கொடுங்கையூர், அக்.13- சென்னையில் வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதையொட்டி, மழைநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மழைநீர் தேங்கும் இடங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக பம்பிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
பழுதடைந்த மோட்டார்
அந்த வகையில், சென்னை மாநகராட்சி மண்டலம்-4, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு-34, கொடுங்கையூர் தென்றல் நகர் 3ஆம் தெருவில் மழைநீரை வெளியேற்றுவதற்காக சுமார் 20 அடி ஆழத்தில் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதில், தலா 25 குதிரைத் திறன் கொண்ட 2 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு மோட்டார் சமீபத்தில் பழுதடைந்தது.
இதை சரி செய்வதற்காக வேலூர் மாவட்டம், ஆற்காடு, பெரிய அஸ்தினாபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த அஸ்மத் பாஷா (38), மேற்கு தாம்பரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த நவீன்குமார் (34) ஆகிய தனியார் தொழில்நுட்ப பணியாளர்கள் நேற்று அழைத்து வரப்பட்டனர். இருவரும் காலை 10.30 மணி முதல் மோட்டாரை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 3 மணியளவில், நவீன்குமார் மோட்டாரை சரிசெய்வதற்காக 20 அடி ஆழ பள்ளத்துக்குள் இறங்கினார். அப்போது, விஷவாயு தாக்கியதில் அங்கேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அஸ்மத் பாஷா, அவரை காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கினார். அப்போதும் அவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார்.
மீட்புப் பணி
இதுகுறித்து உடன் பணியாற்றிய வர்கள் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாதவரம் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துவீரப்பன் தலைமை யிலான வீரர்கள் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்றனர். உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, இருவரையும் கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, மாலை 4.30 மணியளவில் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
