சென்னை, ஆக. 19- அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியாவில் படித்து வரும் தமிழ்நாடு மாணவர் அரசிடம் இருந்து உதவித்தொகை கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு ’அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி திட்டம்’ செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் எஸ்சி மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலேசியாவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில், ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன் வெளியிட்டுள்ள காணொலி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் வெளியிட்டுள்ள காணொலி யில், நான் தற்போது ‘அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்’ 2025ஆம் ஆண்டு நரம்பு மண்டல மீளுருவாக்க மருத்துவத்தில் (Neuro Regenerative Medicine) எனது முனைவர் பட்டப் படிப்பின் (PhD) இரண்டாம் ஆண்டைத் தொடர்கிறேன்.
எனது இரண்டாம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி நிதியை நான் இதுவரை பெறவில்லை. இதுவரை எனது கல்விக் கட்டணம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு மாதங்களுக்கான வாழ்க்கைச் செலவுத் தொகை மட்டுமே எனக்குக் கிடைத்துள்ளது.
அதிலும் தற்போது இரண்டு மாதங்களுக்கான தொகை மட்டுமே எஞ்சியுள்ளது. எனது கல்வி உதவித்தொகை நிதியை விடுவிப்பதில் ஏற்படும் தொடர்ச்சியான தாமதம், எனது கல்வி முன்னேற்றம், ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு ஆகியவற்றைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
எனது ஆராய்ச்சிக்கு அத்தியாவசிய மான வேதிப்பொருட்கள், வினை பொருட்கள் (reagents), ஆய்வகப் பயன் பாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை தேவைப்படுகின்றன. தற்போது, கல்வி உதவித்தொகை நிதியைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், இந்தத் தேவையான வளங்களைப் பெற இயலாத நிலையில் உள்ளேன். முறையான புத்தகங்கள், வேதிப்பொருட்கள், வினைபொருட்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்கள் இல்லாமல், எனது ஆராய்ச்சியைத் திறம்படத் தொடர்வதும், முனைவர் பட்டத்திற்கான இலக்குகளை அடைவதும் எனக்கு மிகவும் கடினமாக உள்ளது.
நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி நிதிகள் விரைவில் விடுவிக்கப்படாவிட்டால், எனது ஆராய்ச்சிப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். இது எனது முனைவர் பட்ட (PhD) ஆய்வின் முன்னேற்றத்தையும், அதை உரிய நேரத்தில் நிறைவு செய்வதையும் கடுமையாகப் பாதிக்கும்.
கடந்த 2025ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வி திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில், படித்துச் சென்ற மாணவர்களுக்கு நிதியுதவி வழங்காமல் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய எஸ்சி எஸ்டி ஆணையத்திற்கும் கடிதம் எழுதி உள்ளோம்.
அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். மேலும் 4 ஆண்டுகளுக்கு 36 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக கூறிவிட்டு, புதிய அரசு அமைந்த பின்னர் அதற்கான நிதியையும் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். புதிய அரசு தலித் மாணவர்கள் ஆய்வு செய்யக்கூடாது என நிறுத்தி வைத்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
