புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை! வழக்குரைஞர் வாஞ்சிநாதன் குற்றச்சாட்டு!

2 Min Read

மதுரை, ஆக.10- சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப் படவில்லை என்று மதுரையில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தெரிவித்தார்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரை நீதிபதி களாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மே மாதம் பரிந்துரைத்தது. இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவா், பரிந்துரைக்கப்பட்ட 19 பேரில் 15 பேரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தர விட்டார்.

அதன்படி, என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆா்.ஆா்.விவே கானந்தன், எஸ்.ரவிக்குமார்,
என்.திலீப்குமார், எ.மனோகரன், கே.கோவிந்தராஜன், ரஜனீஷ் பத்தியால் ஆகிய 8 வழக்குரைஞா்களும், மாவட்ட நீதிபதிகளான பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகா், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 7 பேரும் என மொத்தம் 15 போ் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், புதிதாக நியமிக் கப்பட்ட 15 நீதிபதிகளும் நேற்று (9.8.2026) பதவியேற்றுக்கொண்டனர். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப் படவில்லை என்று மதுரையில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி மற்றும் அரசியலமைப்பின் சமூகத்துவக் கோட்பாடு பின்பற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வழக்குரைஞர்களில் இருந்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 8 பேரில், பட்டியலினத்தவர், பழங்குடியினர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் மற்றும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.

பிராமண சமூகத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சமூகத்தின் மக்கள் தொகை 3 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தும், தற்போதைய நீதிபதிகளில் சுமார் 20 சதவீதம் பேர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் வாஞ்சிநாதன் தெரிவித்தார்.

மேலும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் அப்பாதுரை பெயர் பரிசீலனைப் பட்டியலில் இருந்தும், இறுதி நியமனப் பட்டியலில் இடம்பெறவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.

“நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் தோல்வியடைந்துள்ளது. பாரபட்சம் செய்யக்கூடிய அமைப் பாக கொலீஜியம் மாறிவிட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது” என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் சமூகநீதியை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், குறிப்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவிக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “அனைத்து சமூகத்தின ருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வாஞ்சிநாதன் வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *