புதுடில்லி, அக்.12 பிரீமியம் தொகையை வாங்குவதில் காட்டும் வேகத்தை, அவசர காலத்தில் மக்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு வழங்குவதில் காட்டாமல் இழுத்தடிப்பு செய்யும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அதிரடி கடிவாளம் விதித்துள்ளது.
இந்தியாவில் வாகனக் காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு என எதுவாக இருந்த தாலும், பிரீமியம் தொகையை வாங்குவதில் காட்டும் வேகத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு தொகையைத் திருப்பித் தருவதில் காட்டுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
பாலிசி வாங்கும்போது ஆசைவார்த்தை கூறும் தனியார் நிறுவனங்கள், விண்ணப்பங்களில் மிகச் சிறியஎழுத்துக்களில் “விதிமுறைகளுக்கு உட்பட்டது” என்று அச்சிட்டு நுகர்வோரை சட்ட பொறியில் சிக்க வைக்கின்றன. அவசர காலத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கும்போது பல்வேறு காரணங்களைக் காட்டி இழப்பீடு திடீரென நிராகரிக்கப்படுகின்றன. இதனால், நடுத்தரக் குடும்பங்கள் கடன் வலையில் சிக்கித் தவிக்கின்றன. விபத்து ஏற்படும் போது நூறு விதிகளைச் சொல்லி, தேய்மானம் என்ற பெயரில் சொற்பத் தொகையை மட்டுமே வழங்கி வாடிக்கையாளர் களை ஏமாற்றுகின்றன. மற்றொரு புறம், பாலிசி தொகை பல ஆயிரம் கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் தேங்கிக் கிடக்கிறது.
கடந்தமார்ச் 31-ந்தேதிநிலவரப்படி ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்.அய்.சி.) ரூ.7 ஆயிரத்து 318 கோடியும், வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) ரூ.9 ஆயிரத்து 330 கோடி அளவில் உரிமை கோரப்படாமல் தேங்கி கிடக்கிறது. எளிய மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, ஒருபுறம் கிளைகளை மறுத்தும், மறுபுறம் உரிமை கோராத கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தும் இன்சூரன்ஸ் மற்றும் நிதி நிறுவனங்கள் கொழுத்து வருகின்றன.
இந்தநிலையில் காப்பீட்டு நிறுவனங்களின் ஏமாற்று வேலையை இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் அஜய் சேத் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், “வெறும் இழப்பீடு செட்டில்மெண்ட் விகிதத்தை மட்டும் காட்டி ஏமாற்றாமல், பாலிசிதாரர்களுக்குச் சேர வேண்டிய உண்மையான பணப்பலன்களை முழுமையாக வழங்குவதில் காப்பீட்டு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிளைகளை முடித்துவிட்டதாக காகிதத்தில் கணக்குக் காட்டுவது நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கலாம், ஆனால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற நியாயமான மற்றும் வெளிப்படையான பணப் பட்டுவாடா முக்கியம். தொழில் நுட்ப காரணங்களையும், சிறு விதிகளையும் காட்டி வாடிக்கையாளர்களின் நியாயமான பணப்பலன்களை நிராகரிப்பதோ அல்லது தொகையைக் குறைப்பதோ கூடாது” என்றார். மேலும் அவசர காலங்களில் மக்களுக்கு உரிமப் பணம் கிடைப்பதைக் கண்காணிக்க கடுமையான விதிகளைக் கொண்டு வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.
