கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா கிராமம் ஒன்றியங்கள் சார்பில், 3.2.1945 இல் ‘‘தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாணவர் மாநாடு” நடைபெற்ற புதுப்பேட்டையில், 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, “திராவிடர் கழக திறந்தவெளி மாநாடு” நடைபெற்றது. 81 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பகுத்தறிவு சிறுவன் கி.வீரமணி, இன்று 94 ஆம் வயதை எட்டப்போகும், திராவிடர் கழகத் தலைவராக; தமிழர் தலைவராக; தகைசால் தமிழராக, ‘விடுதலை’ ஆசிரி யராக, மிகச்சிறந்த நிர்வாகியாக பல்வேறு பரிமாணங்கள் எடுத்த பிறகு, அதே பண்ருட்டி புதுப்பேட்டைக்குப் பேச வருகிறார் என்பது மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை உண்டாக்கியிருந்தது. மக்கள் இதை எதிர்பார்த்து காத்திருந்திருக்கின்றனர். இதற்குக் கட்டியம் கூறுவதைப் போலவே, மாநாட்டுக்கான விளம்பரப் பதாகைகளும், ஆங்காங்கே கட்டப்பட்டும், கழகக் கொடி களும், சாலைகளின் இருபுறமும் பட்டொளி வீசிப் பறந்துகொண்டுமிருந்தன.
அதன் தொடர்ச்சியாகவே, கழகத் தலை வர் மாலை 7.15 மணிக்கு அங்கே வருகை தந்த போது, வாத்திய இசை முழங்க எழுச்சிகரமாக வரவேற்பு வழங்கப்பட்டது. குறுகலான அந்தப் பகுதியில் போக்கு வரத்தும் சிறிது நேரம் முடங்கியே விட்டது. புதுப்பேட்டையில் உள்ள, பேட்டைத் தெருவில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு கழகத் தலைவர் நீண்ட தூரம் நடந்துவந்து மேடையேறுகிற அளவுக்கு மக்கள் அந்த சாலையையே அடைத்தவாறு நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். மயிர்க்கூச்செறியும் வகையில் வரவேற்பு ஒலி முழக்கங்கள் எழுச்சிகரமாக இருந்தது. பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பற்றி சில வியப்பான தக வல்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். ஒளிப்படக் கலைஞர்கள் மேடையில் நடைபெற்றக் கொண்டிருக்கும் காட்சி களைப் பதிவு செய்யும் முனைப்பில் இருந்தனர்.
அப்போது பின் வரிசையில் இருந்த வயதான ஒருவர், தனக்கு முன்னால் அமர்ந்திருப்பவரிடம் சொல்லி, ஒளிப்படக் கலைஞர்களை விலகியிருக்கும்படி வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தார். அவர் சற்று கூடுதல் பரபரப்புடன் காணப்பட்டார். மக்கள் நெரிசல் காரண மாக ஒளிப்படக் கலைஞர்களுக்கு விலகி நிற்பதற்கு சாத்தியப்படாததாக இருந்தது. சற்று நேரத்தில் கழகத் தலை வருக்கு ஆடையணிவித்து மரியாதை செய்வதற்காக, முன் வரிசை நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்கள் எழுந்து மேடைக்குச் சென்றனர். அப்போது, பின்னால் இருந்த அந்த வயதானவர் சிரமப்பட்டு எழுந்து வந்து, ஒளிப்படக்கலைஞர்களை இடித்தவாறு சிரமத்துடன் முன்வரிசை நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டு மேடையை; குறிப்பாக கழகத் தலைவரை வியப்பும், மலர்ச்சியும் கலந்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, பொதுச்செயலாளர் பேசி முடித்து, கழகத் தலைவர் பேசிக்கொண்டிருந்தார். இடை யில் பொதுச்செயலாளர் தனக்கு வந்த ஒரு துண்டுச் சீட்டை கழகத் தலைவரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கிப் படித்தார்.
“இப்போது மிகப்பெரிய மகிழ்ச்சி என்ன வென்றால், இதை எனக்கு எழுதிக்காட்டி யிருக்கிறார்கள். தந்தை பெரியார் தலை மையில் நடைபெற்ற, திராவிடர் கழக புதுப்பேட்டை மாநாட்டில் பெரியார் உரை யைக் கேட்ட தோழர் அய்தர் அலி, வயது 92. இந்தக் கூட்டத்தில் இருக்கிறார் என்று இதில் எழுதப்பட்டிருக்கிறது” (தனது பெயர் உச்சரிக்கப்பட்டதும் கூட்டத்திலிருந்த அய்தர் அலி எழுந்து நின்றுவிடுகிறார். பின் வரிசையிலிருந்து சிரமப்பட்டு வந்து முன் வரிசையில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர்தான் அய்தர் அலி! அனிச்சை யாகவே மக்கள் அனைவருமே அவரைப் பார்த்தனர்) இத்தகைய காட்சிகளைக் கண்டதும் உணர்ச்சிப் பெருக்குக்கு ஆளாகியிருந்த மக்கள், பலமாகக் கைக ளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். கழகத் தலைவரும் மிகுந்த உற்சாகத்துடன் காகிதத்துண்டிலிருந்து பார்வையை உயர்த்தி, அவரை அடையாளம் கண்டு கொண்டு, கைகளாலும், வாயாலும் “அய்யா வாங்க, வாங்க, மேலே வாங்க. அவருக்குச் சிறப்பு செய்யணும்” என்று சொன்னதும், மேடையில் உள்ளவர்கள், மக்கள் மத்தியிலும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அனைவரின் முகங்களும் வசீகரமான புன்னகையைச் சுமந்துகொண்டிருந்தது.
கழகத் தலைவர் தொடர்ந்து பேசினார். “அதாவது, தந்தை பெரியார் பேசியதைப் பார்த்த 92 வயதுடையவரும் இங்கே இருக்கிறார். மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய எங்களைப் போன்றவர்களும் இருக்கிறோம்” என்று பூரிப்புடன் கழகத் தலைவர் சொன்னதும், கைதட்டல்கள் பறந்தன. “நாம் சொல்லிக் கொண்டிருப்பதற்கு சாட்சியாக ஒருவர் இருக்கிறார்” என்று சொன்னபடியே, கழகத் தலைவர் எழுந்தார். அதற்குள் அய்தர் அலியும் மேலே வந்துவிட, அவரை உற்சாகம் மேலிட பார்த்த கழகத் தலைவர், அவர் அணிந்திருந்த தி.மு.க. கரை போட்ட துண்டைத் தூக்கிக் காட்டி, “அவர் போட்டிருக்கிற துண்டும் சிறப்பானது” என்று சொல்ல, அங்கே உற்சாகமும், சிரிப்பும் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தன. தொடர்ந்து, “உங்கள் சார்பாகவும், எங்கள் சார்பாகவும் அவர் 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்” என்று கூறியபடியே அவருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து, மேடையிலேயே அமரும்படி சைகை காட்டிவிட்டு, தொடர்ந்து பேசினார். அய்தர் அலி, ஆசிரியரை வியப்புடன் பார்த்தவாறே இருந்தார்.
கூட்டம் முடிந்ததும், அய்தர் அலி அவர்களிடம் பேசிய போது, “புதுப்பேட்டை யில் இப்போதிருக்கும் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ இருக்கும் இடத்தில்தான் அன்றைக்குக் கூட்டம் நடந்தது. பெரியார் பேசியதையும், கேட்டேன். இன்றைக்குப் பேசிய ஆசிரியர் வீரமணி அவர்களின் பேச்சையும் அன்றைக்குக் கேட்டேன்” என்று பெருமிதத்துடன் சொன்னார். கலைந்து சென்று கொண்டிருப்பவர்கள் அவரைக் கூடுதல் கவனத்துடன் பார்த்தும், சிலர் அதுகுறித்து பேசியபடியும் உற்சாகத்துடன் கலைந்து சென்றனர்.
