ஹல்த்வானி, ஆக.13 உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வு முடிவடைந்த நிலையில், அந்த இடத்தை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மந்திரங்கள் ஓதி, யாகங்கள் செய்து ‘புனிதப்படுத்தும்’ (சுத்திகரிப்பு) சடங்குகளை நடத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘தீட்டாகி’ விட்டதாம்!
சடங்குகளை நடத்திய அமைப்பினர் கூறுகையில், விரைவில் இந்த மைதா னத்தில் ‘புனித’மான ராம்லீலா மற்றும் தசரா விழா தயாரிப்புகள் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இங்கு வந்து உரையாற்றியதால், இந்த இடம் ‘புனித’மிழந்து ‘தீட்டாகி விட்டது’ என்றும், அதை நிவர்த்திச் செய்யவே இந்த யாகங்கள் மற்றும் சடங்குகள் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது முதன்முறையல்ல!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜாதிய தீண்டாமைச் சடங்குகள் சர்ச்சையாவது இது முதன்முறையல்ல. கடந்த 2017 ஆம் ஆண்டு, பாஜக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் அங்குள்ள ஒரு பழைமையான சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளைச் செய்து திரும்பினார்.
அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அக்கோயில் நிர்வாகத்தினரால் கோயில் கதவுகள் ஒருநாள் முழுவதும் அடைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் மூலம் ‘தீட்டுக் கழிக்கும்’ நிகழ்வு நடத்தப்பட்டது.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர் ‘‘நான் ஒரு மாநில அமைச்சராக இருந்தும், அக்கோயி லில் எனக்கு நடந்த இந்த தீண்டா மைச் சடங்கு என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது’’ என அன்றைய அமைச்சர் அம்மாநில சட்டப்பேரவையிலேயே தனது வேத னையைத் தெரிவித்திருந்தார்.
கடும் கண்டனங்கள் பதிவு!
அன்று மாநில அமைச்சருக்கு நடந்த அதே தீண்டாமை அநீதி, இன்று நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸின் தேசியத் தலைவருக்கு நிகழ்ந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை கடும் கண்ட னங்களைப் பதிவு செய்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியால் இந்த நிகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நைனிடால் காவல் கண்காணிப்பா ளரிடம் உடனடியாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம்!
21 ஆம் நூற்றாண்டின் நவீன இந்தியாவில் இத்தகைய ஜாதிய பாகு பாடுகளும் தீண்டாமைச் சடங்குகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இது பாஜக ஆதரவு மனநிலையின் வெளிப்பாடு என்றும் காங்கிரஸ் தலை வர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் பாஜக தரப்பில் அங்கு அரசியல் பேசப்பட்டது ‘புனித’மான மேடைகளில் அரசியல் பேசுவது அம்மக்கள் தங்களின் மத உணர்வை அரசியலுக்காக பயன்படுத்துவதாக கருதுகின்றனர்.
இதனால் அவர்கள் தங்களின் மன திருப்திக்காக யாகம் மற்றும் பூஜை நடத்தினர். இது அவர்களின் உரிமை; ஆனால், காங்கிரஸ் ஹிந்து விரோத மனப்பான்மையுடனேயே இந்த விவகாரத்தை அணுகுகிறது என்று கூறியுள்ளது.
