நீட் தேர்வு ஒழியும்வரை போராடுவோம்; EWS என்பதையும் எதிர்த்துப் போராடுவோம்!
‘இட ஒதுக்கீடு இல்லாத இந்தியா’ என்று அவர்கள் சொல்கிறார்கள்; நாங்கள் சொல்வது, ‘ஜாதி இல்லாத இந்தியாவை’ உருவாக்குவோம்!
தாம்பரம், செப்.2 நீட் தேர்வு ஒழியும்வரை போராடுவோம்; EWS என்பதையும் எதிர்த்துப் போராடுவோம். வேறு ரூபத்தில் வந்தாலும், போராடுவோம். இட ஒதுக்கீடு இல்லாத இந்தியா என்று அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் சொல்வது, ஜாதி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இருசக்கர வாகனப் பரப்புரை – நிறைவு விழாப் பொதுக்கூட்டம் – தமிழர் தலைவர் சிறப்புரை!
‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் 22.8.2026 முதல் 25.8.2026 ஆகிய நான்கு நாள்கள், ஆறு குழுக்களாக நடைபெற்றது. இருசக்கர வாகனப் பரப்புரையின் முதல் குழுவின் பிரச்சாரப் பயண நிறைவு விழா தாம்பரம் மாவட்டக் கழகம் சார்பில், கடந்த 25.8.2026 அன்று மாலை மேற்குத் தாம்பரம் பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து, பயணக் குழுவினரைப் பாராட்டி சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
இட ஒதுக்கீட்டை ஒழிக்கலாம் என்று நினைத்தார்கள்!
இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்காகவும், பார்ப்பனர்களே அதை அனுபவிக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள். ஆனால், அவர்களால் இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடிய வில்லை. அஸ்திவாரம் பலமாக இருக்கிறது. இதில் கையை வைத்தால், பாம்புப் புற்றுக்குள்ளே கை வைத்ததுபோன்று ஆகும் என்பதை அனுபவத்தில் புரிந்துகொண்டார்கள். அதனால் என்ன செய்தார்கள் என்றால், அவர்களுக்குக் கொடுக்கின்ற பங்கை எடுங்கள், பத்து ஆண்டுகள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, முதலில் பொருளாதார அளவுகோலை உள்ளேவிட்டு, பிறகு யாருக்குமே இல்லாத அளவுக்கு, ஆக்கவேண்டும் என்று நினைத்தார்கள். அதே மாதிரி, கிரீமிலேயர் என்றார்கள். கிரீமிலேயர் என்றால், முதலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு. இப்பொழுது அடுத்தது என்ன என்பதையும் சொல்லிவிட்டார்கள், எஸ்சி எஸ்டி என்றால், புரிந்துகொள்ளவேண்டும்.
காந்தியார் பெயரினைக் கொண்ட திட்டத்தை ஒழித்துவிட்டார்கள்!
ஒரு தெருவில் உள்ள கடைசி வீட்டில் தீப்பிடிக்கும் போது, என் வீடு கடைசியாகத்தானே இருக்கிறது என்று நினைத்தால், அவனை விட பைத்தியக்காரன் வேறு கிடையாது. அது மாதிரி, அது ஓபிசி தானே என்று நினைத்தார்கள். இன்றைக்கு என்ன சொல்கிறார்கள், எஸ்சி, எஸ்டிக்கு உள்பட, மலைவாழ் மக்களுக்கு உள்பட, அவர்களுக்கும் இந்தக் கிரீமிலேயர் வர வேண்டும் என்கிறார்கள். என்னய்யா, அர்த்தம்! ஆகவே கிருமிதான் முக்கியமே தவிர, லேயர் முக்கியம் அல்ல. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை உண்டாக்கினார்கள். இன்னொரு செய்தி உங்களுக்குச் சொல்கிறேன், இப்போது ‘மகாத்மா காந்தி 100 நாள் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாங்க அந்த 100 நாள் திட்டதில் உள்ள காந்தியார் பெயரை எடுக்க வேண்டும். அதனால்தான் காந்தியார் பெயரினைக் கொண்ட திட்டத்தை ஒழித்துவிட்டார்கள். காந்தியாரைச் சுட்டுக் கொன்றதைவிட ஆபத்து இது. ஏனென்றால், இரட்டை வேடம் போடுவார்கள். அடுத்தபடியாக ரூபாய் நோட்டில் காந்தியார் இருக்கிறார். அதிலிருந்து அவர் எப்பொழுது போகப் போகிறார் என்று தெரியவில்லை. இப்பொழுது பா.ஜ.க. என்ன சொல்கிறது, ஒரே தேர்தல், ஒரே நாடு என்று. அப்படி அது வந்துவிட்டால், ரூபாய் நோட்டில் காந்தி இருக்கமாட்டார்; அதற்குப் பதிலாக கோட்சேவை ஒருவேளை போட்டாலும் போடுவார்கள்.
உயர்ஜாதி ஏழைகள் என்று சொல்லக்கூடிய அந்தத் திட்டத்தில், Below the Poverty Line – அதாவது வறு மைக் கோட்டுக்கு கீழே என்று ஒரு புள்ளி விவரத்தை எடுக்கிறார்கள். வறுமைக் கோடு என்பது என்ன? கிராமப்புற மக்களில், நாள் ஒன்றுக்கு 27 ரூபாய் சம்பாதித்தால், அவர்கள் அந்த வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறவர்கள் என்று அர்த்தம். அதேபோல, நகரத்தில் உள்ளவர்கள் 33 ரூபாய் சம்பாதித்தால், நகர்ப்புற ஏழைகள் என்று அர்த்தம்.
‘‘எங்கள் தோழர்கள் துறவிக்கும் மேலானவர்கள்’’ – தந்தை பெரியார்!
உயர்ஜாதி ஏழைகளுக்கு எவ்வளவு தெரியுமா? 27 ரூபாய் நாள் ஒன்றுக்கு கிராமப்புறம்; 33 ரூபாய் நாள் ஒன்றுக்கு நகர்ப்புறம். ஆனால், இவர்களுக்கு EWS எனப்படுபவர்களுக்கு மட்டும், எங்கே இருந்தாலும் 2,500 ரூபாய் ஒரு நாளைக்கு. இது எவ்வளவு பெரிய அக்கிரமம்? இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்வதற்கு ஆள் இல்லை, திராவிடர் கழகத்தை விட்டால்! உங்க ளுக்கு விளக்கிச் சொல்வதுதான் எங்களுக்கு வேலை. எங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. பதவி தேவையா, எங்களுக்கு? கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கூட பதவிக்குப் போவோமா? இப்பொழுது படுகின்ற அவஸ்தைகளைப் பார்த்தால். மானத்தோடு, மரியாதையோடு இருக்கக்கூடிய ஓர் இயக்கம்; இந்தப் பதவிக்கு போகாததால். அது மட்டுமல்ல, பெரியார் சொன்னார், ‘‘எங்கள் தோழர்கள் துறவிக்கும் மேலானவர்கள்’’ என்றார்.
ஏனென்று சொன்னால், ஒரு துறவியிடம் சென்று, ‘‘ஏன், நீங்கள் துறவி ஆனீர்கள்’’ என்று கேட்டால், ‘‘நான் மேல் உலகத்திற்குப் போகவேண்டும்’’, ‘‘இறந்தவுடன் மோட்சத்திற்குப் போகவேண்டும், அதற்காகத்தான் நான் துறவி ஆனேன்’’ என்று சொல்வார்.
எந்தப் பதவிக்கும் போகாத
ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான்!
ஆகவே, சிவலோக பதவி, வைகுந்த பதவி என்று, மேல்சபை, கீழ் சபை வைத்திருக்கிறார்கள் நம்மூரில். எந்தப் பதவிக்கும் போகாத ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான். போராட்டம் எங்கள் ரத்தவோட்டம். எங்களுக்குப் பதவி சாதாரண விஷயம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இவ்வளவு பெரிய அளவுக்கு இந்த மக்களை ஏமாற்றி, நம்முடைய பங்கை, அவர்கள் பறித்திருக்கிறார்கள். 10 சதவீதம் தானே என்று நினைக்காதீர்கள். முதலில், 10 சதவீதம் என்பார்கள். பிறகு, இட ஒதுக்கீடு தேவையில்லை என்பார்கள். அடுத்த கட்டம் எஸ்சி எஸ்டி அவர்களுக்கும் இந்தப் பொருளாதார அடிப்படை வர வேண்டும் என்று சொல்லி, அவர்களையும் அந்தக் கூண்டுக்குள்ளே தள்ள வேண்டும் என் நினைக்கிறார்கள்.
இப்பொழுது வடநாட்டில் வெளிப்படையாவே ஓர் இயக்கம் வந்திருக்கிறது. கரப்பான் பூச்சி இயக்கத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது இன்னொரு இயக்கம். புனேவில் தொடங்கியிருக்கிறார்கள். அதுதான், சித்பவன் பார்ப்பனர்கள் இருக்கிற ஆர்எஸ்எஸ்சினுடைய பாசறைக்கு முதலில் அஸ்திவாரம் போட்ட இடம். பிறகு நாக்பூருக்குப் போயிற்று.
இட ஒதுக்கீடு இல்லையென்றால்
என்ன ஆகும்?
அவர்கள் இன்றைக்கு என்ன சொல்கிறார்கள் என்றால், ‘‘ரிசர்வேஷன் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.’’ இந்தியாவில் இட ஒதுக்கீடே கூடாது என்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? இந்த இட ஒதுக்கீடு இல்லையென்றால் என்ன ஆகும்? ஏன் இட ஒதுக்கீடு? உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்கி றேன். இங்கே வரும்போது பார்த்தேன், தாம்பரம் மருத்துவமனை முன்பு எப்படி இருந்தது? நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் எவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார் என்று பார்க்க முடிந்தது. கம்பீரமாக அந்தளவிற்கு இருக்கிறது.
மருத்துவமனையில்
இரண்டு வகையான படுக்கைகள்!
மருத்துவமனைக்குப் போனால் உங்களுக்குத் தெரியும். மருத்துவமனையில் இரண்டு வகையான படுக்கைகள் இருக்கிறது. ஒன்று, சாதாரணமான நோய் வந்தவர்களைப் பார்ப்பதற்காக – கவனிப்பதற்காக ‘ஜெனரல் வார்டு’ பொதுப் படுக்கைகள் உள்ள ஒரு பகுதி. இன்னொன்று, நோய் மிகத் தீவிரமாக இருக்கிறது; கிரிட்டிக்கல், டேஞ்சரஸ் என்று வரக்கூடியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 24 மணி நேரமும் கண்காணிக்கிற பகுதி அது. அதற்குப் பெயர் இன்டென்சிவ் கேர்வார்டு – தீவிர சிகிச்சைப் பிரிவு. அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு யாரைக் கொண்டு போக வேண்டும்? நோய் முற்றிப் போனவர்களைக் கொண்டு போக வேண்டும். உயிருக்கு ஆபத்தாக இருக்கிறவரைக் கொண்டு போக வேண்டும். அதுதான் காலங்காலமாக உரிமை மறுக்கப்பட்டவர்களுக்குக் காம்பன்சேட்டரி ஜஸ்டிஸ் என்கிற மாதிரி, கொஞ்சம் கொடுப்பதற்காகத்தான் இந்த இட ஒதுக்கீடு. அதுவும் எல்லா மாநிலங்களிலேயும் இல்லை. நாம் போராடித்தான் இப்பொழுது எல்லாப் பகுதிகளுக்கும் வரக்கூடிய அந்த வாய்ப்பு இருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
உயர்ஜாதி ஏழை என்றால், யார்?
அப்பேர்ப்பட்ட அந்த வாய்ப்பில் மிகப்பெரிய அளவிற்கு வரக்கூடிய வளர்ச்சிகளை, ஒரு சிறப்பான சூழ்நிலைகளை எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்மாள் என்ன சொல்கிறான், EWS என்று சொல்லக்கூடியதில் என்ன சொல்கிறார்கள் என்றால் உயர்ஜாதி ஏழைகள் என்கிறார்கள். அது என்ன, உயர்ஜாதி ஏழைகள்? உயர்ஜாதி ஏழை என்றால், யார் என்பதற்கு உங்களுக்கு உதாரணத்திற்குச் சொல்கிறேன். அதிகமாகச் சாப்பிட்டுவிட்டோம். அதனால் நிறைய கொழுப்பு சேர்ந்துவிட்டது. அந்தக் கொழுப்பையெல்லாம் கொஞ்சம் குறைக்கவேண்டும் என்று நினைக்கிறவர்களைக் கொண்டு போய், அய்.சி.யூ.க்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. அதற்குச் சாதாரணமான ட்ரீட்மெண்ட்டே போதும். அதுபோன்று எதற்கு உங்களுக்கு இட ஒதுக்கீடு?
இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்களுக்காக முதன் முதலில் வகுத்தது மனுதர்மம்தான்!
அதே நேரத்தில், காலங்காலமாக உழைத்து உழைத்து, ஓடாய் தேய்ந்து போனவர்களுக்கு, ஒரு தலைமுறை, இரண்டு தலைமுறை, மூன்று தலைமுறை; எண்ணிப் பாருங்கள், 5000 ஆண்டுகளாக மறுக்கப்பட்டது. இன்னும் கேட்டால், ஒருபடி மேலே போய் என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்; இட ஒதுக்கீட்டை கேட்டு முதன் முதலில் போராடத் தொடங்கியது யார் என்றால், திராவிடர் கழகம் அல்ல; நீதிக் கட்சி அல்ல; முதன் முதலில் மனுதர்மம்தான் வகுத்தது. எங்களுக்கு – பார்ப்பனர்களுக்கு நல்ல வாய்ப்பான இடம் வேண்டும்; உங்களுக்கு எங்கும், எதிலும் கீழேதான், கடைசியில்தான் இடம் என்று சொன்னது மனுதர்மம். ஆகவே, இந்த மனுதர்மத்தை மீண்டும் புதுப்பிக்கின்ற ஏற்பாடுதான் நீட் தேர்வு; மீண்டும் உருவாக்கக் கூடியதுதான் EWS. இதை ஒழிக்காமல் விடமாட்டோம்.
21 ஆண்டுகள் தொடர்ந்து எதிர்த்திருக்கிறோம்!
சிலர், நினைக்கலாம், ‘‘என்னங்க, அவை அமலுக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆயிற்றே, அது நிலைத்துப் போய்விட்டதே’’ என்று நினைக்காதீர்கள். எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வு என்பதை, 21 ஆண்டுகள் தொடர்ந்து எதிர்த்திருக்கிறோம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும். கடைசியில் வெற்றி பெற்றோம்.
ஒன்றிய அமைச்சரை மாற்றுவதால்
எந்தப் பயனும் இல்லை!
முதலில், தமிழ்நாடுதான் உணர்ந்தது; அப்புறம் கருநாடகா, அப்புறம் ஆந்திரா, அப்புறம் கேரளம், அப்புறம் வடநாடு. இப்பொழுது எல்லோரும் உணர்ந்ததி னால்தான் தான், டில்லியில போராட்டம் நடந்திருக்கிறது. இங்கே நம்முடைய துணைப் பொது செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சொன்னதுபோன்று, இதை திசை திருப்பிவிட்டார்கள். அது என்னவென்றால், ஊழலா? சரி ஒன்றிய அமைச்சரை மாற்று. அமைச்சரை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. அதே ஆட்சி. இன்னொரு அமைச்சர் வருகிறார். ஏற்கெனவே இருந்த தர்மேந்திர பிரதான், பார்ப்பனரல்லாதவராக இருந்தார். இப்பொழுது பிரகலாத் ஜோஷி என்று இன்னொரு பார்ப்பனர் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
ஆகவே, நம் ஊரில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், ‘‘கத்தி போச்சு, வாலு வந்தது டும் டும்’’ என்று, அதுபோல ‘‘பிரதான் போனார்; பிரகலாத் ஜோஷி வந்தார் டும் டும் டும்’’ அவ்வளவுதான். ஆகவேதான், முழுக்க முழுக்க இது ஒரு சூழ்ச்சி; இதை அத்தனையும் விளக்கிச் சொல்வதுதான் எங்களுடைய வேலை. அதற்காக நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். தமிழ்நாட்டில் வந்துள்ள புதிய அரசு, சட்டப்பேரவையில் ‘‘நாங்களும் நீட் தேர்வை எதிர்க்கிறோம்’’ என்று தீர்மானம் போட்டார்கள்.
நாளைக்கு என்ன நிலை என்று தெரியாது!
அதே மாதிரி, தமிழ்நாட்டில், உயர்ஜாதி ஏழைக ளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், செயல்படுத்த மாட்டோம் என்று முதுகெலும்போடு கடைசி வரையில் சொன்ன ஒரே ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி. காரணம், திராவிடர் கழகமான தாய்க் கழகம் தெளிவாக சொல்லியது; ‘‘அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’’ என்று அதில் அவர்கள் உறுதியோடு இருந்தார்கள். இப்பொழுது அதே நிலை – இதுவரையில், இந்த ஆட்சியிலும் தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நாளைக்கு என்ன நிலை என்று தெரியாது. இந்நிலை தொடரவேண்டும். மறுபடியும் அதற்கு நீங்கள் இடம் கொடுத்தால், நீங்க ளும் அந்த மிகப்பெரிய ஆபத்தான எதிர்ப்பைச் சந்திப்பீர்கள் என்று, நான் ஆட்சியாளர்களுக்குச் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்
ஆகவே. நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவை அத்தனையும் எங்களுக்காக அல்ல தோழர்களே! உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்கா கத்தான். ‘ஜென்–சி, ஜென்–சி’ என்று சொல்கிறீர்களே, அந்த ஜென்–சி எல்லாம் டாக்டர்களாக வேண்டாமா? அவர்கள் எல்லாம் வழக்குரைஞர்களாக வேண்டாமா? ஒரு நீட் தேர்வை வைத்தவுடனே, உள்ள நுழைந்தார்கள், கொஞ்சம் அகலமாக. ஒரு சின்ன ஓட்டை போட்டால், அந்த ஓட்டையை அகலமாக்கி, யானையையே உள்ள தள்ளிடுவான். அது மாதிரி, இப்பொழுது என்னாயிற்று என்றால், முதலில் நீட் தேர்வு, அப்புறம் க்யூட் தேர்வு, அப்புறம் நெக்ஸ்ட் தேர்வு. தேர்வு, தேர்வு என்று சொல்லி, பள்ளிக்கூடத்துக்கே வேலை கிடையாது. இதற்கு என்ன அர்த்தம்? அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள், நாமெல்லாம் தலையாட்டி கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்?
மக்கள் மன்றம்தான் இறுதியானது!
எனவேதான், மக்கள் மன்றம்தான் இறுதியானது. அந்த மக்கள் மன்றத்துக்கு அறிவுரை சொல்ல வேண்டி யது எங்கள் வேலை. மக்கள் மன்றத்தைத் தயாரிப்பது எங்கள் வேலை.
தந்தை பெரியார் சொன்னார், ‘‘என்னுடைய போராட்டம் எதுவுமே தோற்றதே கிடையாது; வெற்றி வேண்டுமானால், கொஞ்சம் தாமதமாகலாம்’’ என்று.
ஜாதி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்!
நீட் தேர்வு ஒழியும்வரை போராடுவோம்; அதேபோல, EWS என்பதையும் எதிர்த்துப் போராடுவோம். வேறு ரூபத்தில் வந்தாலும், போராடுவோம். இட ஒதுக்கீடு இல்லாத இந்தியா என்று அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் சொல்வது, ஜாதி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். இதுதான் அதற்குக் கவுட்ண்டர்.
எனவே, பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, நீங்கள் எல்லோரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்காக அல்ல; உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக, உங்கள் பேரப் பிள்ளைகளுக்காகதான் நாங்கள் போராடுகிறோம்.
நீட் தேர்வின் கொடுமையை நாடு முழுவதும் விளக்கிச் சொல்வதற்காக ஆறு குழுக்கள். எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள். அடையாளம் தெரியாத அளவிற்கு நம்முடைய பல பெண்கள் பங்கேற்று இந்தப் பிரச்சாரப் பயணத்தை சிறப்பானதாக ஆக்கியி ருக்கிறார்கள். பெரியார் அதிலும் வெற்றி பெற்றார்.
பெண் என்றால், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று இருக்கவேண்டும் என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, மக்களுக்கு அறிவுறுத்துவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
சென்னையிலிருந்து சென்ற குழுவில் பங்கேற்றோர் ஆண்கள் 28 பேர்; பெண்கள் 11 பேர்.
நல்ல அளவுக்கு நம்முடைய பிரச்சாரம் போயிருக்கிறது: தந்தை பெரியார்!
இந்தக் குழுவில் மட்டும் புத்தக விற்பனை 15,921 ரூபாய். தந்தை பெரியார் அவர்கள், கூட்டத்தில் உரையாற்றிவிட்டு, மூச்சு வாங்க வேனில் ஏறும்போது கேட்பார், எவ்வளவு ரூபாய்க்கு புத்தகம் விற்றது என்று. சில பேர் நினைப்பார்கள், பெரியாருக்குப் பணத்தாசை பாருங்கள் என்று. உண்மை அதுவல்ல. ஓகோ, 400 ரூபாய்க்கு விற்றதா? நல்ல அளவுக்கு நம்முடைய பிரச்சாரம் போயிருக்கிறது. இது பல பேருக்குப் போகும் என்று சொல்வார்.
பயணித்து உரையாற்றிய இடங்கள் 31. பயணித்த தொலைவு 360 கிலோ மீட்டர். வினியோகித்த துண்ட றிக்கைகள் பத்தாயிரம். இதை நாங்கள் செய்கிறோம்; உங்களுக்காகப் பாடுபடுகிற இயக்கம். மற்றவர்கள் தேர்தல் நிற்கிறார்கள். தேர்தலும் முக்கியமாக இருக்கலாம். ஆனால், அதைவிட தலைமுறை முக்கியம். இந்தத் தலைமுறை காப்பாற்றப்பட வேண்டும்.
எனவே தோழர்களே, சிறப்பாக இந்த ஏற்பாடுகளை செய்த தாம்பரம் மாவட்ட தோழர்களுக்கு எங்களுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி!
வாழ்க பெரியார்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
