சென்னை, ஆக.9- தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (8.8.2026) நடைபெற்றது.
இதில், தொகுதி மறுவரை யறை விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமையைநிரந்தரமாக பாது காக்க, சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஒருமனதாக தீர்மானிக்கப் பட்டது. திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம ஆகிய கட்சிகள் இக்கூட்டத்தைப் புறக் கணித்துவிட்டன.
நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீட்டிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டது. அப்போது, காங்கிரஸ் தலை மையிலான இண்டியா கூட்டணியால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. இந்நிலை யில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டது.
19 பேர் மட்டுமே பங்கேற்பு: இந்நிலையில், சென்னை கலை வாணர் அரங்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (8.8.2026) நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், 19 பேர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இக்கூட்டத்தை புறக்கணித்துவிட்டன.
தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன், தலைமைச் செயலர் எம்.சாய்குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி மறுவரை யறை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தமிழ் நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாக பாதுகாக்க, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. கூட்டத் தின் நிறைவாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.
‘‘தொகுதி மறுவரையறை செய்வதன்மூலம் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம், முக்கியத்துவம் பாதிக்கப்படும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை கைவிடவும், தற்போதைய நிலையே தொடரவும் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்தவும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
