழக்கம் ஒழிந்தபின் விதவையான பெண்களை மொட்டையடிப்பதே பார்க்க அழகாகத் தெரியக் கூடாது என்பதற்காகத்தான். இளம் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வதற்குக் காரணமும் “ருது” ஆன பின் திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் தவறிழைத்து விடுவார்கள் என்பதால்தான். அதனால் சிறுமிகளுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் திருமணம் செய்வதென்பது இந்து மதத்தில் ஒரு கட்டாயக்கடமையாக விதிக்கப்பட்டது. இதன் விளைவு முதிய கணவர்கள் இறந்த பின் விதவையான பெண்கள் கூட்டம் இந்த மதத்தில் அதிகம். சிறுமிகள் மட்டுமல்ல, பிறந்த குழந்தைக்குக் கூட திருமணம் செய்து வைக்கும் கொடுமைகள் கூட இந்த ஸநாதன மதத்தில் நடந்தன.
இந்து மதம் பெண்களுக்கு இழைத்த ‘சதி’க்கு அடுத்த பெருங்கொடுமை அவர்களுக்கு நடத்தி வைத்த “குழந்தைத் திருமணம்”. “குலம், நல்லொழுக்கம் இவைகளா லுயர்ந்தவனும், பெண்ணுக்குத் தக்க ரூபமுள்ளவனாயும், தன் ஜாதிக்குத் தக்க ஜாதியுள்ளவனாயிருக்கிற வரனுக்கு தனது பெண் எட்டு வயதுக்குட்பட்டிருந்தாலும் விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்” (அசல் மனு தர்மம், அத்தியாயம் 9, ஸ்லோகம் 88).
இந்த மனுவின் கட்டளைக்கேற்பவே இந்து மதத்தில் குழந்தைத் திருமணங்கள் நடந்தன. பெண்கள் பருவ வயதடைந்தால் தவறிழைத்து விடுவார்கள் என்பதன் அடிப்படையிலேயேதான் இந்தக் கட்டுப்பாட்டு! சிறு குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததால் ஏற்பட்ட மிக மோசமான விளைவு என்ன தெரியுமா? இளம் வயதிலேயே முதியவர்களை மணந்த குழந்தைகள் விதவையாக வாழ்நாள் முழுவதும் கொடுமைக்குள்ளானதுதான். 1921இல் ஆங்கிலேய அரசாங்கம் எடுத்த ஒரு கணக்கின்படி விதவையான பெண் குழந்தைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் அறிக்கை வெளியிட்டது.
குழந்தைத் திருமணங்கள் பிறந்த குழந்தைக்குக் கூட நடத்தப்பட்டன. அதை மணம் செய்து கொண்டவர் ஒரு சில நாட்களிலேயே மரணமடைந்த நிகழ்வுகளும் நடந்தன. அதனால் அந்தக் குழந்தை விதையாகிவிடும் கொடுமையும், அதனால் நிகழ்ந்தது வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தை விதவைக் கோலத்திலேயே வாழ்ந்து மடிய வேண்டிய கொடுமை! 1921இல் எடுக்கப்பட்ட அரசாங்கக் குறிப்பு நமக்கு இந்த பரிதாபத்தை உணர்த்துகிறது. விதவையான ஒரு வயதிற்கு உட்பட்டவர்கள் 612 பேர் (எவ்வளவு ஒரு கொடுமை!), ஒன்றிலிருந்து இரண்டு வயது விதவையான குழந்தைகள் எண்ணிக்கை 498, இரண்டு வயது முதல் மூன்று வயது விதவைக் குழந்தைகள் 1280, மூன்றிலிருந்து நான்கு வயது விதவைக் குழந்தைகள் 2863, நான்கு முதல் அய்ந்து வயது வரை விதவைக் குழந்தைகள் 6758, அய்ந்தில் இருந்து பத்து வயது வரை விதவைக் குழந்தைகள் 12016. குழந்தைத் திருமணங்களும் அதன் விளைவாக உண்டான விதவைத் தன்மையும் குழந்தைகளை எவ்வளவு பாதித்திருக்கும்? (சான்று: “எனது இந்தியா” – எஸ்.ராமகிருஷ்ணன்.)
குழந்தைத் திருமணங்கள்தான் ஸநாதனத்தின் வாழ்வியல் விதி. சூத்திரச்சியான பெண்ணின் சங்கடங்களையோ, சமூகப் புறக்கணிப்புகளைப் பற்றியோ உயர்குடி என்று தங்களை எண்ணிக்கொண்டிருக்கும் பார்ப்பனர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. அவளுடைய பெண்மை(?) பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களை அவர்கள் எந்த காலத்திலும் இரத்தமும், சதையுமான உயிருள்ள ஒரு மனிதப் பிறவியாக நினைத்ததேயில்லை. போதாக்குறைக்கு மனுதர்மம் வேறு வழிகாட்டுகிறது. “முப்பது வயதுடையவர், அழகான பன்னிரெண்டு வயதுள்ளப் பெண்ணையும், இருபத்திநாலு வயதுக்காரர், எட்டு வயதுப் பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளலாம்”. (அசல் மனு தர்ம சாஸ்திரம் அத்தியாயம் 9, ஸ்லோகம் 94).
இது மட்டுமல்ல, பெண் ‘ருது’ ஆன பின்னும் திருமணம் செய்து வைக்காத தந்தைக்கு என்ன தண்டனை?
அசல் மனு தர்ம சாஸ்திரப்படி பெண்களுக்குப் பொதுவான பெயர் ‘கிருஹினி’. “கிரஹம்” என்றால் வீடு. வீடே அவள் உலகம் என்பதை நிலை நாட்டத்தான் அந்த பெயர். அவளுக்கு திருமணமாகி புக்ககம் போனால் அதுவே அவள் வீடு. திருமணத்தில் அவளைக் ‘கன்னிகாதானம்’ என்ற பெயரில் ‘புருஷனு’க்குத் ‘தாரை’ வார்த்துக் கொடுப்பதோடு தந்தையின் கடமை முடிகிறது. ‘கன்னிகை’ என்றால் எட்டு வயது அடைந்த பெண்கள் என்று அர்த்தம். அந்தக் ‘கன்னி’யை தானம் செய்வதால்தான் அது ‘கன்னிகாதானம்’ ஆனது. அப்பொழுது சொல்லும் மந்திரம்தான் ‘அஷ்ட வருஷா பலேத் கன்யா…’ எட்டு வயதை அவள் தாண்டி விட்டாலே ‘கன்னி’ப் பருவத்தை அவள் கடந்து விட்டவள். அதன் பிறகு அவளுக்கு செய்வது கல்யாணம் அல்ல, ஏனென்றால் அவள் ‘கன்னி’யல்ல! அதனால் எட்டு வயதிற்குள்ளே அவளை கன்னிகாதானம் (கல்யாணம்) செய்து கொடுத்து விட வேண்டும் என்பதே மனுவின் உத்தரவு. குழந்தைத் திருமணத்திற்கான அடிப்படைக் காரணம் எங்கே உதயமாகியிருக்கிறது?
எட்டு வயது சிறுமிக்கு வயதுக்கு வருவதற்கு முன் கன்னிகாதானம் செய்யாவிட்டால் அந்தப் பெண்ணின் அப்பாவிற்கு மகா கேவலமான, அசிங்கமான, ஆபாசமான தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனுஸ்மிருதி கூறுகிறது. “பாணிக்கிரஹாப நிகா மந்திராஹா கன்யா ஸ்வே பிரதிகஷதஹா, நகன்யாஸீ…” என்று அந்த ஸ்லோகம் சொல்கிறது. ‘ருது’ ஆன பெண்ணை திருமணம் செய்து வைக்காத தந்தைக்கு அறிவுரை கூறுவதற்குப் பதிலாக, மனுஸ்மிருதி தண்டனை வழங்குகிறது. “மாஸி, மாஸி, ரஜஸ்தஸ்யஹா, பிதா பிபதி கோனிதம்” என்று தண்டனை. அந்தத் தந்தைக்குக் கொடுக்க வேண்டுமாம் வார்த்தைகளாலோ, எழுத்துகளாலோ வடிக்க முடியாத ஆபாசமும், அருவருப்பும் கூடிய மந்திரங்கள் அவை. (அதன் தமிழக்கம் கொடுக்கவில்லை. அது ஆபாசத்தின் சிகரம் (மன்னிக்கவும்). பெண்களை அவ்வளவு கேவலப்படுத்தி, மந்திரங்களைத் திணித்து குழந்தைத் திருமணங்களை கட்டாயமாக்கி, சமூகத்தில் ஒரு சாதாரண நிகழ்வாக்கி செய்ய வைத்தது இந்து மதம் என்ற ஸநாதன மதம். (சான்று: இந்து மதம் எங்கே போகிறது? – அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்).
