நிதி இல்லை என்று சொல்வது – புதிய சட்டமன்றம் கட்டுவதற்குப் பொருந்தாதா? மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருக்கிறார்கள்!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பாபநாசம், செப்.10  மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்,  ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், நிதி இல்லை என்று சொல்வது – புதிய சட்டமன்றம் கட்டுவதற்குப் பொருந்தாதா? என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

பாபநாசத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி!

நேற்று (9.9.2026) பாபநாசத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்:   த.வெ.க. புதிய கூட்டணி அமைத்தி ருக்கிறதே, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தமிழர் தலைவர்:  த.வெ.க. கூட்டணி தொடங்கிய நேரத்தில், இருந்த கட்சிகளில், இரண்டு கட்சிகள் இப்போதே காணாமல் போய் இருக்கின்றன. இந்தக் கூட்டணி எவ்வளவுகாலம் தொடரும், அதில் உள்ள  அந்தக் கட்சிகள் எவ்வளவு நாள்கள் இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதைவிட, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், உரிமைகளுக்காகப் போராடுவது என்பது வேறு, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சமயத்திற்கு ஏற்ப நடப்பது என்பது வேறு. இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டும்.

செய்தியாளர்: பட்டினப்பாக்கத்தில், புதிய தலை மைச் செயலகம் கட்டுவதற்காக இன்றைக்கு ஜி.ஓ. போட்டிருக்கிறார்கள். புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டுவது ஏற்புடையதா?

நிதி இல்லை என்று சொல்வது –
புதிய சட்டமன்றம் கட்டுவதற்குப் பொருந்தாதா?

தமிழர் தலைவர்: ஒரு பக்கத்தில் நிதி இல்லை, கடன் வாங்குகிறோம் என்கிறார்கள். ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில்  அறிவித்த திட்டங்களை,  உறுதியளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பணம் இல்லை, நிதி இல்லை என்று சொல்லி, அவற்றை நிறை வேற்றிய பிறகுதான் மற்றதையெல்லாம் செய்வோம் என்று சொன்ன பிறகு, திடீரென்று, இப்படிப் புதுப்புது திட்டங்கள் அறிவிப்பது அவசியமா? என்பதைப் பார்க்க வேண்டும்.

சட்டமன்றம் தேவைப்படலாம். கட்டுவது தவறல்ல; ஆனால், நிதிநிலை சரியான பிறகு அதைச் செய்யலாம். உடனடியாக அதற்கொன்றும் அவசியமில்லை.  புதிய சட்டமன்றம் என்று சொல்லும்போது,  அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. எந்தக் காரணமாக இருந்தாலும், மற்றவற்றிற்கு நிதி இல்லை, கடன் இருக்கிறது என்று சொல்லுகிற அதே காரணம், இதற்குப் பொருந்தாதா? என்பதுதான் நம் கேள்வி.

மக்கள் தீர்ப்புக் கொடுப்பார்கள்!

செய்தியாளர்: கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாபநாசம் தொகுதிக்கு, திமுக ஆதரவு வேட்பாளர் ஷாஜகானுக்கு வாக்குக் கேட்டு வந்திருந்தீர்கள். இப்பொழுது அவர்  வேறு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, மாறிவிட்டாரே, அதைப்பற்றி என்ன  சொல்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: மக்கள் அதைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப உரிய நேரத்தில் தீர்ப்புக் கொடுப்பார்கள்.

செய்தியாளர்: த.வெ.க. கூட்டணியில், கம்யூனிஸ்ட் கட்சிகள்  இணையவில்லையே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: முதலில் அந்தக் கூட்டணியில் ஏழு கட்சிகள் இருந்தன. இப்பொழுது அய்ந்து கட்சி களாக இருக்கிறார்கள். அடுத்து தொடரும்போது, எவ்வளவு கட்சிகள்  என்று அவ்வப்போது அவர்களே முடிவு செய்து சொல்லுவார்கள்.

ஆகவேதான், அவர்கள் கூட்டணியைப் பற்றி, நான் கருத்துச் சொல்வது நியாயமல்ல. அவர்கள் கூட்ட ணியில் தொடர்கிறார்களா? அல்லது வேறு அணியில் இருக்கிறார்களா? என்பது போகப் போகத் தெரியும். கடந்த முறை நடந்த கூட்டத்துக்கும், இந்த முறை நடந்த கூட்டத்துக்குமே வித்தியாசம் இருக்கிறது.

மாற்றம் என்று சொல்லி வந்தவர்கள், ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருக்கிறார்கள்!

செய்தியாளர்: த.வெ.க. கூட்டணி  தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

தமிழர் தலைவர்: மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்று சொல்லித்தான் வந்து, ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

செய்தியாளர்: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது?

தமிழர் தலைவர்: ‘மிகச் சிறப்பாக இருக்கிறது’ என்று முதலமைச்சரே சொல்கிறாரே, தெரியவில்லையா?

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *