பக்தியால் பாழாகும் உடல்நலம்

4 Min Read

மகளிர் அரங்கம்

அன்பே சிவம், இறைவன் அன்பே உருவானவன் என்று சொல்லக்கூடிய இந்த நாட்டில் கடவுள் பெயரால் நம்மை வெகுவாகப் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். சிறு வயதில் ஏதாவது தவறு செய்தால், ‘சாமி கண்ணைக் குத்திவிடும்’ என்று மிரட்டுவது பலரது வீட்டில் நடப்பதுதான். பல சந்தர்ப்பங்களில் இந்தப் பயமே வெறுப்பாக மாறிவிடுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.

நாங்கள் போபாலில் இருந்தபோது அங்கே பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே காலனியில் ஒன்றாக வசித்தோம். எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த பீகாரைச் சேர்ந்த ராம்சிங், மணமாகாதவர். பொறியாளரான அவருக்கு 35 வயது இருக்கலாம். மிகவும் நல்ல மனிதர், கெட்டிக்காரர் என்று என் கணவர் சொல்வார்.

ஆனால், ராம்சிங்கைப் பற்றி மற்றவர்களுக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை. எதிலுமே நம்பிக்கை இல்லாமல் மற்றவர்களின் செயல்பாடுகளைக் குறைசொல்லிக்கொண்டே இருப்பார். எதைச் சொன்னாலும் எடக்கு மடக்காகக் கேள்வி கேட்பார். யாராவது ஒருவர் விழா நாளில் இனிப்பு தந்தால், “ஏன் விழா நாளில்தான் பாயசம் வைக்கணுமா?” என்பார். கோயிலுக்குப் போகலாம் என்றால், “ஏன் அந்தக் கருவறைக்குள் மட்டும்தான் கடவுள் இருக்கிறாரா?’ என்று கேட்பார். ராம்சிங் இப்படிப் பேசியதால் பலரும் அவரை விட்டு விலகியே இருந்தார்கள்.

வேலையில் சிறந்து விளங்கும் இவர், ஏன் இப்படி மற்றவர்களிடம் வாங்கிக்கட்டிக் கொள்கிறார் என எனக்கு ஆதங்கமாக இருக்கும். ஒருநாள் அவரோடு மனம்விட்டுப் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. ராம்சிங், கிராமத்துவாசி. ஆச்சாரம் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ராம்சிங்கின் அம்மா சிறு வயதில் இருந்தே தீவிரமான நம்பிக்கைகளைச் சொல்லிச் சொல்லி, குழந்தைகளை வளர்த்திருக்கிறார். இன்று அவரது மனநிலையை மருத்துவர்கள் பரிசோதித்து இருந்தால் அவர் ‘ஓசிஎன்’ (obsessive Compulsive Neurosis) எனப்படும் வியாதியின் விளிம்பில் இருக்கிறவர் எனக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து இருப்பார்கள். ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட எண்ணங்களோ செயல்பாடுகளோ சாத்தியம் இல்லை.

அம்மாவை வெறுத்த மகன்

கடுமையான குளிரில்கூட ராம்சிங்கின் அம்மா அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, குளித்துவிடுவார். அதன் பிறகு குழந்தைகள்கூடத் தன்னைத் தொடக் கூடாது என்பாராம். மீறித் தொட்டுவிட்டால் மீண்டும் குளிப்பாராம். இந்தப் பழக்கம் நம் ஊரிலும் பல வீடுகளில், ‘மடி, ஆச்சாரம்’ என்கிற பெயரில் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய பாட்டி, பெரிய பாட்டி எல்லாம்கூட லேசில் எங்களைக் கிட்டத்தில் சேர்க்க மாட்டார்கள், தொடவும் மாட்டார்கள். இப்படித்தான் ராம்சிங்கின் அம்மாவும் தீவிரமான ஆச்சாரத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்.

சோப் யாரோ எங்கோ செய்தது என்பதால் அதைப் போட்டுத் துணி துவைக்க மாட்டாராம். தண்ணீரில் வெறுமனே அலசி, காயப்போட்டுதான் உடுத்துவாராம். “எங்க அம்மாவைக் கட்டிக்கொண்டு கொஞ்ச வேண்டும் எனத் தோன்றும். பிறரைப் போல் அம்மா மடியில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.

ஆனால், இவை எதுவும் என் சிறு வயதில் நடக்கவில்லை. ஏதாவது கேட்டால், இன்று இந்த விரதம், சாமிக்குப் பூஜை செய்ய வேண்டும். நீ தொட்டால் இது எல்லாமே ஆச்சாரம் கெட்டு விழுப்பு ஆகிவிடும் என்று பயமுறுத்துவார்” என்று சொன்ன ராம்சிங், சிறு வயதில் அம்மாவின் அரவணைப்பு கிடைக்காமல் ஏங்கியிருக்கின்றார், வாடியிருக்கிறார். ஒருகட்டத்தில் ராம்சிங்குக்கு அம்மாவைப் பிடிக்காமலே போய்விட்டது. ”என் அம்மா கிட்டே வந்தாலே நாற்றம் அடிக்கும். சோப் போட்டு சுத்தமாகத் துவைக்காததால் அம்மாவின் புடவையெல்லாம் நாறும். அவங்களைப் பார்த்தாலே வெறுப்பாகிவிட்டது” என்றார் ராம்சிங்.

அவருடைய அம்மாவுக்கு நாற்பது வயதானபோது புடவையெல்லாம் சீலைப்பேன் வந்துவிட்டது. சீலைப்பேன் என்றால் தலைமுடியில் இருக்கும் பேன் உடையின் அழுக்கைத் தின்ன புடவைக்கு வந்துவிடுமாம். கேட்டாலே என்னவோ செய்கிறது அல்லவா? ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறேன் பேர்வழி என்று அவர் அவ்வளவு அசுத்தமாக இருந்திருக்கிறார். ஒருசமயம் அவர் நோய்வாய்பட்டபோது, ‘என்னை மருத்துவர்கள் யாரும் தொடக் கூடாது. பிறர் கையால் தண்ணீர் வாங்கி அருந்த மாட்டேன். மருந்துகள் எங்கே யார் செய்ததோ.. எனக்கு வேண்டாம்’ என்று அடாவடியாகப் பிடிவாதம் பிடித்திருக்கிறார்.

இந்த விவரங்களை வெளியிட்ட ராம்சிங், அடுத்துச் சொன்ன வார்த்தைகள் என்னை உலுக்கிவிட்டன. “எங்க அம்மா செத்துப்போயிட்டாங்க. அவரைத் தூக்கும்போது நாற்றம் தாங்கவில்லை. எல்லாரும் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு தூக்கினார்கள்.

அம்மா உடம்பில் புண் வந்து அதில் புழு வைத்துவிட்டது. அதை என் கண்ணாலே பார்த்த பிறகுதான் எனக்குக் கடவுள் மேல் இருந்த நம்பிக்கையும் மரியாதையும் சுத்தமாகப் போய்விட்டன. இதனாலேயே இன்றைக்கும் யாராவது கண்மூடித்தனமாகச் சில பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் எனக்குக் கோபம் வருகிறது.

படித்தும் சிந்திக்காமல் இருக்கிறார்களே என்று வெறுப்பாக இருக்கிறது. இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்” என்று சொல்லி மிகவும் வருந்தினார். எனக்கும் அப்போது சின்ன வயது என்பதால் அவர் கூறிய வார்த்தைகளின் ஆழத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது யோசித்தால் கடவுள் மீதுள்ள பயமே அந்தப் பெண்மணியை அப்படிச் செய்யத் தூண்டியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அதுதானே நிஜம்.

(எழுத்தாளர் சிவசங்கரி பகுத்தறிவாளரில்லை எனினும், பக்தியின் மூடத்தனத்தைத் தன் அனுபவத்தில் கண்டு இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.)

– எழுத்தாளர் சிவசங்கரி

நன்றி: ‘இந்து தமிழ் திசை’ – 14.6.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *