புதுடில்லி, செப்.28 கைப்பேசிகளில் குரல் அழைப்பு, குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சேவைகள் மட்டுமே கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை, தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கூடுதலாக அளிப்பதை தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) கட்டாயமாக்கியுள்ளது.
தொலைத்தொடா்பு நுகா்வோர் பாதுகாப்பு (13-ஆவது திருத்தம்) விதிமுறைகள் 2026-அய் டிராய் அண்மையில் வெளியிட்டது. இதன்படி, குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் மட்டுமே கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை, தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கூடுதலாக வழங்க வேண்டும்.
இந்தத் திருத்தத்தின்படி குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு மட்டும் பொருந்தும் வகையில், கட்டணக் குறைப்புடன் கூடிய சிறப்பு கட்டணத் திட்டங்களைத் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும். இந்த ரீசார்ஜ் திட்டங்கள் வெவ்வேறு காலக்கெடுவுடன் கிடைக்க வேண்டும். அதாவது 28 நாள்கள், 56 நாள்கள், 84 நாள்கள் என ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு காலக்கெடுவை அளிக்க வேண்டும். 30 நாள்கள் மற்றும் அதற்கும் குறைவான காலத்துக்கு குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் இணைய சேவைகளை கொண்ட சிறப்பு கட்டணத் திட்டங்களைத் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இதேபோல குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் மட்டுமே கொண்ட திட்டங்களையும் அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
ரீசார்ஜ் முடிந்தவுடன் ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் மீண்டும் ரீச்சார்ஜ் செய்யும் வகையில் திட்டம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட மாதத்தில் அந்தத் தேதி இல்லாவிட்டால், அந்த மாதத்தின் கடைசி நாளில் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும்.
வழக்கமான குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் இணைய சேவைகளுக்கு அளிக்கப்படும் நீண்ட கால சிறப்புக் கட்டண ரீசார்ஜ் திட்டங்களைப் போல, குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு மட்டும் குறைந்தபட்சம் ஒரு நீண்ட கால சிறப்புக் கட்டண ரீசார்ஜ் திட்டத்தை அளிக்க வேண்டும். இந்தத் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, கைப்பேசியில் இணைய சேவைகள் தேவைப்படாத நுகா்வோருக்கு உரிய கட்டண குறைப்புடன் சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
