“நம் நாட்டின் உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இனி இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி! சமூகநீதி அணியை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள்வோம்!” என்று கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுத்த அறிக்கை பரவலாகப் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காகப் போராடும் பல்வேறு அமைப்புகள், இயக்கங்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
‘நீட்’ தேர்வில் நடந்த மோசடிகளை எதிர்த்து கடந்த மாதத்தில் வட இந்தியாவில் இளைஞர்கள் பலர் போராட்டக் களத்திற்கு வந்தனர். முழுமையான புரிதலுடன், நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று நடைபெற்றிருக்க வேண்டிய போராட்டம், தர்மேந்திர பிரதான் பதவி விலகல் என்பதோடு முடிக்கப்பட்டது. என்றாலும், அதன் விளைவாக ஓர் எழுச்சி சமூகத்தில் உணரப்பட்டது.
இப்போது மட்டுமல்ல, மதச்சார்பின்மைக்காகவும், தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்தும், ஒன்றிய அரசின் பாசிசப் போக்கை எதிர்த்தும், மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட இந்தியாவின் பல இடங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. சமூகநீதிக்கு எதிரான சவால்களையும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் ஜனநாயகத்திற்கு ஏற்படும் ஆபத்துகளையும் உணர்ந்துகொண்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மைச் சமூக மாணவர்கள் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் தங்களின் கருத்துகளை முன்வைப்பதுடன், போராட்டத்தில் ஈடுபடவும் தயங்கவில்லை. கடந்த 12 ஆண்டுகள் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. ஆட்சியில் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், அய்தராபாத் பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றுள் மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் நிறுவனங்கள், பேராசிரியர்களின் உயர்ஜாதி ஆணவத்திற்கு எதிரான போராட்டங்களும் அடங்கும்.
இப்படி நடத்தப்பட்ட போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகளின் காரணமாக, கல்வி நிறுவனப் படுகொலைகளுக்கு எதிராக முறையான விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் வகுக்க விடுத்த நீதிமன்ற ஆணையை ஏற்று யூ.ஜி.சி. அமைப்பு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. கடந்த 20 ஆண்டுகளில் மெல்ல மெல்ல இப்போது தான் உயர்கல்வித் துறையில் நுழைந்துள்ள உயர்ஜாதியினரல்லாத மாணவர்களின் எழுச்சி, பார்ப்பன உயர்ஜாதியினரைக் கோபத்தில் தள்ளியது. அதன் காரணமாகவே, யூ.ஜி.சி.யின் புதிய சமத்துவ வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக ஒரு சில இடங்களில் போராடவும் துணிந்தனர். அப்படிப்பட்ட போராட்டங்களில் மனுவாதத்தை வரவேற்றும், பார்ப்பனியத்தை ஆதரித்தும் ஏ.பி.வி.பி உள்ளிட்ட அமைப்பினர் முழக்கங்கள் எழுப்பியதையும் கண்டு, சமத்துவ – சமூகநீதிச் சிந்தனையாளர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் முகம் சுளித்தனர். இன்னும் இந்தச் சமூகத்தின் பாகுபாடுகள் நிலவ வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்.சும் பார்ப்பனியமும் எப்படி விதைத்து வருகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்றும் அப்போதே கண்டனம் எழுந்தது.
இந்நிலையில்தான், நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் முற்போக்குச் சிந்தனை கொண்ட பெருவாரியான இளைஞர்கள், மாணவர்கள் போராட்டக் களத்திற்கு வந்ததைக் கண்ட உயர்ஜாதி ஆர்.எஸ்.எஸ். கூட்டம், திரை மறைவில் வேறொரு வேலையைத் தொடங்கியது. சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லப்படும் இந்தியாவின் 80 ஆண்டுகளில், சமூகநீதியின் கதவுகள் மெல்லத் திறக்கப்பட்டு, அதிலும் ஏராளமான தடைகளை, படுகுழிகளைத் தாண்டிச் செல்ல வேண்டிய சூழல் இருக்கும்போதே, சமூகநீதியின் அடிப்படையான இடஒதுக்கீட்டையே முற்றாக ஒழிக்க வேண்டும் என்று ஒரு சிலரைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே இரவில் வட இந்தியா முழுவதும் விளம்பரங்கள் தரப்பட்டன. “ரிசர்வேஷன் ஹட்டோவோ அந்தோலன்” என்னும் பெயரில் “இடஒதுக்கீடு இல்லாத இந்தியா” என்று முழக்கத்துடன், இணைய தளத்திலும், சமூக ஊடகங்களிலும் தங்கள் பரப்புரைகளைத் தொடங்கியுள்ளனர்.
தகுதி – திறமை என்னும் சத்தியமூர்த்திகள் காலத்து சால் ஜாப்புகளை, ஏமாற்று வித்தைகளைக் கொண்டு இன்றைய இளைஞர்களை மயக்க, புதிய முலாம் பூசிக் கொண்டு வந்துள்ளனர். முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய இந்த ஆபத்தை அடையாளம் கண்டுதான், திராவிடர் கழகத் தலைவர், ஓர் எச்சரிக்கையை விடுத்ததுடன், “ஜாதி ஒழிந்த இந்தியா”வாக இந்நாட்டை உருவாக்க இந்தப் போலி சமத்துவம் பேசும் உயர் ஜாதிக் கூட்டம் தயாரா என்னும் கேள்வியையும் எறிந்துள்ளார்.
நமது அடுத்த தலைமுறைக்கு, நாம் கடந்து வந்த பாதையில் இருந்த ஆபத்தை எடுத்துச் சொல்லாமல், விட்டால் வருங்காலம் இருளாகும் ஆபத்து இருக்கிறது என்று எப்போதும் திராவிடர் கழகம் சொல்லிக் கொண்டே இருக்கும். ‘அது வரலாற்றுக் காயங்களைக் கீறிக் கொண்டிருக்கும் வீண் செயல்’ என்று சிலர் ஏகடியம் பேசுவதுண்டு. ஜாதியில் ஈராயிரம் ஆண்டுகளாக அவதிப்பட்ட மக்கள் கூட, இன்றைய வளர்ச்சியையும், சமூகநீதியையும் பயன் படுத்திக் கொண்டுவிட்டு, ‘பழைய கதைகளைப் பேச வேண்டாம்; அதுதான் வளர்ந்துவிட்டோமே!’ என்று சொல்வதுண்டு. இன்னும் அதீதமாகச் சென்று, பார்ப்பனரல்லாதாரில் சிலரே சமூகநீதியைக் கேலி செய்வதுண்டு. ஆனால், இந்தச் சமூகநீதியை ஒழித்துக்கட்ட எல்லா வகையிலும் ஆரியம் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது; ஏதேனும் ஒரு வழி தென்படாதா? இந்தச் சமூகநீதியை ஒழித்துவிட மாட்டோமா? என்று எப்படிக் காத்திருக்கிறது என்பதற்கு அண்மையில் வெளிவந்திருக்கும் இந்தப் பேச்சே எடுத்துக்காட்டு! நோய் இருக்கும் வரை மருந்து அவசியம் தேவை. நோய் ஒழிந்தால் மருந்தின் தேவையும் ஒழியும். ஜாதி இருக்கும் வரை ‘இடஒதுக்கீடு’ அவசியம் தேவை. ஜாதி முற்றாக ஒழிந்துவிட்டதென்னும் நிலையை எட்டினால், ஜாதி இல்லாத சமூகமாக இச்சமூகம் மாறிவிட்டால், தானாக வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் தேவை முடிந்துபோகும். எந்த வகையில் ஒடுக்கப்படுகிறோமோ, வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ, அதற்கான மருந்தாக இருப்பது தான் இடஒதுக்கீடு! அந்த மருந்தை ஒழித்துவிட்டு, நோயைப் பரப்ப விரும்பும் நாசகாரக் கூட்டத்தை அடையாளம் காண்போம்! அடையாளம் காட்டுவோம்! அதற்கான பிரச்சாரத்தை அறிவிப்போம் – அனைவரையும் இணைத்துக் களம் காண்போம் என்று தமிழர் தலைவர் விடுத்துள்ள அழைப்பு – இன்னொரு சமூகநீதிப் போர்!
