கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த பின் –
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!
சென்னை, மே 6 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (5.5.2026) மாலை, கொளத்தூர் தொகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது தி.மு.க. தலைவரின் முகம் கண்டு கண்ணீர் மல்கினர் பொது மக்கள்!
இந்த உருக்கமிகு நிகழ்வையடுத்து – அது குறித்து வலைதளப் பதிவிட்ட தி.மு.க. தலைவர் அவர்கள், “கொளத்தூருக்கும் எனக்குமான உறவு; தேர்தல் வெற்றி – தோல்விகளைக் கடந்த உறவு!” – என்றும் “உங்களுடன் நான் இருப்பேன்” என்றும் நெகிழ்ச்சி யுடன் பதிவிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர் அவர்களின் – உணர்ச்சிமிகு வலைதளப் பதிவு வருமாறு:–
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும் கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் ‘மாடல்’ தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறை வேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று (5.5.2026) நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, ‘முதல்வர் படைப்பகம்’, நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரி கள் போன்றவற்றைக் கண்டு, என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
இவ்வாறு அப்பதிவில் – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
