சென்னை, செப். 12- வடசென்னை மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், வள்ளலார் நகர் (மின்ட்) அருகே நேற்று (11.9.2026) நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலாலும், குடியிருப்பு நெருக்கடியினாலும், சுற்றுச்சூழல் பாதிப்பினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியாகவே வட சென்னை இருந்து வருகிறது.
எனவே, வடசென்னை வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்குவதோடு, அதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடுகளை மாநில அரசு செய்ய வேண்டும். தற்போது இருக்கக்கூடிய தலைமைச் செயலகம் கடுமையான இடநெருக்கடியிலும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அரசு அலுவலகங்கள் நீண்டகாலத்துக்கான கட்டுமானங்களாக இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற விசயத்தில் அரசு அவசர கதியில் செயல்படக்கூடாது. புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படவுள்ள பட்டினப்பாக்கத்தில், அப்பகுதியைச் சுற்றியுள்ள மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம், சென்னைக்கு வெளியே தலைமைச் செயலகத்தை கொண்டு செல்வதும் பொருத்தமாக இருக்காது. எனவே, இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிகூட்டத்தை நடத்தி, அனைவரும் ஏற்கும் வகையில் பொருத்தமான இடத்தைக் கண்டறிய வேண்டும். அதுவரை, பட்டினப்பாக்கத்தில் எந்தவிதமான பணிகளையும் அரசு தொடங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
பழைய தேர்வு விடைத்தாள் பதிவிறக்கம் செய்யலாம்!
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, செப்.12- பழைய தோ்வுகளின் விடைத் தாள்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஎன்பிஎஸ்சி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ப.சிறீவெங்கட பிரியா நேற்று (11.9.2026) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற உதவி வேளாண் அலுவலா் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா் தோ்வு, அதே ஆண்டில் நடந்த தோட்டக்கலை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை அலுவலா் தோ்வு, வேலாண்மை விரிவாக்க அலுவலா் தோ்வு ஆகிய 3 தோ்வுகளுக்கான விடைத்தாள்கள் தோ்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அந்தத் தோ்வுகளை எழுதியவா்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி தங்கள் விடைத்தாள்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த வசதியை அடுத்த ஆண்டு செப்டம்பா் 10-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
