குலத் தொழில்களுக்குப் புகழ் மகுடம் சூட்டாதீர்கள்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

“தலைவர்கள் என்பவர்கள் வெறும் படங்கள் அல்ல; பாடங்கள்!” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி மேடைகளில் குறிப்பிடுவார். அது அலங்காரத்திற்கானது அன்று; ஆழமான பொருள் பொதிந்தது. தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், கல்வி வள்ளல் காமராசரும் கொள்கைத் தலைவர்கள் என்கிறது த.வெ.க. அரசு. ஆனால், அந்தத் தலைவர்களின் கொள்கைகள் என்ன என்பது பற்றிய அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டாமா?

வேளாண் துறை மானியக் கோரிக்கையின் மீது பதிலளித்த வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத், “விவசாயிகளின் பிள்ளைகள் இனிமே விவசாயம் வேண்டாம், நாங்கள் வேறு வேலைக்கு செல்கிறோம் என்று சொல்லாமல் இருக்க, ‘என் அப்பா விவசாயி, நானும் விவசாயி தான் ஆகப் போகிறேன், விவசாயம் தான் படிப்பேன்’ என்று சொல்லும் நிலை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் கனவு” என்று பேசியிருக்கிறார். உண்மையில் இதுதான் முதலமைச் சரின் கருத்தா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.

‘விவசாயத் துறையை மேம்படுத்த, ஒரு நீதிபதி மகனோ, ஒரு  அர்ச்சகர் மகனோ விவசாயம் படிப்பேன் என்று சொல்லும் நிலையை உருவாக்குவோம்’ என்று சொல்வதற்கும், விவசாயி மகன் மீண்டும் விவசாயம் படித்து விவசாயத்திற்குச் செல்வேன் என்று சொல்ல வைப்பதற்கும் வேறுபாடு உண்டு. விவசாயி மகன் வேறு வேலைக்குப் போக வேண்டும்; துணி வெளுப்பவர் மகள் அதிகாரத்திற்கு வரவேண்டும்; உடல் உழைப்பாளிகளின் மகனும், மகளும் ‘ஒயிட் காலர்’ பணிகளில் சேர வேண்டும் என்பது தானே மேற்சொன்ன தலைவர்களின் கொள்கைகளுக்கே அடிப்படை!

குலத் தொழிலாக அவரவர் ஜாதித் தொழிலையே மேற்கொள்ளும் நிலைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தானே அன்றும் போராடி வென்றோம்; இன்றும் தேசியக் கல்விக் கொள்கையின் மூலமும், ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரிலும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு திணிக்க முற்படுவதைத் தடுப்பதற்குப் போராடியும் வருகிறோம். இதில் தெளிவு ஏற்படுவது அவசியம் – அதுவும் தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு! இல்லையெனில், மறைமுகமாக இந்த நோக்குடன் வரும் திட்டங்களை எப்படி அடையாளம் கண்டு தடுக்க முடியும்? இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் அமைச்சர் நிர்மல் குமார் இதே போல பேசி, தமிழ்நாட்டில் பரவலான கண்டனத்தைப் பெற்றுள்ளார் என்கிறபோது, இது குறித்து தெளிவாக முதலமைச்சரும், அரசும் தங்களின் கருத்து என்ன என்பதைத் தெரிவிப்பதும் முக்கியமாகும்.

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு, எந்த வகையிலாவது நமது கல்வித் துறையைக் கபளீகரம் செய்யவும், கல்வி வளர்ச்சியைத் தடுக்கவும் பல்வேறு வகைகளிலும் முண்டிக் கொண்டேயிருக்கிறது; எந்த இடைவெளியாவது கிடைக்குமா என்று நோட்டம் விட்டுக் கொண்டேயிருக்கிறது. அதைத் தாங்கள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்திடவும் அவர்கள் தயங்குவதில்லை. ஏற்கெனவே, பீகார் மாநிலம் போதிய வளர்ச்சியற்ற மாநிலம் தான். ஆனால், அங்கே இப்போது குறுக்குவழியில் ஆட்சித் தலைமையைப் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, ஒரு இனிப்பு பூசப்பட்ட விஷ உருண்டையைப் பளபளப்பான காகிதத்தில் சுற்றி, மாணவர்களை நோக்கி வீசியுள்ளது.

பீகார் அரசு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்களில் ‘தோல்வி’ (fail) என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘திறன் மேம்பாட்டுக்குத் தகுதியானவர்’ (eligible for skills) என்ற சொற்றொடரை இடம்பெறச் செய்யவுள்ளதாம். “படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை; நீங்கள் ஏன் உழைக்கக் கூடாது? வேலை செய்யக் கூடாது?” என்று கேட்பது இனிப்பானதாகத் தான் இருக்கும். ‘தேர்வில் தோல்வி’ என்று துவண்டு போயிருப்பவர்களுக்கு, இப்படி ஊக்கத்தை வழங்குவதும் சரியானது தான். ஆனால், அதையே வாய்ப்பாகக் கொண்டு, “உனக்கு படிப்பு வரவில்லை என்று ஆகிவிட்டதே, இனிமேல் அதை ஏன் முயற்சிக்கிறாய்.. பிடி மண்வெட்டியை!” என்று சொல்வது எப்படி சரியாகும்.

‘‘தேர்வு மதிப்பெண் மட்டுமே ஒரு குழந்தையின் ஒட்டுமொத்தத் திறமையையோ அல்லது எதிர்கால ஆற்றலையோ தீர்மானிப்பதில்லை’’ என்று மாநிலக் கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி தெரிவித்துள்ளார். உண்மை தான்; அதனால் தான், தோல்வியுற்றவர்கள் மீண்டும் தேர்ச்சி பெற, மறு தேர்வுகள் வைக்கப்படுகின்றன. ஆனால், அதை ஒழித்துவிட்டு, தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெறலாம் என்ற வாய்ப்பை ஓரங்கட்டி, பிற திறன்கள் எனப்படும் உடல் உழைப்புத் தொழிலை நோக்கி நகர்த்துதல் என்பது அப்பட்டமான ஆரியச் சிந்தனையே ஆகும்! பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தோல்வியுற்ற பலர், முயன்று படித்து, முக்கியப் பொறுப்புகளிலும், அறிவியல் துறையிலும் உயர்ந்திருப்பதையும், முனைவர் பட்டம் பெற்றவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். எனவே, பீகார் பா.ஜ.க. அரசின், இந்தச் செயல் கண்டனத்திற்குரியதாகும். ஒடுக்கப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் கல்லூரிகளில் படிப்பதையும், அதிகாரப் பதவிகளில் அமர்வதையும் தடுக்க, தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதிதான் இந்தச் சூழ்ச்சி என்பதை நாம் அறிவோம். அந்தச் சிந்தனையை எந்த வகையிலும் தமிழ்நாடு ஏற்காது! ஏற்காது!! அதே வேளையில் சமூகநீதித் தலைவர்கள் போராடிய பீகாரிலும் இதனை எதிர்க்க அணி சேர்க்க வேண்டிய அவசியமும் உள்ளது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *