டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டில்லியில் காங்கிரஸ் போராட்டம் – பிரியங்கா குற்றச்சாட்டு: ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்; ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.போராட்டத்தின் போது காவல்துறையினர் தன்னை முறைகேடாக நடத்தினர் என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு.
* எஸ்.அய்.ஆர், திரும்பிப் போ (‘SIR Go Back’) – ரேவந்த் போராட்டம்: தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிரத் திருத்தத்தை (SIR) எதிர்த்து, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் “SIR Go Back” இயக்கத்தைத் தீவிரப்படுத்தினார். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
* கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அக்டோபர் 10 போராட்டம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 10 அன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த சி.ஜே.பி. அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
* எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம்: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் அக்டோபர் 8-அய் “கருப்பு நாள்” என அறிவித்துள்ளது; மம்தாவும் போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு.
* தலைமைத் தேர்தல் ஆணையர் சட்ட வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்கிறது: தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டது. இந்த விவகாரம் பெரிய அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பப்படுமா என்பதும் பரிசீலிக்கப்படுகிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தி.மு.க. ராகுல் காந்தியின் போராட்டத்திற்கு ஆதரவு; தமிழ்நாடு எஸ்.அய்.ஆர் நீக்கங்கள் குறித்து விமர்சனம்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான ராகுல் காந்தியின் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளை, தமிழ்நாட்டில் எஸ்.அய்.ஆர். நடவடிக்கையில் பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ராகுல் காந்தி மவுனம் காப்பது ஏன் என தி.மு.க. கேள்வி.
* 34% பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் சட்டப் போருக்கு தெலுங்கு தேசம் கட்சி தயார்: உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோர் (BC) சமூகத்திற்கு 34% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய ஆந்திர அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, தேவதத் காமத் உள்ளிட்ட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தப் பட்டுள்ளன.
* ஜி.எஸ்.டி. வருவாய் தொடர்ந்து சரிவு – அரசு மக்களைத் தவறாக வழிநடத்துகிறது: கனிமொழி கண்டனம்: தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வருவாய் தொடர்ந்து மூன்று மாதங்களாக சரிந்து வருவதாகவும், செப்டம்பரில் மட்டும் 5% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கனிமொழி கருணாநிதி குற்றச்சாட்டு. மாநிலத்திற்குள் நடைபெறும் வர்த்தகப் பரிவர்த்தனைகள் குறைவது, தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதார நிலை குறித்து கவலை அளிப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தி இந்து:
* அக்டோபர் 10 போராட்டத்திற்கு இளைஞர் அமைப்புகள் கூட்டாக அழைப்பு: AISA, CJP, AISF, SFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் அக்டோபர் 10 அன்று தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. “ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மக்கள் போராட்டம் இது; இளைஞர்கள் டில்லிக்கு வர வேண்டும்” என அய்சா தலைவர் நேஹா போரா வலியுறுத்தியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மம்தா டில்லி வருகை – இந்தியா கூட்டணி சந்திப்பு எதிர்பார்ப்பு: மம்தா டில்லி வருவதால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மற்றும் எஸ்.அய்.ஆர் குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இந்தியா கூட்டணி சந்திக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. குடியரசுத் தலைவர் செயலகத்தின் கோரிக்கையை ஏற்று, எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிக் குழுவில் 10 பேரை மட்டுமே இடம் பெறச் செய்ய கூட்டணி முடிவு செய்துள்ளது.
– குடந்தை கருணா
