டேராடூன், ஆக.22- உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தபோது, மாணவி ஒருவர் வீரமாக எழுந்து லஞ்சப் புகாரை கூறியிருந்தார். ஆனால், இது தொடர்பான காட்சிப் பதிவு நிகழ்வு ஒளிபரப்பில் நீக்கப்பட்டதாகவும், அரசின் மற்ற சமூக ஊடகங்களின் பக்கங்களில் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
டேராடூனில் உள்ள சிஎன்அய் பெண்கள் பள்ளியில் நேற்று (21.8.2026) ‘முதலமைச்சர் இளைஞர் மாணவர் கலந்துரையாடல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் தாமி பங்கேற்றிருந்தார்.
மாணவியின் புகார்
இந்த நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் லஞ்ச புகார் குற்றச்சாட்டை முன்வைத்திருந்து பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. டேக்வாண்டோ விளையாட்டில் ஜம்முவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் தான் தங்கப் பதக்கம் வென்றதாகவும், ஆனால் பன்னாட்டுப் போட்டியில் விளையாட முயன்றபொது ரூ.1.5 லட்சம் லஞ்சமாக கேட்கப் பட்டதாகவும், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாததால், பன்னாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தான் இழந்துவிட்டதாகவும் அவர் அழுதுகொண்டே கூறினார்.
முதலமைச்சரின் அலட்சியம்
மாணவி உணர்ச்சிவசப்பட்டு அழுதபோது, இந்த குற்றச்சாட்டு குறித்து விவரங்களை முதலமைச்சர் வாங்காமல், ‘சரி பரவாயில்லை அமருங்கள்’ என்று கூறியிருந்தார். இது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. கண் முன்னால் மாணவி அழுதுகொண்டே லஞ்ச புகார் கொடுக்கிறார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த விஷயத்தை முதலமைச்சர் மூடி மறைக்க பார்க்கிறார் என்று காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது.
இது போதாது என்று.. மாணவி பேசிய காட்சிப் பதிவை நிகழ்வு ஒளிபரப்பிலிருந்தும், அரசின் மற்ற சமூக ஊடகங்களின் பக்கங்களி லிருந்தும் நீக்கம் செய்யப்பட்டிருப் பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. லஞ்ச புகார் குறித்து உடனடியாக அந்த மாணிவியிடம் தேவையான தகவல்களை சேகரித்து.. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது போன்று மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு துணிச்சலான மாணவி, முதலமைச்சர் முன்னிலையில் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார். டேக்வாண்டோ விளையாட்டில் பன்னாட்டுப் அளவில் விளை யாட ரூ.1.5 லட்சம் லஞ்சமாக கேட்கப்பட்டதாகவும், இதனால் விளையாட்டு வாய்ப்பு பறி போனதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் ‘சரி பரவாயில்லை உட்காருங்கள்’ என்று கூறிவிட்டார். பின்னர் இந்த காட்சிப் பதிவு முதலமைச்சர் மற்றும் பாஜகவினரின் அனைத்து சமூக ஊடகங்களின் பக்கங்களிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறது.
பாஜக ஆட்சியில் லஞ்சம், ஊழல் இளைஞர்களின் கனவுகளை நசுக்குகிறது. இது பற்றி புகார்கள் வரும்போது.. அதை அடக்குவதில்தான் முதலமைச்சர் மும்முரமாக இருக்கிறார்” என்று பதிவிடப்பட்டிருக்கிறது.
