20ஆம் ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி-நகோயா மாகாணங்களில் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 4 வரை நடைபெற்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியை ஜப்பான் நடத்துவது இது 3ஆம் முறையாகும். இதற்கு முன்னர் 1958இல் டோக்கியோவிலும், 1994இல் ஹிரோஷிமாவிலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஜப்பான் நடத்தியிருந்தது.
- பரணிகாவுக்கு போல் வால்ட்டில் வெண்கலம்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
- 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற சீமா குமாரி
- தங்கம் வென்றது இந்திய மகளிர் கபடி அணி
- ஸ்குவாஷில் அபய் சிங் வெள்ளிப் பதக்கம்
- ஹரிதாவுக்கு வெண்கலம்
- அன்சி சோஜனுக்கு வெள்ளிப் பதக்கம்
- வெண்கலம் வென்ற பாருல் சவுத்ரி
- பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு
- 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்ற வித்யா ராம்ராஜ்
தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் இரண்டும் பாலோமா மிசுஹோ மைதானத்தில் கோலாகலமாக நடத்தன. இந்தியாவில் இருந்து இம்முறை 267 வீரர்கள், 234 வீராங்கனைகள் என 501 பேர் ஆசிய விளையாட்டில் பங்கேற்றனர். இந்திய அணி 36 வகையிலான விளையாட்டுகளில் கலந்துகொண்டது. ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டின் 21 வீரர்கள், 14 வீராங்கனைகள் என 35 பேர் இடம் பெற்றனர்.

பரணிகாவுக்கு போல் வால்ட்டில் வெண்கலம்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
ஜப்பானில் நடைபெறும் நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் போல் வால்ட்டில் வெண்கல பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீராங்கனை பரணிகா இளங்கோவன். இதன் மூலம் போல் வால்ட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
தடகள விளையாட்டில் போல் வால்ட் விளையாட்டில் மகளிருக்கான இறுதிச் சுற்றில் இந்தியா சார்பில் சிந்துசிறீ மற்றும் பரணிகா இளங்கோவன் பங்கேற்றனர்.
இதில் 4.15 மீட்டர் உயரம் தாண்டிய பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்றார். கஜகஸ்தானின் பிலினா இவனோவாவும் 4.15 மீட்டர் உயரம் தாண்டி இருந்தார். இதனால் இருவரும் பதக்கத்தை பகிர்ந்து கொண்டனர். இதில் தங்கத்தை ஜப்பான் வீராங்கனையும், வெள்ளியை சீன வீராங்கனையும் வென்றனர்.

10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற சீமா குமாரி
மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் சீமா குமாரி பந்தய தூரத்தை 32:50.05 விநாடிகளில் கடந்து 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
பக்ரைனின் யாவி வின்ஃபிரெட் (32:39.18) முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், ஜப்பானின் தனகா நோஸோமி (32:41.54) 2ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
கடைசியாக 2010ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ப்ரீஜா சிறீதரன் தங்கப் பதக்கமும், கவிதா ரவுத் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தனர்.
தங்கம் வென்றது இந்திய மகளிர் கபடி அணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி தங்கப்பதக்கம் வென்றது.
ஜப்பானின் டோகாய் நகரில் உள்ள சிட்டிசன் ஜிம்னாசியத்தில் நடைபெற்ற கபடி இறுதிப் போட்டியில் ஈரான் அணியும் இந்திய அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி 37-34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2010 முதல் மகளிர் கபடிப் போட்டி இடம்பெற்று வருகிறது. 2018ஆம் ஆண்டு போட்டிகளில் ஈரானுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டம் இடம் பிடித்தது. அதன் பிறகு அனைத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கத்தையே வென்றுள்ளது குறிப்பிடதக்கது.

ஸ்குவாஷில் அபய் சிங் வெள்ளிப் பதக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் மகளிர் பிரிவில் அனஹத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மகளிர் பிரிவு இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங்கும், மலேசிய வீராங்கனை சிவசங்கரி சுப்பிரமணியமும் மோதினர்.
இதில் அனஹத் சிங் 4-11, 4-11, 7-11 என்ற கணக்கில் சிவசங்கரி சுப்பிரமணியத்திடம் தோல்வி கண்டு 2ஆம் இடம் பெற்றதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். முதலிடம் பிடித்த சிவசங்கரிக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
ஹரிதாவுக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹரிதா பத்ரா வெண்கலம் வென்று அசத்தினார். நகோயாவில் நேற்று (5.10.2026) நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தய இறுதிச் சுற்றில் ஹரிதா பத்ரா 23.20 விநாடிகளில் ஓடிவந்து 3-வது இடம் பிடித்து வெண்கலத்தைக் கைப்பற்றினார்.
அன்சி சோஜனுக்கு வெள்ளிப் பதக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்சி சோஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் 6.53 மீட்டர் நீளம் தாண்டி 2ஆவது இடம் பிடித்தார்.

வெண்கலம் வென்ற பாருல் சவுத்ரி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 9:08.67 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலம் வென்றார். பஹ்ரைன் வீராங்கனை வின்பிரெட் யாவி (9:04.36 விநாடிககள்) தங்கமும், கஜகஸ்தானின் நோரா ஜெருடோ தனுஷ் (9:06.82 விநாடிகள்) வெள்ளியும் வென்றனர்.
பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு
மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 198 கிலோ எடையை தூக்கி (ஸ்நாட்ச் 87 கிலோ + கிளீன் அன்ட் ஜெர்க் 111 கிலோ) 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மீராபாய் சானு ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். இதற்கு அவர், 12 ஆண்டுகள் காத்திருந்துள்ளார். மேலும் 1998ஆம் ஆண்டுக்கு பிறகு ஆசிய விளையாட்டு பளுதூக்குதலில் தற்போதுதான் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. தாய்லாந்தில் அப்போது நடைபெற்ற ஆசிய விளையாட்டில் கர்ணம் மல்லேஷ்வரி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
மீராபாய் சானு கூறும்போது, “ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவானது மகிழ்வாக உள்ளது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து கடந்த 12 ஆண்டுகளாக இந்த பதக்கத்தை வெல்வதற்காக போராடி உள்ளேன். இந்த பதக்கத்துடன் எனது வாழ்க்கை இப்போது முழுமை பெற்றுவிட்டது. ஆசிய விளையாட்டு கனவு போன்று இருக்கிறது” என்றார்.
400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்ற வித்யா ராம்ராஜ்
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 54.75 விநாடிகளில் கடந்து 3ஆம் இடம் பிடித்து தேசிய சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். கடந்த 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பி.டி. உஷா 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலக்கை 55.42 விநாடிகளில் எட்டியிருந்தார். இதுவே இந்திய வீராங்கனை ஒருவரின் சிறந்த செயல் திறனாக இருந்தது. இதை 42 ஆண்டுகளுக்கு பின்னர் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் வித்யா ராம்ராஜ். 28 வயதான வித்யா ராம்ராஜ் தமிழ்நாட்டின் கோவை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் வித்யா ராம்ராஜுக்கு இது 2ஆம் பதக்கமாக அமைந்தது. அவர், 4×400 மீட்டர் கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
