புதுடில்லி, ஆக. 28- டில்லியில் 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு, இந்தியாவின் தலைமையில் செப்டம் பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மனிதநேயமே முதன்மை என்ற நோக்கத்தின் அடிப்படையில், மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை என்ற கருப்பொருளில் இம் மாநாடு நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் பிரே சில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் அய்க்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் முழு உறுப்பினர்களாக உள்ளன. மேலும், பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, துருக்கி, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் கூட்டமைப்பு நாடு களாக செயல்படுகின்றன.
ஏற்கனவே 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்தியா தலைமை வகித்துள்ள நிலையில், நடப்பாண்டிலும் இந்தியாவே தலைமை வகிக்கிறது. டில்லியில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் போர் மற்றும் அமைதி, புவிசார் அரசியல், உலகப் பொருளாதார ஆளுகை உள்ளிட்ட முக்கிய விஷ யங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வருகை தருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு 200-க்கும் குறைவான அதிகாரிகளுடன் இந்தியா வந்திருந்த அவர், இந்த முறை சுமார் 400 பேர் கொண்ட பெரிய குழுவுடன் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
