சென்னை, ஆக.15 மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் வரும் 22ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று (14.8.2026) வெளி யிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22.8.2026 அன்று காலை 10 மணி அளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடை பெறும். அதுபோது தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அ னைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கட்சி ஆக்கப் பணிகள் குறித்து கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் திமுகவில் 78 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
இதில் நீண்டநாளாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு முன்னுரிமை தர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கட்சியின் கட்டமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு தலா 2 முதல் 4 தொகுதிகள் வரை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
அண்மையில் திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்குக் கட்சியில் புதிய மற்றும் முக்கியத்துவமான பொறுப்புகளை வழங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் திமுகவின் பொதுக்குழுக் கூட்டம், செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழா உள்ளிட்ட திமுகவின் முப்பெரும் விழா தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
