பல ஆண்டுகளாக “சிந்துபாத்” கதை போல வெறும் அறிவிப்புகளோடு நகர்ந்து, தமிழ்நாடு அரசியலின் பேசுபொருளாக இருந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, ஒருவழியாக இப்போதுதான் செங்கல் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. “90 விழுக்காடு பணிகள் நிறைவு, ஆகஸ்டில் ஒரு சிறு பகுதி திறப்பு” என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஆறுதல் தந்தாலும், இதற்குப் பின்னால் இருக்கும் காலதாமதமும், விமர்சனங்களும் அத்தனை சீக்கிரம் கடந்து போகக்கூடியவை அல்ல.
கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ‘ஒற்றைச் செங்கல்’ விவாதங்களால் நாடாளுமன்றம் வரை தத்தளித்த மதுரை எய்ம்ஸ் திட்டம், நிதி ஆதாரங்களை தேடுவதற்கே பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஜப்பான் நாட்டின் ‘ஜைக்கா’ (JICA) நிறுவனத்தின் நிதியுதவி கிடைத்து, கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம்தான் உண்மையான கட்டுமானப் பணிகளே தொடங்கப்பட்டன.
அய்ந்து ஆண்டுகள் வெறும் காகிதத்திலும், பேச்சிலும் மட்டுமே ஓடிய திட்டத்திற்கு, தற்போது “போர்க்கால அடிப்படையில்” பணிகள் நடப்பதாகக் கூறுவது, இத்தனைக் காலமும் ஆமை வேகத்தில் நகர்ந்த நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்கான ஒரு முயற்சியே!
தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில், ரூ. 2,021.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில், தற்போது மருத்துவக் கல்லூரியும் விடுதிக் கட்டடங்களும் மட்டுமே 90% முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக இயங்கி, தற்போது மதுரை ராஜாஜி பொது மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு, இந்த ஆகஸ்ட் மாதத் திறப்பு ஓரளவிற்குப் பயன்படலாம்.
ஆனால், மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் 900 படுக்கைகள் கொண்ட முதன்மை மருத்துவமனைக் (IPD) கட்டடங்கள் இரண்டாம் கட்டப் பணியாகவே வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்லூரி திறக்கப்படுவதால் மாணவர்களுக்கு இடவசதி கிடைக்கலாம். ஆனால், தென் தமிழ்நாட்டு ஏழை மக்களின் உயர்தர மருத்துவத் தேவைக்கான முதன்மை மருத்துவமனை எப்போது முழுமையாகச் செயல்படத் தொடங்கும்?
மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அடிக்கல் நாட்டுவதற்கு 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 2019 ஜனவரி 27 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தேர்தலில் அது பேசுபொருளாக மட்டுமல்ல… கேலிப் பொருளாகவும் ஆன நிலையிலும் எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை.இரண்டாம் முறை மோடி பிரதமராகி, 2022-ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மூன்றாவது ஆட்சியில் 2024 மே மாதத்தில் தான் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அதன் முதல்கட்டம்தான் இப்போது தயாராகியுள்ளது.
ஆனால், இதற்கிடையில் 2017 அக்டோபரில் அடிக்கல் நாட்டப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு, அக்டோபர் 2022-இல் பிரதமரால் முறைப்படி திறந்து வைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்காக அறிவிக்கப்பட்ட அசாமின் கவுகாத்தி எய்ம்ஸ் இந்த மருத்துவமனைக்கு மே 2017 இல் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, ஏப்ரல் 2023-இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டது. மதுரைக்கு (2019) அடுத்ததாக டிசம்பர் 2020இல் அடிக்கல் நாட்டப்பட்ட குஜராத்தின் ராஜ்கோட் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக முடிக்கப்பட்டு, பிப்ரவரி 2024-இல் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டு, தற்போது முழுமையாகச் செயல்பட்டு வருகிறது.ஆந்திரப் பிரதேசத்தின் மங்களகிரி எய்ம்ஸ் டிசம்பர் 2015 அடிக்கல் நாட்டப்பட்டு, வெளிப்புற நோயாளி பிரிவு, உள்நோயாளி பிரிவுகள் படிப்படியாகக் கட்டப்பட்டு, முழு மருத்துவமனையும் பயன்பாட்டில் உள்ளது. நவம்பர் 2016இல் அடிக்கல் நாட்டப்பட்ட பஞ்சாபின் பட்டிண்டா எய்ம்சின் வெளிப்புற நோயாளிகள் சேவை 2019-லேயே தொடங்கி, முழுக் கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது முழு அளவிலான மருத்துவமனையாகச் செயல்படுகிறது.
மதுரை எய்ம்சைப் பொறுத்தவரையில், 2027 பிப்ரவரிக்குள் ஒட்டுமொத்தப் பணிகளையும் 33 மாதங்களுக்குள் முடிக்க 2024இல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 24 கட்டடங்கள், நவீன கூட்ட அரங்கம், விளையாட்டுத் திடல் எனப் பட்டியல் நீளமாக இருந்தாலும், முதல் கட்டப் பணிகளுக்கே இத்தனை இழுபறி நீடித்த நிலையில், இன்னும் 18 மாதங்களுக்குள் இரண்டாம் கட்ட மருத்துவமனைக் கட்டுமானங்களை உலகத் தரத்தில் முடிப்பது என்பது மிகப்பெரிய சவால்தான்!
ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாராமுகம் காரணமாக, அரசியல் மேடைகளில் பேசுவதற்கும், தேர்தல் வாக்குறுதிகளுக்கும் மட்டுமே பயன்பட்டு வந்த மதுரை எய்ம்ஸ், தற்போது ஓரளவிற்கு உருப்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், ஒரு சிறு பகுதியை மட்டும் அவசர அவசரமாகத் திறந்துவிட்டு “சாதித்துவிட்டோம்” என்று தம்பட்டம் அடிப்பதை விடுத்து, ஒட்டுமொத்த மருத்துவமனையையும் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டு வருவதே இந்த “ஏழுகடல் தாண்டி கோட்டை” கட்டும் கதைக்கு உண்மையான சரியான முடிவாக இருக்கும்.
