“நமது பண்பாட்டின் மூலாதாரம் சிந்து வெளி நாகரிகமே”
ஆரியம் அதை அழிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்கிறது அதைத் தடுக்க
பூம்புகார் முதல் மாமல்லபுரம் வரை பண்பாட்டுப் பிரச்சாரப் பயணம் திராவிடர் கழகம் மேற்கொள்ள இருக்கிறது!
சென்னை, செப் 23, “திராவிடர் என்ற சொல்லை நாம் இன அடையாளமாக பயன்படுத்தவில்லை. பண்பாட்டின் அடையாளமாகப் பயன்படுத்துகிறோம். அந்தப் பண்பாட்டின் மூலாதாரம் தான் சிந்துவெளி நாகரிகம்! அதனாலேயே ஆரியம் அதை அழிப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகிறது” என்றும், அதைத் தடுப்பதற்கு திராவிடர் கழகம் சார்பில், பூம்புகார் முதல் மாமல்லபுரம் வரையிலுமாக, விரைவில் பண்பாட்டுப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம்” என்றும், ”நமது பண்பாட்டின் அடித்தளத்தை உறுதிப்படுத்தியவர் சர் ஜான் மார்சல்! அதனால் தான், அவரைக் கொண்டாட வேண்டும்” என்றும், ஆரியர் – திராவிடர் பண்பாட்டுப் போரில் மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருப்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினார். இந்நிகழ்வில் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர் அ.கருணானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வுரைகள் வழங்கினர்.
‘திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்’ சார்பில், “திராவிட நாகரிகம் – சிந்துவெளி அகழாய்வு 102 ஆம் ஆண்டு விழா”வில், “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” எனும் தலைப்பில், சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், 22.09.2026, செவ்வாய் கிழமையன்று, மாலை 6:30 மணிக்கு, இவ்வரலாற்று ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
பெரு மக்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் முனைவர் வெ.மாரப்பன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற்ற, “மண்டல் குழு அமலானது எப்படி? சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் வெற்றிக்கு சான்று” நூல் வெளியீட்டு விழாவில், உருவாக்கத்தில் உடனிருந்த தோழர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அப்போது விடுபட்டிருந்த பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களுக்கு, இந்நிகழ்வில் கழகத் தலைவர் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். அடுத்து, திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலர் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது தலைமை உரையை வழங்கினார். அதையும் தொடர்ந்து திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.கருணானந்தம், சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.(ப.நி.)ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கீழடி அகழாய்வை தலைமையேற்று நடத்திய இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா, தொல்லியல் அறிஞர் தொல்லியல் துறை பேராசிரியர் தீபிகா, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியர் இனியன், வேல்.சோ.நெடுமாறன், த.கு.திவாகரன், எழுத்தாளர் சீனி பழனி, பாவலர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
‘‘ஜான் மார்ஷலை ஏன் கொண்டாட வேண்டும்?’’
கடந்த முறை நடைபெற்ற, ‘திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்’ நிகழ்ச்சியில், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், அகழாய்வு அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.கருணானந்தன் ஆகியோர் ஆற்றிய உரைகள், “சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே” எனும் தலைப்பிலான நூலும், சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் மற்றும் சுந்தர் கணேசன் இருவரும் இணைந்து எழுதிய, “ஜான் மார்ஷலை ஏன் கொண்டாட வேண்டும்?” எனும் தலைப்பிலான நூலும் இந்நிகழ்வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
‘சர் ஜான் மார்ஷல்’ சிலைக்கு மாலை அணிவிப்பு
முன்னதாக, மாலை 6 மணிக்கு எழும்பூர் கன்னிமாரா நூலக வளாகத்தில் உள்ள, சர் ஜான் மார்ஷல் சிலைக்கு, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.கருணானந்தம், செயலாளர் மாரப்பன், இணைச் செயலாளர் மு.தேன்மொழி மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு, திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட, ‘சர் ஜான் மார்சல்’ சிலைக்கு மாலையணிவித்து, மரியாதை செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.
பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய ஆசிரியர் அவர்கள், ‘திராவிடர்’ – ‘ஆரியர்’ என்ற சொற்களின் பின்னணியில் இருக்கும் பண்பாட்டு வரலாற்றைச் சுட்டிக்காட்டும் விதமாக, ‘திராவிடர்’ என்ற சொல்லை நமது இன அடையாளமாகப் பார்க்கவில்லை. அதை நமது பண்பாட்டின் அடையாளமாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். அதை எளிமையாக விளக்குவதற்காக, ’திராவிடர்’ என்பது ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ – ‘அனைவருக்கும் அனைத்தும் என்றும், ‘ஆரியர்’ என்பது பிறப்பின் அடிப்படையில், ’தாங்கள் தான் உயர்ந்தவர்கள்’ என்று சிலர் சொல்லிக்கொள்வது’ குறித்தும் விளக்கினார். ‘‘ அந்த உயர்வு – தாழ்வு என்பதை விளக்க, Gilbert Slater எழுதிய, ”The Dravidan Element in Indian Culture” எனும் புத்தகத்தில், மனிதர்களில் மட்டுமன்று, மொழி, சமூகம், பண்பாடு என்று எல்லாத் தளங்களிலும் உயர்வு – தாழ்வைக் கற்பித்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார். அதை உறுதிப்படுத்துவதற்காக, இந்திய அரசியல் சட்டத்தில், ‘‘Hindi, that is in Dev Nagari Script’’ என்று இருப்பதை எடுத்துரைத்து, தேவ்நகரி என்றால், தேவபாஷை – அதாவது சமஸ்கிருதம் தேவபாஷை. தமிழ்? நீச பாஷை என்பதையும் நினைவூட்டி, கில்பர்ட் சிலேட்டர் எழுதியுள்ளதை உறுதிப்படுத்தினார்.
நமது பண்பாட்டின் மூலாதாரமே…
தொடர்ந்து, ’தமிழனே இது கேளாய்’ எனும் புரட்சிக்கவிஞர் பாடலில், “வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார். வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார். நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார். நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்” என்ற வரிகளை சுட்டிக்காட்டி இன்றுள்ள நிலைமையை நம் கண் முன் கொண்டு வந்தார். ஆனாலும் ஆபத்து இன்னமும் விலகவில்லை என்பதைச் சொல்ல, சர் ஜான் மார்ஷல் அவர்களை நினைவு கூர்ந்து, “நமது பண்பாட்டின் மூலாதாரமே சிந்துவெளி நாகரிகம்தான். அதனால்தான் அதை ஆரியம் அழிக்க ஓயாமல் முயற்சி செய்கிறது” என்றும், அதைத் தடுப்பதற்காக, நாமும், பூம்புகார் முதல் மாமல்லபுரம் வரையிலும் பண்பாட்டு விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை விரைவில் மேற்கொள்ளவிருக்கிறோம்” என்று, ஆரியர், திராவிடர் போரின் தொடர்ச்சியை எடுத்தியம்பினார். அடுத்து, ‘திராவிடர் இயக்கத் தலைவர்கள் இலக்கியவாதிகள் அல்லர்’ எனும் அவதூறுக்கும் பதிலடி கொடுத்து தமதுரை நிறைவு செய்துகொண்டார். தொடக்கத்திலேயே, ‘‘கூட்டங்களுக்குப் போகக்கூடாது, பேசக்கூடாது, அதிகநேரம் அமரந்திருக்கக்கூடாது என்று மருத்துவர் கூறிய ஆலோசனைகளை புறம்தள்ளிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். ஆகவே விடைபெறவேண்டியவனாக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். அதன் படி விடைபெற்றுக்கொண்டார். தொடர்ந்து, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.கருணானந்தம், சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.(ஓய்வு) ஆகியோர் உரையாற்றினர். இறுதியில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் இணைச் செயலாளர் முனைவர் மு.தேன்மொழி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில், வழக்குரைஞர் திருப்பூர் பாண்டியன், கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாணவர் கழக மாநில பொறுப்பாளர் செ.பெ.தொண்டறம், வ.மு.சே.திருவள்ளுவர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, வை.கலையரசன், முனைவர் அதிரடி க.அன்பழகன், அரும்பாக்கம் தாமோதரன், தாம்பரம் மோகன்ராஜ், பூவை தமிழ்ச்செல்வன், இளவழகன், தங்கமணி தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
