6ஆம் வகுப்புக்கும் மும்மொழிக் கொள்கையில் விலக்கு! சி.பி.எஸ்.இ.-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 30- நடப்புக் கல்வியாண்டில் 3ஆவது மொழி கட்டாயம் என்பதிலிருந்து 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கும்படி சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்திய தால் பாடப் புத்தகம் இல்லாதது உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020இன் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப் பட வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. இதில், தொடர்புடைய மாநில மொழி, ஆங்கிலம், மற்றும் ஏதாவது ஓர் இந்திய மொழி ஆகிய மூன்று மொழிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் இந்த அறிவிப்புக்கு இணங்க, நடப்புக் கல்வி ஆண்டு முதலே 6ஆம் வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. அடுத்த கல்வி ஆண்டில் 7ஆம் வகுப்பு வரையிலும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் 8ஆம் வகுப்பு வரையிலும் என படிப்படியாக மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.

சிபிஎஸ்இ-யின் மும்மொழி கொள்கையை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. அவை, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 28.9.2026 அன்று விசாரணைக்கு வந்தது.

ஒன்றிய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், ”நடப்புக் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதில் பின்வாங்க மாட்டோம். நாடு முழுவதும் 28,819 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1.2 சதவீதம் பள்ளிகளை தவிர மற்றவை மும்மொழி கொள்கையை செயல்படுத்த தயாராகவே இருக்கின்றன” என்றார்.

இப்போது 7,8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியைப் பயின்றால், அவர்கள் 10ஆம் வகுப்பு செல்லும்போது 3ஆவது மொழிக்கு சிபிஎஸ்இ வாரியத் தேர்வை எழுத வேண்டிய தேவையில்லை. சம்பந்தப்பட்ட பள்ளியின் அளவிலேயே மதிப்பீடு செய்யலாம் என்ற நிலை நிலவுகிறது. இந்தச் சலுகையை 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் அமர்வு, “சிபிஎஸ்இ 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட் டுள்ள அதே விலக்கு 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தரப்படவேண்டும். மாணவர்களுக்கு சிரமத்தை தர விரும்பவில்லை. மாறாக அவர்களுக்கும் தேவையான வசதிகளை அளிக்க விரும்புகிறோம்” என்றது.

தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு 31.84 லட்சம் பேர் காத்திருப்பு!

அதிகாரப்பூர்வ தகவல்!!

சென்னை, செப். 30- தமிழ்நாட்டில் உயர் கல்வி படிப்பு முடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவர்களில் பலரும் தவறாமல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களின் பதிவை புதுப்பித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் வராத துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலம் பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, அதன்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால், அதன் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.

அனைத்துத் துறைகள்,அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பொது அறிவிப்பு வெளியிட்டு காலி இடங்களை நிரப்பத் தொடங்கின. குறிப்பாக, எந்த தேர்வும் இல்லாமல் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் இடங்கள் கூட பொது அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்பட்டது.

இதனால், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 31லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் தகவல் தெரியவந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரடிப் பதிவில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 84 ஆயிரத்து 213 பேர் என்பது தெரியவந்துள்ளது.

ஆண்கள் 13லட்சத்து 67 ஆயிரத்து 742 பேரும் பெண்கள் 18 லட்சத்து 16 ஆயிரத்து 204 பேரும் அடங்குவர். 267 திருநங்கையர்களும் வேலைவாய்ப்பு பதிவில் இடம் பெற்றுள்ளனர்.இதனிடையே, கல்வித் தகுதி அடிப்படையிலும் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மெட்ரிகுலேஷன் கல்வி வழியில் படித்தவர்கள் 23 லட்சத்து 55 ஆயிரத்து 231 பேரும், எச்.எஸ்.சி/பியூசி (HSC/PUC) படித்தவர்கள் 18 லட்சத்து 29 ஆயிரத்து 493 பேரும் உள்ளனர்.

இதேபோல், டிப்ளமோ முடித்தவர்கள் 1 லட்சத்து 52 ஆயிரத்து 315 பேரும், இதர டிப்ளமோ படித்தவர்கள் 60 ஆயிரத்து 410 பேரும் பதிவு செய்துள்ளனர்.பட்டதாரிகளில் கலைப் பிரிவில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 643 பேரும், அறிவியல் பிரிவில் 4 லட்சத்து 37 ஆயிரத்து 826 பேரும், வணிகவியல் பிரிவில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 731 பேரும் உள்ளனர். பொறியியல் பட்டதாரிகள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர் உள்ளனர். முதுகலைப் பட்டதாரிகளில் கலைப் பிரிவில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 938 பேரும், அறிவியல் பிரிவில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 911 பேரும், வணிகவியல் பிரிவில் 33 ஆயிரத்து 566 பேரும் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *