உணவு நிறுவன வரலாறு – உழைப்பின் மேன்மைக்கு ஒரு வழிகாட்டி நூல் (1)

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சுவாசிக்கும் உயிர்க் காற்றும், ( பிராண வாயும்)  உண்ணும் உணவும், இயற்கை தரும் ஊக்கமும் மனித வாழ்வின் உடல் நல பாதுகாப்புகள் ஆகும்!

இன்றைய அதிவேக வாழ்க்கை முறையிலும், குடும்பங்களில் ஆண், பெண் அனைவரும் பணிகளுக்குச் செல்லும் வளர்ச்சி நிலை வாழ்வு காரணமாகவும், வீட்டிலேயே சமைத்து உண்ணும் உணவுப் பழக்கம் பெரிதும் மாறி வருகிறது!

இப்படி வெளியில் உணவுப் பண்டங்களை –  உணவகங்களில் வாங்கி சாப்பிடும்போது அது நமது உடல் நலத்திற்கு கேடு செய்யாத வகையில்அமையும் உணவுகள், சிற்றுண்டி, பேருண்டி, நொறுக்குத் தீனி எவையானாலும் உணவகங்களில் வாங்கிச் சாப்பிட வேண்டிய  நிர்பந்தம் தவிர்க்க முடியாதவைகளாக உள்ளன.

அதற்கு நல்ல சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட, சுவைகுன்றாமல் எப்போது தயாரிக்கப்பட்டது, எது நாள் வரை அவற்றைப் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு ஊறுநேராது என்பதுபோன்ற தகவல்களை, விற்கப்படும் பொருள்மீதே அச்சிட்டு வழங்குவது, அன்றாடம் தயாரிப்புகளிலும் மிகவும் கவனம் செலுத்தி வளர்ந்தோங்கியுள்ள ‘‘பிரபல’’ புகழ் வாய்ந்த உணவகங்களில் முதன்மை வரிசையில் முன் நிற்பது ‘அடையாறு ஆனந்தபவன்’ என்ற மிகச் சிறந்தஉணவுத் தயாரிப்பு நிறுவனமாகும்.

நம் நாட்டு எல்லையைத் தாண்டி உலகத்தின் பல்வேறு முக்கிய பெரு நகரங்களில் இந்தஉணவகம், உண்ணுவோரின் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பதைக் கடந்த சுமார்  2 ஆண்டுகளாக அறிந்து, வியந்து, மகிழ்ந்து ஒன்றாக ‘அடையாறு ஆனந்தபவன்’ என்ற ‘மாடல் உணவகம்’ அமைத்து காட்சி அனுபவத்தையும்,  சுவையும், சுகாதாரமும் இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வாடிக்கையாளர்களை வரவேற்று உபசரிப்பதை நேரில் கண்டு, உண்டு, உணர்ந்தேன்.

ஆஸ்திரேலியாவின் முக்கிய பெரு நகரங்களான ‘சிட்னி’ (Sydney)  ‘மெல்பேர்ன்’ (melbourne) ஆகிய உலகப் புகழ் வாய்ந்த நகரங்களில் அந்தந்த கிளைகளுக்கே தோழர்களுடன் சென்று பசியாறி திரும்பியபோது  பெருமிதம் கொள்வேன். காரணம் நானும் அடையாறு வாசி அல்லவா!… சுமார் 60 ஆண்டுகளுக்குமேல்! என்பதால் மட்டுமல்ல, எளிய நிலையில் இருந்து கடும் உழைப்பால் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி, வாழ்வில் ஏற்பட்ட இடுக்கண்கள், தடைகளைத் தாண்டி  தளராத தன்னம்பிக்கை, தயங்காத தொடர் உழைப்பாக, வெற்றியோடு தன்னடக்கம், உணவில் புதிய புதிய ஆய்வு முறைகளைப் புகுத்தி, வாடிக்கையாளர்களை ‘சுண்டி’ இழுக்கும் வழக்கமான தொழில் முறையையும் தாண்டி, புதுப்புது ‘உத்திகளை ஆய்வு நோக்கில் செய்து, தொழிலில் வெற்றி மேல் வெற்றி என்பதைக் கண்டு வரும் உலகம் வியக்கும் அந்த உழைப்புக் குடும்பத்தின் சாதனைகளை, தொழில் தொடங்குவோர், தொழிலில் பல சோதனைகளையும், இக்கட்டுகளும், இடர்களும் சுழன்றடிக்கும் ‘சுனாமிகள்’ போல் வந்தாலும் மனந்தளராது, தொடர்ந்து முயற்சி, விடா முயற்சி என்ற பந்தயக் குதிரைகள் மீதேறி சலிப்பற்று சவாரி செய்து ‘இலக்கு ஒன்று மட்டுமே எமது குறி’ என்று உழைப்புத் தேனீக்களாக அடையாறு ஆனந்தபவன் நிறுவனத்தின் –  அந்த ஆலமரத்தின் வெற்றிக்கு வேராகவும், விழுதாகவும்  உள்ளவர்கள்பற்றி அறிந்தால், அதுவே இன்றைய, நாளைய இளைய சமூகத்தின் தொழில் தொடங்கி நடத்துவதில் வெற்றியடைவது எப்படி என்று ‘தவிக்கும்’ பலருக்கும் வழிகாட்டும் கலங்கரை வெளிச்சம்போல், அந்த நிறுவனங்கள் போற்றுதலுக்குரிய மதிப்புறு, தமிழ்த்திரு கே.எஸ்.ஆனந்தராஜா அவர்களைப் பற்றிய ஒரு நூலை – ‘இனிப்பின் வெற்றி’என்ற தலைப்பில் எழுத்தாளர் லட்சுமி பிரபா அவர்கள் எழுதியதை படித் தேன் – மகிழ்ந் தேன். இது பலரும் கற்க வேண்டிய ஒரு தொழில் உலகத்திற்கான பாட நூல், ‘எழுத்துத் திலகம்’ என்ற பட்டம்  இந்த நூலாசிரியருக்கு மிகவும் பொருத்தம் என்பதை மறுக்க வொண்ணாத ஒன்று.

‘தந்தை மகற்காற்றும் நன்றி’ –

‘மகன் தந்தைக்காற்றும் உதவி’

என்ற குறளாசானின் குறிப்புகளுக்கு  ஏற்ப அவரின் தந்தையை தமது வழிகாட்டி, ஆசான் எனக் கொண்டு, தந்தை சொல் மிக்க ‘மந்திர’மில்லை என்று நடந்ததோடு, தடம் மாறாது; ‘தம்மின், தம் மக்கள், அறிவுடைமை’ என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் அவரதுஅன்பு மகன்கள் – பெருமைமிகு உழைப்புத் தேனீக்களான கே.டி. சீனுவாசராஜா, கே.டி.வெங்கடேசராஜா ஆகியோர்தம் ஆளுமை   அறிவும், செறிவு நிறைந்த துணிவும், கனிவும் பாராட்டிப் போற்றத்தக்கவை.

மேலும் பல செய்திகள் நாளை.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *