சென்னை, ஜூன் 6- பள்ளிக் கல்வித் துறையில் புரோகிராமர், உடற்கல்வி விரிவுரையாளர், கான் சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர் ஆகிய புதிய பதவிகள் உருவாக்கப்படுகின்றன.
அந்தப் பதவிகளுக்கு சிறப்புக் கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் ப.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறப் பட்டிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத் துறை யில் ‘புரோகிராமர்’ என்ற பதவி நேரடி நியமன முறையில் நிரப்பப்படுகிறது. இந்தப் பதவிக்கு எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்எஸ்சி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அல்லது எம்சிஏ கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு டேட்டா ஸ்ட்ரக்சர், அல்காரிதம்ஸ், டேட்டாபேசஸ், சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டு கால பணி அனுபவம் அவசியம்.
அதேபோல், தமிழ்நாடு பொது சார்நிலை பணியின் கீழ் கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர் என்ற புதிய நேரடி நியமன பதவி உருவாக்கப்படுகிறது. இதற்கு கல்வித் தகுதியாக பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பிஎஸ்சி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அல்லது பிசிஏ பட்டப் படிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
அத்துடன் டேட்டா ஸ்ட்ரக்சர், அல்காரிதம்ஸ், டேட்டாபேஸ், சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் டிசைனிங், டிபக்கிங் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டு கால பணி அனுபவம் வேண்டும்.
மேலும், தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பணியில் உடற்கல்விப் பாடத்தில் புதிதாக விரிவுரையாளர் பதவி உருவாக்கப்படுகிறது. இந்தப் பதவிக்கு முதுநிலைப் பட்டத்துடன் எம்பிஎட் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
