சென்னை,ஆக. 13- சென்னை மாநக ராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சரின் உத்தரவுப்படி சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகள், விளையாட்டுத் திடல்கள், பூங்காக்களில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டை மேற்கொள்ளும் விதமாக உயர்தரத்தில் இலவச வைஃபை வசதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
அதன்படி முதல் கட்டமாக மாநகராட்சிக்கு உள்பட்ட மெரினா கடற்கரை பகுதியில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 5 இடங்களிலும், தலைமைச் செயலக பூங்காவில் 12 இடங்களிலும் என மொத்தம் 44 இடங்களில் 10.8.2026 முதல் இலவச வைஃபை வசதி பயன் பாட்டுக்கு கொண்டு வரப் பட்டுள்ளது.
இந்த சேவையை பயன்படுத்த பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் வைஃபையை ஆன் செய்து, ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள க்யூ-ஆர் கோட்-அய் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் மூலம் வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்து வைஃபை வசதியை பெற்றுக்கொள்ளலாம். மக்கள் இதனை இலவச மாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
