‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

- Advertisement -

 திராவிடர் கழகம் – ஒரு காவல் நிலையம் போல; ஒரு தீயணைப்பு நிலையம் போல; அறிவைச் சொல்லிக் கொடுக்கிற பள்ளிக்கூடம் போல!

 எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவுத் தேர்வை, திராவிடர் கழகமும், தி.மு.க.வும் 

21 ஆண்டுகள் எதிர்த்துப் போராடினோம், வெற்றி பெற்றோம்!

அதுபோல நீட் தேர்வும் ஒழிக்கப்படும் –
எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெறுவோம்!

சிவகங்கை, அக்.14 திராவிடர் கழகம்,  ஒரு காவல் நிலையம் போல; ஒரு தீயணைப்பு நிலையம் போல; அறிவைச் சொல்லிக் கொடுக்கிற பள்ளிக்கூடம் போல! எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்த நுழைவுத் தேர்வை, திராவிடர் கழகமும், தி.மு.க.வும் 21 ஆண்டுகள் எதிர்த்துப் போராடினோம். அதற்குப் பிறகு வெற்றி பெற்றோம். அதுபோல, நீட் தேர்வும் ஒழிக்கப்படும் – எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெறுவோம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

Contents

சிவகங்கை: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

்சிவகங்கை மாவட்டக் கழகம் சார்பில், கடந்த 22.8.2026 அன்று மாலை 6 மணிக்கு, சண்முகராஜா கலையரங்கத்தில் சுயமரியாதைச் சுடரொளிகளான சிவகங்கை இரா.சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற, ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

13.10.2026 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:

வட மாநில மக்கள் இப்பொழுதுதான் நீட் தேர்வு ஆபத்து உள்படப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்!

5000 ஆண்டுகள் வரலாற்றில், 100 ஆண்டு கள் கூட இல்லை, நம்முடைய பிள்ளைகள் இப்போதுதான் முன்னேறி இருக்கிறார்கள். இந்தியாவில், தமிழ்நாடு மாதிரி எல்லா மாநிலங்க ளிலும் இல்லை. தென்னாடு ஓரளவுக்கு முன்னேறி வந்திருக்கிறது. வடநாட்டில ஒன்றுமே கிடையாது. அவர்களுக்குப் புரிந்துகொள்கிற சக்தியே கிடையாது. இப்பொழுதுதான் நீட் தேர்வு ஆபத்து உள்படப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதில் நமக்குப் பங்கு வந்த உடனே, இந்தப்  பங்கைப் பறிப்பதற்காக நண்பர்களே, பொருளாதார அடிப்படையில் 10 சதவீதம் என்று கொண்டு வந்தார்கள்.

உயர்ஜாதிக்காரர்கள் 10 சதவீதம் கிடையாது!

அது எப்படி?  அதாவது ஏழைகள்; ஏழைகள் என்றால், எல்லா ஜாதி ஏழைகளுக்கும் தானே கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, உயர் ஜாதி ஏழைகளுக்கு; அது என்ன ஏழைகளில், உயர் ஜாதி ஏழைகளுக்கு? அப்படியென்றால், யார் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டாமா? நம் ஆட்களுக்குப் புரியவில்லையே! நம்ம ஆட்களுக்குப் புரியாமல் தலையாட்டுகிறார்கள். முதலில், பார்ப்பனர்கள் – உயர்ஜாதிக்காரர்கள் 10 சதவீதம் கிடையாது; இங்கே 3 சதவீதம் – அதைத் தாண்டினால், இன்னொரு 5 சதவீதம்தான். ஏனென்றால், இந்த நாட்டில் பெரும்பாலான ஜாதி அடிப்படையில் எல்லோரும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். ஆகவே, இவர்களில், உயர் ஜாதி என்பவர்களில், ஒரு சதவீதம், இரண்டு சதவீதம் பார்ப்பனரல்லாதவர்களாக இருப்பார்கள்.  இதை எல்லாம் பற்றி EWS சட்டத்தில் விளக்கவில்லை.

ஒரே ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லி முடிக்கி றேன்,  அந்த ஆபத்து என்ன? உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு ஏன் கூடாது? என்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில், சமூக நீதி. மு.க.ஸ்டாலின் அவர்கள், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா அன்று, முதலமைச்சராக இருக்கிற போது உறுதிமொழி எடுக்க வைத்தார். செப்டம்பர் 17 ஆம் தேதியன்று, எடுக்கப்படுகின்ற சமூகநீதி நாள் உறுதிமொழியில், பெரியாருடைய வாசகத்தை இணைத்தார்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’,
‘‘எல்லாருக்கும் எல்லாம்!’’

சமூக நீதி என்றால், என்ன? சமூக நீதி வேண்டும் என்று பேசுகிறோம். சமூகநீதிபற்றி, அதுகுறித்துப் பெரிய ஆராய்ச்சி செய்யவேண்டாம். சமூக நீதிக்கு எளிமையான உதாரணம், விளக்கம் சொன்னார் பெரியார். ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘எல்லாருக்கும் எல்லாம்’’ இதுதான்.  இதற்காக சண்டையே இல்லை. விமானத்தில் பயணம் போகிறவர்கள் யாராவது, இடத்திற்காக  குஸ்தி போடுகிறார்களா? ரயில் பயணத்தின்போது ரிசர்வ் கம்பார்ட்மெண்ட்டில் ஜன்னல் வழியாக ஏறி குதிப்பது போன்று உண்டா?  இல்லையே, ஏன்?  எல்லோருக்கும் இடம் இருக்கிறது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சீக்கிரமாக செல்கிறவர்களுக்கும், தாமதமாகச் செல்கிற வர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் இடம் கிடைக்கும்.  அதே மாதிரிதான் நண்பர்களே, இந்த இட ஒதுக்கீடு. பொருளாதார அடிப்படை என்றால் என்ன? நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அதில் எவ்வளவு அநியாயம்? மக்களுக்குத் தெரியாது, படித்தவர்களுக்கே தெரியாது.

கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில்
காந்தியார் பெயரை ஒழித்துவிட்டார்கள்!

10 சதவிகித இட ஒதுக்கீடு – அதில் எவ்வளவு தெரியுங்களா? நாள் ஒன்றுக்கு 2,500 ரூபாய் சம்பாதிக்கிறவர் – இந்தச் சட்டப்படி, ஒன்றிய அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ். அரசாங்கம், பிஜேபி அரசாங்கத்தினுடைய சட்டப்படி ஏழை. அதாவது, உயர்ஜாதி ஏழை! எவ்வளவு சம்பாதிக்கிறவர், ஒரு நாளைக்கு 2,500 ரூபாய். நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, Below the Poverty Line என்ற ஒன்று இருக்கிறது. வறுமைக் கோட்டிற்குக் கீழே! கிராமப்புற வேலைவாய்ப்பு என்பதில், காந்தியார் பெயரை ஒழித்துவிட்டார்கள். அதற்குப் பதிலாக ராம்ஜி உள்ளே நுழைந்துவிட்டார்.

நாள் ஒன்றுக்கு கிராமப்புறத்தில் உள்ளவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்றால், Below the Poverty Line  – வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கக் கூடியவர்கள் சம்பாதிப்பது எவ்வளவு என்று சொன்னால், நாள் ஒன்றுக்கு 27 ரூபாய் ஒருவர் சம்பாதித்தால், அவர்தான் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர். வறுமைக் கோடு இதுதான். பூமத்திய ரேகை மாதிரி எங்கே இருக்கிறது அந்தக் கோடு என்று தேடக்கூடாது.

நகர்ப்புறத்தில் இருக்கிற ஏழை யார்? என்று சொன்னால், 33 ரூபாய் ஒரு நாளைக்குச் சம்பாதித்தால், அவர் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறவர் –  Below the Poverty Line.

ஒன்றிய பா.ஜ.க. அரசு –
உயர் ஜாதிக்காரர்களுக்குக் கொடுத்திருக்கிற சலுகை!

ஆனால், இப்பொழுது மோடி அரசு, உயர் ஜாதிக்கா ரர்களுக்குக் கொடுத்திருக்கிற சலுகை என்னவென்றால், 2,500 ரூபாய் ஒரு நாளைக்கு சம்பாதித்தால், ஏழை. இது என்னய்யா கொடுமை? நம்முடைய வரிப்பணம், நம்முடைய உழைப்பு – நம்முடைய மக்களுக்குத் தெளிவு வர வேண்டாமா? அறிவு வர வேண்டாமா? எவ்வளவு அக்கிரமம் இது.  3 சதவீதத்திற்குரிய இட ஒதுக்கீட்டைக் கொடுங்கள்; உயர் ஜாதிக்காரர்களுக்குக் கொடுக்காதீங்க, அதைக் கடலில் தூக்கிப் போடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.

உயர் ஜாதிக்காரர்கள் எத்தனை சதவீதம் இருக்கி றார்களோ, அந்த சதவீததத்தைக் கொடுங்கள். உத்தரப் பிரதேச மாநிலம் ஒன்றில்தான்  பார்ப்பனர்கள் 12 சத விகிதம் இருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலேயும் அந்த அளவிற்கு இல்லை.  தென்னாட்டை எடுத்துக் கொண்டால், முன்பு 3 சதவிகிதம்; இன்றைக்கு 5 சதிவிகிதமாக இருக்கலாம்.  ஆகவே, நீங்கள் அதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  மிகத் தெளிவாக இந்த மோசடி இருக்கிறது  – உயர்ஜாதியினருக்கு பொரு ளாதார ரீதியாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு கூடாது என்று நாங்கள் சொல்கிறோம். அதனால்,  யாருடைய பங்கு குறைகிறது? நம்முடைய பங்கை எடுத்துக் கொடுக்கிறார்கள்.

‘‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட
பச்சை மோசடி?’’

ஆகவேதான், இந்த எண்ணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். நீட் தேர்வின் மூலம் நம்முடைய பிள்ளைகளை டாக்டர்களாக விடாமல், தடுத்துப் பாழாக்குகிறார்கள்.  ஏழைகள் டாக்டருக்குப் படிக்க முடியாது. நீட் தேர்வை முதலில் உள்ளே விட்டுவிட்டு, அடுத்தது கியூட் தேர்வு,  நெக்ஸ்ட் தேர்வு என்று எல்லாமே தேர்வு, தேர்வு, தேர்வு என்று சொல்கிறார்கள். பள்ளிக்கூடத்துக்கே வேலை இல்லை. அரசியலமைப்புச் சட்டப்படி,  ‘‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட பச்சை மோசடி?’’ என்ற தலைப்பில் எழுதி இருக்கிறோம். இந்தப் புத்தகத்தை நீங்கள் அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி,
மாநில அரசுக்கு மட்டுமே உண்டு!

தேர்வு நடத்தக்கூடிய உரிமை ஒன்றிய அரசுக்குக் கிடையாது. அரசியலமைப்புச் சட்டம், ஏழாவது அட்டவணையில் இருப்பதை மிகத் தெளிவாக எடுத்து, விளக்கி இந்தப் புத்தகத்தில் சட்டப் பூர்வமாகச்  சொல்லியிருக்கிறோம். வழக்குரைஞர்கள் படிக்க வேண்டும், மிக முக்கியமாக. இல்லாத ஓர் அதிகாரம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக,  நீட் தேர்வுக் கமிட்டியை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் தேர்வை நடத்தக்கூடாது. தேர்வு நடத்துவதற்கு யாருக்கு உரிமை உண்டு என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, மாநில அரசுக்கு மட்டுமே உண்டு. அதிலும் மாநில அரசில் கூட, பல்கலைக் கழகங்களுக்கு மட்டும்தான் உண்டு.

ஆகவே, பல்கலைக்கழகம் சுதந்திரமானது; ஒவ்வொரு பல்கலைக் கழகத்துக்கும் ஒவ்வொரு சுதந்திரம் உண்டு. ‘அட்டானமி ஆப் தி யூனிவர்சிட்டி’ என்று சொல்லக்கூடியது. இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டார்கள்.

நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் கண்டுபிடித்தது, பெரியார் கண்ணாடி – பெரியார் நுண்ணாடி!

எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை, சும்மா ஏமாற்றுவதற்கு அதன்மீது பதவிப் பிரமாணம் எடுக்கிறார்களே தவிர, முழுக்க அது மோசடியாக இருக்கிறது. ஆகவேதான், இந்தப் புத்தகத்தின் தலைப்பு என்னவென்றால், ‘‘நீட் தேர்வு நிரூ பிக்கப்பட்ட பச்சை மோசடி?’’ இதை எல்லாம் எடுத்துச் சொல்கிறோம். எங்களை யார் எதிர்த்தாலும் ஒரே ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், முதன் முதலில் இந்த ஆபத்தைக் கண்டுபிடித்தது, பெரியார் கண்ணாடி – பெரியார் நுண்ணாடி. தமிழ்நாட்டிலிருந்துதான் முதல் குரல். நாங்கள் சொன்னவுடன், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்.

‘‘முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை;
பின்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை!’’

EWS-க்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை  இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் நடைமுறைக்குக் கொண்டு வரலாம். ஆனால், தமிழ்நாட்டில் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்; அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று  முதுகெலும்போடு சொன்ன ஓர் ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியாகும்.  இப்பொழுது தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சியும் இதுவரையில் அதைச் செய்யவில்லை. அதனால், பார்ப்பனர்கள் இந்த ஆட்சியை மிரட்டுகிறார்கள். ஆகவே, இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த ஆட்சி,  ‘‘முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை.’’

எனவேதான், Eternal Vigilance is the price for the Liberty  – ஒரு மனிதன் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றால், எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், எந்த நேரம் விலங்கு போடுவார்கள் என்று தெரியாது; தூங்கும்போது விலங்கு போட்டு விடுவார்களோ என்கிற அளவிற்கு நாட்டில் நடக்கின்ற நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எச்சரிக்கின்ற வேலைதான் எங்களுக்கு. ‘‘கருப்புச் சட்டைக்காரன், காவலுக்குக் கெட்டிக்காரன்.’’ மற்றபடி நாங்கள் ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்குப் போட்டியிடுவோமா? ஒரு கோடி ரூபாய் எங்களுக்குக் கொடுத்தால் கூட அந்தப் பதவிக்கு நாங்கள் போகமாட்டோம். ஏனென்றால், பதவிக்குப் போனவர்கள் படுகின்ற பாட்டை நாங்கள் நேரிடையாகப் பார்த்திருக்கின்றோம். ஆகவே, நாங்கள் எப்பொழுதும் ஒரே இடத்தில் நிற்பவர்கள்; நாங்கள் ஒரே நிலையில் இருக்கிறவர்கள். எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

எங்களுக்கு ஒரே வேலை, மக்களை எச்சரிக்க வேண்டும். தீயணைப்பு நிலையத்தாருக்கு என்ன வேலை? எங்கே தீப் பிடிக்குதோ, அங்கே சென்று அதை அணைக்க வேண்டும். காவல் துறையினருக்கு என்ன வேலை? எங்கே தவறு நடக்கிறதோ, அதைக் கண்டுபிடித்துத் தடுக்க வேண்டும். மருத்துவருக்கு என்ன வேலை? எங்கே நோய் இருக்கிறதோ, அதைத் தீர்க்க வேண்டும்.

திராவிடர் கழகம் அறிவைச் சொல்லிக் கொடுக்கிற ஒரு பள்ளிக்கூடம்!

எனவே, திராவிடர் கழகம் – ஒரு காவல் நிலையம் போல; திராவிடர் கழகம், ஒரு தீயணைப்பு நிலையம் போல; திராவிடர் கழகம், அறிவைச் சொல்லிக் கொடுக்கிற ஒரு பள்ளிக்கூடம் போல. எனவே, தோழர்களே, தாய்மார்களே, எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெறுவோம்!

பெரியார் சொன்னார், ‘‘என்னுடைய போராட்டங்கள் கட்டாயம் வெற்றி பெறும்; வேண்டுமானால் கொஞ்சம் தாமதிக்கலாம்’’ என்று.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா? மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து அதனைச் செய்தார். அதே மாதிரி குலக்கல்வி திட்ட ஒழிப்பா? நடந்தது. அதே மாதிரி நண்பர்களே, நீட் தேர்வும் ஒழிக்கப்படும். நீங்கள் நினைக்கலாம், இத்தனை ஆண்டுகள் ஆயிற்றே, அது முடியுமா? என்று.  எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்த நுழைவுத் தேர்வை, திராவிடர் கழகமும், தி.மு.க.வும் 21 ஆண்டுகள் எதிர்த்துப் பேராடினோம். அதற்குப் பிறகு வெற்றி பெற்றோம்.

மக்கள் எல்லா நேரத்திலேயும், மயக்கத்தில் இருக்க மாட்டார்கள்; அவர்களுடைய மயக்கம் தெளியும், தெளிய வைப்போம்!

ஆகவே, நாளைக்கும் நீட் தேர்வை ஒழிப்போம்; அதிலே வெற்றி பெறுவோம், அதேபோல, உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை விட மாட்டோம், தடுத்து நிறுத்துவோம். காரணம், எங்கள் கொள்கையில் நியாயம் இருக்கிறது. எங்களுடைய கோரிக்கையில், உண்மை இருக்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட முடியும்; மக்கள் எல்லா நேரத்திலேயும், மயக்கத்தில் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மயக்கம் தெளியும், தெளிய வைப்போம். அந்த மக்களை எங்கள் வயப்படுத்துவோம் என்று கூறி, சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், ஒத்துழைப்புக் கொடுத்த தோழர்களுக்கும் நன்றி!

மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும்போது சந்திப்போம், மீண்டும் சந்திப்போம்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *