பண்பாட்டு மீட்புக்கான போராட்டம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சிந்துவெளி நாகரிகத்தின் திராவிட அடித்தளம் என்னும் பொருளில் சிந்துவெளி நாளைத் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சிறப்பாகக் கொண்டாடியது. சிந்துவெளி நாகரிகத்தை உலகுக்கு அறிவித்த சர்.ஜான் மார்ஷல் சிலைக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தது. இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலிருந்து விரிந்து பரந்துள்ள ஒரு நாகரிகத்தைத் தென்கோடியில் உள்ள தமிழ்நாடு கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? ஜான் மார்ஷலுக்குத் தமிழ்நாட்டில் சிலை வைக்க வேண்டிய அவசியம் என்ன? சிந்துவெளி எழுத்துகளை, அறிவியல் முறைப்படி ஆதாரங்களுடன் படித்து நிறுவுபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலருக்கு இணையான தொகை பரிசு என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததன் காரணம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்க வேண்டுமானால், ‘சிந்து வெளி நாகரிகத்தை மறைக்கவும், சிதைக்கவும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. முயற்சிப்பது ஏன்? அதன் சின்னங்களில் ஆரிய அடையாளங்களைத் திணிக்கத் துடிப்பது ஏன்? பாய்ந்தோடும் சிந்து நதியை விட்டுவிட்டு, அதை ‘இல்லாத சரஸ்வதி’ நதியுடன் தொடர்புபடுத்தச் சூழ்ச்சி செய்வது ஏன்?’ என்ற கேள்விகளுக்கான பதில் புரிந்திருக்க வேண்டும்.

எழுத்து முறையே இல்லாமல், வாய்மொழியிலேயே வேதத்தைக் கடத்திவந்த ஆரியக் கூட்டத்திற்கும், 5000 ஆண்டுகளுக்கும் முன்பே எழுத்து முறை கொண்ட சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு இருக்க முடியுமா? நகர நாகரிகம் செழித்திருந்த சிந்துவெளி நாகரிகத்திற்கு, நாடோடிக் கூட்டமாகவும், பின்னர் கிராமங்கள் (சிற்றூர்) ஆகவும் வாழ்ந்த ஆரியர்கள் உரிமை கொண்டாட முடியுமா? உப்பு என்ற சொல்லே இல்லாத வேதங்களைப் போற்றும் ஆரியர்களுக்கும், திரைகடலோடிய திராவிடப் பேரினத்தின், துறைமுகங்கள், நாவாய்களைக் கொண்டு உலகளந்த நாகரிகத்துக்கும் தொடர்பு இருந்திருக்க முடியுமா?

ஆனால், சிந்துவெளியை, சரஸ்வதியுடன் தொடர்புபடுத்த ‘அவர்கள்’ முனைவது ஏன்? ஆரியர்கள் நாடோடிகள் அல்ல, இந்த நாட்டுக் குடிகள் தான் என்று எப்படியாவது மக்களை நம்ப வைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக முயன்று வருகிறார்கள். ஆனால், தொல்லியல் சான்றுகள், வரலாற்றுச் சான்றுகள், மொழியியல் சான்றுகள் எல்லாமே வேறாக இருக்கின்றன. அண்மையில் வெளிவந்துகொண்டிருக்கும் அறிவியல் சான்றுகளும் ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வகுடிகள் அல்ல என்பதை நிறுவுகின்றன. இவையெல்லாம் அவர்களுக்குப் பதற்றத்தைத் தோற்றுவிக்கின்றன. சிந்துவெளி நாகரிகத்தில் இல்லாத குதிரையைக் கொண்டுவந்து மோசடி செய்யத் தூண்டுகின்றன.

சிந்துவெளியில் ஆரியத் தொடர்பு இல்லை என்பதும், இந்தியாவுக்கு ஆரியர்கள் அந்நியர்களே என்பதும் ஆரியர்கள் என்போரின் கலாச்சாரமும், திராவிடர் பண்பாடும் வேறுவேறானவை என்பதும்   அவர்களின் தொன்மையை மட்டும் கேள்வி கேட்கவில்லை. அவர்களின் நெடுங்கால அரசியல் அதிகாரக் கனவையே தகர்க்கிறது என்பதுதான் இந்தப் பதற்றங்களுக்கு மிகப்  பெரிய காரணம்.

ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவக் கொள்கைகளுக்கு எதிரிகளாக அவர்களால் அடையாளப்படுத்தப்படுபவை இஸ்லாம், கிறித்துவம் உள்ளிட்ட மதங்களே! அவற்றை இந்துத்துவாவினர் அந்நிய மதங்கள் என்று பிரிக்கின்றனர். இந்த நாட்டின் மதம் என்று இந்து மதத்திற்கு அடையாளம் காட்டி வருகின்றனர். ஆனால், வேதங்கள் ஆரியர்களுடையவை. அவற்றில் சொல்லப்படும் காட்சிகள் இந்தியாவில் நிகழ்ந்தவை அல்ல; ஆரியர்களே கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்தியாவுக்குள் கடந்த 2500 – 3000 ஆண்டுகளுக்குள் நுழைந்த கூட்டம் தான் என்பது உறுதிப்படுமேயானால், வேத மதம், ஸநாதன மதம் எனப்படும் இந்து மதமும் அந்நிய மதமே என்றாகிறது. அதுவும் இந்தியாவில் தோன்றியதல்ல என்பது உறுதியாகிறது. இதுதான் அவர்களின் அரசியலை ஆட்டம் காணச் செய்யும் வரலாற்று உண்மை! இதை எதிர்கொள்வதுதான் அவர்களுக்குப் பெரும் அச்சத்தைத் தருகிறது.

மேற்கொண்டு, சிந்துவெளியின் நகர நாகரிகத்தைப் போன்றதொரு நாகரிகம் தமிழ்நாட்டில் கீழடியில் இருக்கிறது என்று அதன் அகழாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியதுதான் கீழடியை மறைப்பதற்கு, பா.ஜ.க. அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான காரணமும் ஆகும். அண்மையில் கூட, பா.ஜ.க. அமைச்சர் கஜேந்திர சிங், “கீழடி அகழாய்வு முடிவுகளுக்கு மேலும் அறிவியல் ஆதாரங்கள் வேண்டும். அப்படிக் கிடைத்தால் தான் அதன் கால அளவை ஏற்றுக் கொள்ள முடியும்” என்று மீண்டும் சொல்கிறார். அமர்நாத் ராமகிருஷ்ணா அளித்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளமல் மேலும் திருத்தங்களைச் செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறது ஒன்றிய அரசு. மறுக்கிறார் ஆய்வாளர். அந்த அறிக்கையை வெளியிட்டால், பொதுவெளியில் அது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியல் அறிஞர்கள் விவாதிக்கவும், உண்மையை அறியவும் வாய்ப்பு ஏற்படுமே! ஏன், அதற்கு மறுக்கிறது பா.ஜ.க. அரசு? அடுத்தடுத்த அகழாய்வுகளில், தமிழ்நாட்டின் தொல்லியல் களங்களில் கிடைத்த தரவுகள், தமிழ்நாட்டின் வரலாற்றை இன்னும் பல ஆண்டுகள் முன் நகர்த்தியிருக்கின்ற சூழலில், ‘சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடும்’ என்று கருதுகிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு!

திராவிடப் பேரினத்தின் தொன்மையும், கீழடி அறிக்கையும், சிந்து வெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு ஆரியத்தின் சதிகளுக்கு அப்பாற்பட்டவை! பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் உண்மைகள் வெளிவருகின்றன என்றால், அதை மறைக்க முயலும் ஆரியக் கூட்டத்திடம் இன்னுமா நாங்கள் ஏமாறுவோம் என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது சிந்துவெளி நாள் நிகழ்வு! அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் பூம்புகார் முதல் மாமல்லபுரம் வரை பண்பாட்டுப் பாதுகாப்புப் பயணத்தை அறிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! வெல்லட்டும் பண்பாட்டு மீட்புப் போராட்டம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *