மழைக்காலங்களில் அதிக வெள்ளத்தையும், கோடைக்காலத்தில் வறட்சியையும் தடுக்க, ஆற்று நீரைச் சேமித்து, குடிநீர், விவசாயத் தேவைகளுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளவே அணைகள் உருவாக்கப்பட்டன. அதன் கூடுதல் பலனாக அறிவியல் வளர்ச்சியால் ஆற்று நீரை அணைகளில் தேக்கி அதன் மூலம் நீர் மின்னாற்றல் உற்பத்திக்கும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. இது தொழிற்துறை வளர்ச்சிக்கும், வீடுகளுக்கான மின் தேவைக்கும் பயன்படுத்த ஏதுவானது. தேக்கப்படும் நீரின் முதல் அடிப்படைப் பயன்பாடு குடிநீரும், வேளாண்மையுமே! மனிதர்களின் அடிப்படைத் தேவையை நிறைவு செய்யும் இவற்றுக்கு அடுத்துதான் மற்ற எதுவுமே! உலகம் முழுவதும் இதுதான் நடைமுறை – நியாயமும் கூட!
ஆறுகளின் பாதைகள் மனிதர்களுக்கும் முந்தையவை. மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட நாடுகளின் எல்லைகள் காலந்தோறும் மாறிக் கொண்டேயிருப்பவை. கடந்த நூற்றாண்டில் ஒன்றாக இருந்த நாடுகள், சில ஆண்டுகளிலேயே சிதறிப் போயிருக்கின்றன. நாடுகளுக்குள்ளேயே மாநிலங்களுக்குள் ஆற்று நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். இவற்றைத் தீர்த்துக் கொள்ளவே உலகம் முழுக்க ஒப்பந்தங்கள், வழிகாட்டும் மாநாட்டு முடிவுகள், விதிகள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, 1956-ஆம் ஆண்டின் மாநிலங்களிடை நதிநீர்ச் சச்சரவுகள் சட்டம் (ISRWD Act) உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின் படிதான் காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர், இன்றைய தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்மொழிந்தார்கள். அதனால் தான் அவர் தமிழர் தலைவர்! தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகள் எதுவென்றாலும் அதில் வழிகாட்டும் குரல் ஆசிரியர் அவர்களுடையது என்பது தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும்.
திராவிடர் கழகம் தொடர்ந்து அதற்காகப் போராடியது. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, அந்தக் குறுகிய காலத்திலேயே தமிழ்நாட்டின் வேண்டுகோளை ஏற்று காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் திராவிடர் கழகம் தமிழர் நலனுக்கான வழிகாட்டுதல்களை வழங்கி, அதற்கான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது – வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது. அதிலும் காவிரிப் பிரச்சினை என்பது தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நினைவூட்டியுள்ளது மட்டுமல்லாமல், யாராயினும் இதில் அரசியல் நோக்கம் கூடாது என்பதை அழுத்தந் திருத்தமாக எடுத்துச் சொல்லியுள்ளது. அரசியல் நோக்கங்களுடன் யாரேனும் நடந்துகொண்டாலும் அதனைக் கண்டித்து நெறிப்ப்படுத்தத் தவறியதில்லை. ஆனால், கருநாடகாவில் இது முழுக்க முழுக்க அரசியல் பிரச்சினையாகவே ஆக்கப்பட்டுள்ளது. போதுமான விவசாய, குடிநீர் தேவைகள் நிறைவாகி, தமிழ்நாட்டுக்கும் அதன் மூலம் கேரள, புதுச்சேரி மாநிலங்களுக்கும் கிடைக்க வேண்டிய நீரின் அளவு என்ன என்பதெல்லாம் உச்சநீதிமன்றம் வரை சென்று முடிவு செய்யப்பட்டபின், ‘மேகதாது அணைக்கட்டு’ என்ற பெயரில் மீண்டும் ஒரு பிரச்சினையைக் கையிலெடுத்து அதை அரசியல் நோக்கங்களுக்காக அங்கிருக்கும் கட்சிகள் (தேசியம் பேசும் கட்சிகள் உள்பட) பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. கடந்த 11 ஆண்டுகளாகத் தொடரும் மேகதாது அணைக்கட்டுப் பிரச்சினையைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டிய உச்சநீதிமன்றமோ, அடுத்தடுத்த கட்டங்களுக்கு கருநாடக அரசுகளை நகரவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இந்த அணைக் கட்டு உருவானால், தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நீர் சரியாகக் கிடைக்க வழி கிடையாது என்பது தெரிந்தும், அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கை, கட்டுமானத் திட்டங்களையெல்லாம் அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன? அணை கட்டுவதற்கு அனுமதி தர வேண்டியது காவிரி தொடர்பான இரண்டு ஆணையங்கள் தான் என்றாலும், அதனைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையில் என்ன தவறு? பிரச்சினையைப் பெரிதாக்கி, அதில் குளிர்காய வேண்டிய தேவை, கருநாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ஒன்றிய ஆளும் பா.ஜ.க.வுக்கு இருக்கலாம். அதுவே, அவர்கள் வகிக்க வேண்டிய நடுநிலைக்கு முற்றிலும் புறம்பானது. ஒன்றிய அரசு என்னும் தகுதிக்கும், அதன் அதிகாரத்தை சட்டப்படி செய்ய வேண்டிய கடமைக்கும் மாறானது. ஆனால், உச்சநீதிமன்றம் இத்தகைய மெத்தனப் போக்கைக் காட்ட வேண்டிய அவசியம் என்ன? பா.ஜ.க. தனது அரசியல் அபிலாசைகளுக்காக ஒரு சார்பாக நடந்து கொண்டால், அதைக் கண்டிக்க வேண்டியது அல்லவா உச்சநீதிமன்றத்தின் கடமை!
அத்துமீறுகிறது கருநாடகா; அதைக் கண்டிக்கத் தவறுகிறது ஒன்றிய அரசு; வேடிக்கை பார்க்கிறது உச்சநீதிமன்றம்! இந் நிலையில் தான், திராவிடர் கழகம் மே 31 அன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டக் களம் காணவிருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அழைப்புவிடுத்திருக்கிறார் – ஒத்த கருத்துள்ளோர் திரள்கிறார்கள். அது மட்டுமல்ல, காவிரி நீரால் பயன்பெறும் டெல்டா மாவட்டத்தினர் அனைவரும் இப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்; தமிழ்நாட்டின் குரலை ஒன்றுபட்டுப் பதிவு செய்ய வேண்டும் என்ற தமிழர் தலைவரின் அழைப்பு – அரசியல் அல்ல; வாழ்வாதாரப் பாதுகாப்பு!
