அய்தராபாத், அக்.07 தெலங்கானாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் போது, இஸ்லாமியர்களின் பெயர் களைப் பட்டியலிலிருந்து நீக்கும் நோக்கில் முன் அச்சிடப்பட்ட ‘படிவம் 7’ விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டி ருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அண்மையில் கருநாடகாவில் நடைபெற்றதைப் போன்றே இங்கும் இஸ்லாமியர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் முயற்சிகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவரின் பெயருக்கு ஆட்சே பனை தெரிவிக்கவோ அல்லது பெயரை நீக்கக் கோரவோ ‘படிவம் 7’ பயன்படுத்தப்படுகிறது. அய்தராபாத்தில் உள்ள முக்கிய சட்டமன்றத் தொகுதி களில் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முஷீராபாத் தொகுதி: கடந்த அக்டோபர் 1 அன்று, பாஜகவின் வாக்குச் சாவடி அளவிலான முகவர் (BLA) எஸ். பாலச்சந்தர் 30 விண்ணப் பங்களைச் சமர்ப்பித்தார். அதில் 38 முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட இரு வீடுகளை இலக்கு வைத்து, 29 முஸ்லிம் பெயர்களுக்கும் ஒரு இந்து பெயருக்கும் எதிராக நீக்கல் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே முகவரியில் இருந்த மற்ற 7 இந்து வாக்காளர்களின் பெயர்கள் குறிவைக்கப்படவில்லை.
கோஷமஹால் தொகுதி: இங்குச் சமர்ப்பிக்கப்பட்ட 15 விண்ணப்பங்களை ஆய்வு செய்த வாக்குச் சாவடி அதி காரி, ஆட்சேபனையாளரின் கையொப்பம் இல்லாததால் அவற்றை உடனடியாக நிராகரித்தார். பகதூர்புரா தொகுதி யிலும் இதுபோன்று ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப் பங்களில் ஆட்சேபனை தெரிவிப்பவரின் விவரங்கள் கையால் எழுதப்பட்டிருந்த போதிலும், நீக்கப்பட வேண்டிய வாக்காளர்களின் பெயர், அடையாள அட்டை எண் மற்றும் முகவரிகள் கணினியில் முன் அச்சிடப்பட்டிருந்தன.
இதுகுறித்து முஷீராபாத் பாஜக முகவர் பாலச்சந்தரிடம் கேட்டபோது, “எனது கட்சித் தலைவர்கள் கொடுத்த இந்த விண்ணப்பங்கள், தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி களுக்கும் விநியோகிக்கப்பட்டன” எனக் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணைய வழிகாட்டுதல் களின்படி ஒரு முகவர் ஒரு நாளைக்கு 10 விண்ணப்பங்கள் மட்டுமே தர முடியும் என்பதால், முஷீராபாத் தேர்தல் பதிவு அதிகாரி (ERO) கள ஆய்வு மேற்கொண்டார். அதில், குறிவைக்கப்பட்ட 30 வாக்காளர்களும் அதே முகவரியில் வசிப்பது உறுதி செய்யப்பட்டு, அனைத்து விண்ணப் பங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 5 அன்று தெலங்கானா முதன்மை தேர்தல் அதிகாரி (CEO) சுதர்சன் ரெட்டி, போலி படிவம் 7 சமர்ப்பிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். (மக்கள் பிரதிநிதித் துவச் சட்டம் 1950, பிரிவு 31-இன் கீழ் இது ஓராண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும்). இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அய்தராபாத் காவல்துறை ஆணை யரிடம் புகார் அளித்துள்ளதுடன், தடய வியல் விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
தினசரி ஆட்சேபனைகளின் அறிக்கையான ‘படிவம் 10’ தேர்தல் ஆணைய இணையதளத்தில் முழுமை யாக பதிவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் முன்வைக்கின்றனர். மாநிலம் முழுவதும் 29,000-க்கும் மேற்பட்ட படிவம் 7 ஆட்சேபனைகள் வந்துள்ள நிலையில், 15 சதவீதத்திற்கும் குறைவான விவரங்களே இணையதளத்தில் உள்ளன. பணிச்சுமையால் தாமதம் ஏற்படுவதாக கூறினாலும், டில்லி மற்றும் கருநாடகாவைப் போல உடனுக்குடன் தகவல்களை வெளியிட்டால்தான் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என வலியுறுத்தப்படுகிறது.
ஒரு வாக்காளரின் பெயருக்கு எதிராக படிவம் 7 தாக்கல் செய்யப்பட்டால், அவரது பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு SMS அனுப்பப்படும் என்றும், நேரடி விசாரணைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார். உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சே பனைகள் மீதான பரிசீலனைகள் நவம்பர் 5 வரை தொடர்ந்து நடைபெறும்.
