சென்னை, ஆக.14 தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்துக்கு மாற்றப்படும் நிலையில், நிர்வாக அலுவலக வசதிகளை மேற்கொள்ளும் பணிகளுக்காக ரூ.5.5 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
350 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம் பரியம்மிக்க புனித ஜாா்ஜ் கோட்டையின் முதல் தளத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் அமைந்துள்ளது. முன்னாள் முதல்வா்கள் பயன்படுத்திய இந்த அறைக்கு அருகே சட்டப்பேரவை, அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இந்த நிலையில், இடப் பாற்றாக்குறை காரணமாக முதலமைச்சரின் அலுவலகம் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அத்துடன், முதலமைச்சரின் முதன்மைச் செயலர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகளும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்றப்படவுள்ளன. ஏற்கெனவே, 10ஆவது தளத்தில் இயங்கிவந்த செய்தி, மக்கள் தொடர்புத் துறை பிரிவுகள் கலைவாணர் அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாமக்கல் கவிஞா் மாளி கையின் 10-ஆவது தளத்தில் மாற்றம் செய்யப்படும் முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளின் அலுவலக வசதிகள் செய்யும் பணிகளுக்கு ரூ. 5.5 கோடியில் பொதுப்பணித் துறை ஒப்பந்தம் கோரியுள்ளது. பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மூன்று பிரிவுகளாக பிரித்து ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
10-ஆவது தளத்தில் உள்ள பிளாக் – 1க்கு ரூ. 2.41 கோடியும், பிளாக் – 2க்கு ரூ. 2.01 கோடியும், பிளாக் – 3க்கு ரூ. 1.12 கோடியும் ஒப்பந்தத் தொகையாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. வருகின்ற செப். 1 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் ஒப்பந்தம் கோர விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
