மதுரையில் “கரைந்து போ மனமே“ நூல் அறிமுக விழா…

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, செப். 11- மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை சிந்தனை மேடை இணைந்து நடத்திய   நூல் அறிமுக விழாக் கருத்தரங்கம் 2.8.2026 அன்று மாலை 6 மணி அளவில் மதுரை பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பேராசிரியர் டாக்டர் சி.மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட மகளிரணித் தலைவர் தி.அஜிதா அனைவரையும் வரவேற்றார்.

தொடக்கவுரையினை பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு நிகழ்த்தினார். தொடர்ந்து கவிஞர் சொ.நே.அன்புமணி எழுதிய ‘கரைந்து போ மனமே‘ என்னும் கவிதை நூலினை அறிமுகப்படுத்தி பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் உரையாற்றினார். அவர் தனது உரையில் கவிதை நூலின் சிறப்புகளை எடுத்துக்கூறியதோடு, தமிழ்க் கவிதைகள் என்பது நீண்ட வரலாறு உடையது, இன்றைக்கு வரக்கூடிய கவிதை நூல்களும் பழைய மரபினை ஒட்டியே எழுதப்படுகின்றன ,எனவே இலக்கணத்தைத் தாண்டி எல்லாக் கவிதைகளும் மரபுக் கவிதைகளே என எடுத்துக்கூறி கவிதை நூலாசிரியர் சொ.நே.அன்புமணியைப் பாராட்டி உரையாற்றினார்.

தொடர்ந்து மதுரையில் உள்ள திருநங்கையர் ஆவண மய்யத்தின், நிர்வாக இயக்குநர் (MANAGING TRUSTEE ,TRANSGENDER RESOURCE CENTER) பிரியா பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் திருநங்கைகள் என்னும் பெயருக்கு முன்னால் எப்படி எல்லாம் இழிவாக அழைக்கப் பட்டோம் என்றும் அந்தப் பெயரை அளித்தவர் டாக்டர் கலைஞர் என்றும், சென்ற ஆட்சியில்தான் திருநங்கையர் ஆணையம் அமைக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டு, கல்வியும் வேலை வாய்ப்புமே திருநங்கைகளுக்கு உயர்வு தரும் என்ற அடிப்படையில் தங்கள் மய்யம் பணியாற்றுவதாகவும், அதனுடைய பல்வேறு பணிகளைப் பற்றியும் குறிப்பிட்டார். திருநங்கைகள் பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள், பின்பு புரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இலக்கியத்தோடு தங்கள் வாழ்க்கையை இணைத்து சிறப்பாக 45 நிமிடங்கள் உரையாற்றினார்.

தொடர்ந்து கல்கி சுப்ரமணியம் அவர்கள் எழுதிய ‘குறி அறுத்தேன்’ என்னும் கவிதை நூலினை மாவட்ட கழகத் தலைவர் அ.முருகானந்தம் மதிப்புரை செய்தார். அவர் ஒரு திருநங்கை தனது தாயிடம் தனக்கு இரக்கம் காட்டும்படி மிக உருக்கமாக எழுதியிருக்கும் கவிதையினை முழுமையாக வாசித்துக்காட்டினார்.மதுரையில் இருக்கும் இந்த திருநங்கையர் ஆவண மய்யம் தங்கள் வீட்டுப் பகுதியில் இருந்தபோதும் தான் அறியாமல் இருந்த நிலைமைக்கு வருத்தம் தெரிவித்து உரையாற்றினார்.தந்தை பெரியாரின் தொண்டர்கள் அடிப்படையில் மனித நேயத்தைப் பேசுபவர்கள்.மனித நேயத்தோடு திருநங்கையரை அணுகுவதை இந்த நூல் வலியுறுத்துகிறது என்றும் குறிப்பிட்டு தான் படித்த வேறு சில நூல்களையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

தொடர்ந்து உரையின் சிறப்பு என்னும் தலைப்பில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.பால்ராஜ், மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் சீ,தேவராஜ்பாண்டியன்,மாணவி க.இலக்கியா ஆகியோர் உரையாற்றினர். கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே. செல்வம் சிறப்பாக நிகழ்வினை ஒருங்கிணைத்தார். சிறப்பு விருந்தினர்களுக்கும் நூல் ஆசிரியருக்கும் பயனாடைகள் போர்த்தப்பட்டன. எல்.அய்.சி. நிறுவனத்தில் வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற செல்ல.கிருட்டிணன் நன்றி கூறினார்.

நிகழ்வில் மாவட்ட கழகக் காப்பாளர் சே.முனியசாமி, கழகப் பொறுப்பாளர்கள்  ராக்கு தங்கம், இரா.திருப்பதி, அ.வேங்கைமாறன், பெரி.காளியப்பன், பா.சடகோபன், செல்லத்துரை, இரா.அழகுபாண்டி, நன்னன், சிவசங்கரன், கமல், சிந்துபிரியா கமல், காவியா, காண்ட்ராக்டர் சண்முகம்,க.சிவா, முரளி, போட்டோ இராதா உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *