
காத்மண்டு, ஆக. 27 நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில் இதுவரை 157 பேர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதில் 105 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் ரசுவா மாவட்டத்தில் போட்டே கோசி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சற்றும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 157 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதில் 105 பேர் இந்தியர்கள்.
மாயமான வெளிநாட்டவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 105 இந்தியர்களை காணவில்லை. இவர்கள் சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ், லீஃப் ஹாலிடே போன்ற சுற்றுலா முகவாண்மை மூலம் சென்றவர்கள் என்று தெரிகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள அரசு மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஆனால், வெள்ள நீர் மட்டம் அதிகமாக உள்ள இடங்களில் ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியவில்லை.
இதற்கிடையில், சுற்றுலாப் பயணிகள் குறித்த விவரங்களை அறிய 1234 என்ற கட்டணமில்லை அவசர எண் 1144 என்ற (ஹாட்லைன்) எண், 98512 89445 என்ற சுற்றுலாக் காவல் துறை தொடர்பு எண் ஆகியனவற்றை நேபாள சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.
தமிழர்கள் நிலவரம்
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 சுற்றுலாப் பயணிகளின் நிலை குறித்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போனவர்களை விரைவாக மீட்கும் பணியில் மூத்த அரசு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 57 சுற்றுலாப் பயணிகளில், 20 பேர் குறித்த விவரங்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ரேவதி தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “20 பேர் குறித்த விவரங்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது. மீதமுள்ளவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து தற்போது எங்களுக்குத் தெரியவில்லை; கூடுதல் தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம். அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 11 பேர் பெண்கள் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
