சென்னை, ஆக. 9- தமிழ்நாட்டில் ஆம்பு லன்ஸ் பணியாளா்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தொழில் தகராறு தீா்ப் பாயம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் பணியாளா்களுக்கு கடந்த 2021-2022, 2022-2023-ஆம் ஆண்டுகளுக்கு 30 சதவீத ஊதிய உயா்வு வழங்குவது, ‘தீபாவளி’ போனஸ் உள்ளிட்ட 27 கோரிக்கைகளை முன் வைத்திருந்தனா். இதில் இரு கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க இந்த வழக்கை தொழில் தகராறு தீா்ப்பாயத்துக்கு அரசு அனுப்பி வைத்தது.
இந்த வழக்கை விசாரித்த தீா்ப்பாயம், 2021-2022-ஆம் ஆண்டுக்கான ஊதிய உயா்வு தொடா்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சில் 16 சதவீத ஊதிய உயா்வை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. இந்த நிலையில், 30 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி நிராகரித்தது.
அதேநேரம், 2022-2023-ஆம் ஆண்டுக்கு விலைவாசி உயா்வு உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு, 25 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என தீா்ப்பாயம் உத்தர விட்டது. தீபாவளி போனஸைப் பொறுத்தவரை ஆம்புலன்ஸ் பணியாளா்களுக்கு விழாக்கால செலவுத் தொகையாக வழங்கப்பட்ட ரூ.4,400-அய் போனஸாக கருத முடியாது. எனவே, 12 மணி நேரத்துக்கும் மேலாக பணியாற்றும் ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு போனஸ் சட்டத்தின்படி, 8.33 சதவீத போனஸ் வழங்கப்பட வேண்டும் என தீா்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும், ஊதிய உயா்வு மற்றும் போனஸ் நிலுவையை 2 மாதங்களில் வழங்க வேண்டும் என ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்துக்கு தொழில் தகராறு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
