பண்ருட்டியில் வெளிவந்த சங்ககால அதிசயம்!

3 Min Read

பண்ருட்டி, ஜூன் 24- கடலூர் பண்ருட்டியில் சங்ககால மக்கள் பயன்படுத்திய மூன்று அடுக்கு உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை கண்டறியும் வகையில் பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் செங்கல் சூளைக்காக பள்ளம் தோண்டியபோது கண்டறியப்பட்ட இந்த 3 அடுக்கு உறை கிணறால் கீழடி, பூம்புகார், அரிக்கமேடு போன்று பண்ருட்டியும் சங்ககால அகழாய்வில் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ்நாட்டுக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க

கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

புதுடில்லி, ஜூன் 24- 40 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கருநாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

52ஆவது கூட்டம்

காவிரி நதி நீர் பங்கீட்டில் கருநாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே சுமூகத் தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டன. இந்த 2 அமைப்புகளும் மாதம்தோறும் கூடி நீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கின்றன.

4 மாநிலங்களுக்கு அழைப்பு

இந்த நிலையில், நான்கு மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் 52ஆவது கூட்டம் டில்லியில் நேற்று (23.6.2026) பிற்பகல் தொடங்கியது. கூட்டத்தில் தமிழ்நாடு, கருநாடகம், கேரளம், புதுச்சேரியை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு நீர்வளத் துறை செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை!

புதுடில்லி, ஜூன் 24- 18 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்கள் தங்கள் கணவர்களால் உடல் & பாலியல் வன்முறைக்கு ஆளாவதில் தென்மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன.

ஒன்றிய அரசு வெளியிட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு (2023-2024) தரவுகளின்படி, 36.1% உடன் பீகார் முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து தெலங்கானா (30.8%), உ.பி., தமிழ்நாடு ஆகியவை தலா 28.5% உடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும், புதுச்சேரியும், ஆந்திராவும் 6 & 7ஆவது இடத்திலும் உள்ளன.

பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை… கொடூரம்!

கல்பாக்கம், ஜூன் 24- செங்கல்பட்டு கல்பாக்கம் அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால், இயற்கை உபாதைக்கு வெளியில் சென்ற மாணவிக்கு பெரும் துயரம் நடந்துள்ளது. மாணவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த, கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைதாகியுள்ளனர். தொடரும் இது போன்ற குற்றங்களுக்கு முடிவே இல்லையா என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது.

 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சென்னை, ஜூன் 24- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -1 பதவிகளுக்கான புதிய தேர்வு அறிவிப்பை நேற்று (23.6.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அரசு உயர் பதவிகளில் சேரத் தயாராகி வரும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு நல்ல வாய்ப்பாக அமைத்துள்ளது.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் குறைந்தபட்ச வயது 21 பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு நீங்கள் எந்தச் சமுதாயப் பிரிவை சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து மாறும்.

34 வயதிற்குள் இருக்கும் பொதுப்பிரிவினரும், 39 வயதிற்குள் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட/பழங்குடியின தேர்வர்களும் இந்த உயரிய குரூப்-1 தேர்வுக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு அவர்கள் சார்ந்த சமுதாயப் பிரிவின் அதிகபட்ச வயதிலிருந்து கூடுதலாக 10 ஆண்டுகள் வயதுச் சலுகை வழங்கப்படும். மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ என்ற முகவரியின் மூலம் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஏற்கெனவே ஒருமுறைப் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *