எழிலினி, லண்டன்
நாள்: 15.09.2026; இடம்: லண்டன் மாநகரம் சார்டு (Shard) கட்டடம் முன்பாக.
சார்டு இடம் கட்டடம் சார்ந்த (Shard) பகுதியில் எப்போதும் பரப்பரப்பாக இருக்கும். காலை வேளையில்இன்னும் அதிக வேகமாக அவ்விடம் இயங்கும். அருகில் இருக்கும் கிங்ஸ் (KINGS)பல்கலைக்கழகமும், மருத்துவமனையும் மருத்துவப் பயனாளர்களுக்கான அமைதி காக்க வேண்டிய இடமாகத் தன்னை வெளிப்படுத்தி நிற்கும்.
செப்டம்பர் திங்கள் பதினைந்தாம் நாள் அந்தத் தெரு வழக்கத்தை விடவும் கூடுதலான மக்கள் நடமாட்டத்தைக் கொண்டிருந்தது. பெரும்பாலானவர்கள் இந்தியர்களாகவும், ஈழத்தமிழர்களாகவும் இருந்தனர். ஏன் இவ்வளவு கூட்டம்? ஓ! அன்று மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தனது 24 ஆவது அகவையில் ஒரு துளி நீர் கூட அருந்தாமல், ஊனுருக்கி உயிரீகம் செய்தாரே தியாகதீபம் திலீபன், அவரை நினைவு கூருவதற்காகவே இத்தனை கூட்டம் என்று பார்த்தால் ஏமாற்றமே விடையாகக் கிடைத்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயைக் காணவே இவ்வளவு கூட்டம் என்றறிந்ததும் மனம் வலித்தது.
முதல்நாள் இரவே அங்கு வந்து தெருவில் தங்கியிருந்து, அடுத்த நாள் விஜய்யைக் காணத் தவம் இருந்தார்கள் தமிழ் இளையோர்கள் என்பதறிந்த போது, நமது தலைமுறைகள் தடம் புரண்டு போனதைக் கண்டு, உள்ளம் குமுறியது.
தமிழீழ மண் பல வீரமறவர்களைப் பெற்றெடுத்த மண்! தம் உயிரினும் மேலாகத் தாய்நாட்டை நேசித்த, உண்மையாகப் போரிட்டு வீரச்சாவடைந்த வீரத் தளபதிகளைப் பெற்றெடுத்த மண்ணின் தலைமுறைகள், தனது தொழிலுக்காகத் தளபதியாக நடித்த ஒரு நடிகரைப் பார்க்க ஆவலோடு கூடி நின்றதைப் பார்த்து வெட்கித் தலை குனிந்தேன்.
இன்று நாம் புலம் பெயர்ந்து வாழ்கின்றோம்.
எமது தாய்மண்ணை விட்டு இங்கு வந்து வாழ்கின்றோம். ஏன் இங்கு வந்தோம்? என்ன நிலையில் இங்கு வந்தோம்? விரும்பி வந்தோமா? சிறீலங்கா இனவாத அரசின் அடக்குமுறைக் கொடுமை களிலிருந்து தப்பியோடி வந்தோமா? இப்படியான பல்லாயிரக்கணக்கான கேள்விகளுக்கு விடை காணும் போது எங்கள் மனச்சான்று எம்மை யாரென்று எமக்குணர்த்தும்.
அப்படியான எந்தவிதமான சிந்தனையுமில்லாமல் இலண்டன் மாநகரில் விஜய் என்னும் நடிகரைப் பார்க்கத் தெருக்களில் கூடியதையும் பல் இன மக்களும் வாழும் இந்நாட்டில் அவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தது மட்டுமல்லாமல், மருத்துவமனைக்கு அருகில் நின்று கூச்சலிட்டதையும் என்னவென்று சொல்வது! பண்பாட்டில் தலைசிறந்தவன் தமிழன் என்று தலைநிமிர்ந்து சொல்லத் தகுதியற்றவர்களாக நடந்து கொண்ட அந்த இளந் தலைமுறையினரைப் பார்க்க இதயம் வலித்தது.
இலண்டன் காவல்துறையினர் அருகில் மருத் துவமனை இருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். கரூரில் கூடியது போன்றதொரு கூட்டம் அலை மோதியது. இதற்கு முன்பும் தமிழ்நாடு முதலமைச்சர்கள் வந்து போயுள்ளனர். இப்படியொரு அவலம் நடைபெறவில்லை. அப்படியென்றால் இம்மக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் என்பதற்காக விஜய்யை வரவேற்கக் கூடவில்லை. விஜய் என்னும் நடிகரைப் பார்க்கவே கூடினார்கள்.
தியாக தீபம் திலீபன் வீர மரணமடைந்த 39ஆம் ஆண்டு நினைவு நாளில் (26.09.2026) ஒருநாள் அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையானோரே கூடினார்கள். இந்த அவலத்தைப் பார்த்த போது நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. ஒரு துளி நீரும் அருந்தாமல் ஊனுருக்கி உயிரீகம் செய்தவரை நினைவு கூருவதற்காக ஒன்றுகூடாத தமிழர்கள், மக்கள் செலவில் பகட்டான வாழ்க்கை வாழும் ஒரு நடிகரைப் பார்ப்ப தற்காகக் கூடியவர்களை என்னவென்று சொல்வது!
தாயகத்தில் நல்லூரின் வீதியில் தன்னுயிர் ஈந்த திலீபனின் உருவச்சிலையை சிறீலங்காக் காவல் துறையினர் அகற்றிய போது கொதித்தெழாத கூட்டம் தான், அன்று விஜய்யைப் பார்க்க இலண்டன் தெருக்களில் அலைமோதியது. நெஞ்சு பொறுக்குதில்லை இந்த தன்னிலை உணராத மனிதரை நினைக்க!
எமது தமிழீழ மண்ணில் வாழ முடியாமல் பலவேறு வகையில் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகிப் புலம்பெயர்ந்து வந்து நாம் எதை அடைந்தோம்? எம் அடுத்த தலைமுறைக்கு எமது வரலாற்றைச் சொல்லிக் கொடுத்தோமா? தமிழ்மொழியை ஊட்டினோமா? எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய துணிவையும் கடமையையும் தெரிவித்தோமா? பகுத்தறிவு ஆற்றலைப் பெருக்கினோமா? என்ன செய்தோம்?
பெரும்பாலானோர் தமக்கான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தினர். ஊரில் தம் சொந்தங்களின் பொருளாதாரத்திற்கு அடித்தளம் இட்டனர். தமது பேருக்கும் புகழுக்குமாகத் தொண்டாற்றுகின்றனர். மதச்சடங்குகளுக்கு அகத்தியம் கொடுத்து நமது பணத்தில் பார்ப்பனர்கள் படுத்துறங்க வழிசமைக் கின்றனர். மூடநம்பிக்கைகளையும் ஜாதியச் சிந்தனை களையும் கட்டிப்பிடித்தபடி வாழ்கின்றனர்.
மிகச்சிலரே மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தெளிவான அரசியற் சிந்தனைகளோடும் தாம் வாழ் வதோடு மட்டுமல்லாமல், தமது தலைமுறைகளுக்கும் தமிழையும் வரலாற்றையும் ஊட்டி வளர்க்கின்றனர்.
ஒரு நாடு நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்வதற்குத் தெளிவான சிந்தனையுடைய மக்களே அகத்தியம். முதலாளித்துவ அடக்குமுறைகளைக் கண்டறிந்து உரிமைகளுக்காகப் போராடும் வலுவுள்ள ஒரு குமுகாயமே சிறந்த நாட்டை உருவாக்க அடித்தளமாக அமைய முடியும் என்பதை இன்றைய இளந்தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும்.
