குதிரை பேரம்: விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!

3 Min Read

சென்னை, ஆக. 5- தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக, திருவல்லிக்கேணி காவல் துறையினர் பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தவெக அரசைக் கவிழ்க்கும் நோக்கில் சட்டப்பேரவையில், பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக செயல்பட்டால் ரூ.35 கோடி அன்பளிப்பாகத் தருவதாகக் கூறி ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், கார்த்திக், ரமேஷ் உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் நிபந்தனை முன்பிணை பெற்று நாள்தோறும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் பிணை பெற்ற ரமேஷ் என்பவர், வழக்கு விசாரணையை சிபிஅய்க்கு மாற்றக் கோரி ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள், சிபிஅய் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரமேஷ் மீதான வழக்கை விசாரிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் அண்மையில் பிணை பெற்ற சேதுராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோரும் இந்த வழக்கை சிபிஅய்க்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (4.8.2026) நடந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘‘குதிரை பேர வழக்கில் மாநில காவல் துறையினரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை. காவல் துறையினர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். எனவே. இந்த வழக்கை சிபிஅய் அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது.

அப்போது காவல் துறை தரப்பில், ‘‘இந்த விவகாரத்தில் பொய் வழக்கு ஜோடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒவ்வொருவராக சிபிஅய் விசாரணை கோரி மனு தாக்கல் செய்து வருகின்றனர். எனவே, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டனர். அத்துடன் அடுத்த விசாரணையை ஆக.27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திருநாவுக்கரசு, ராஜேஷ், தியாகராஜன், கணேசன், சீனிவாசன், செல்வம் ஆகிய 6 பேருக்கு பிணை கோரியும், தீபக், செல்வரங்க முருகன், அழகேசன், சக்திவேல் ஆகிய 4 பேர் தங்களுக்கு முன்பிணை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சிறையில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கியும், தீபக் உள்ளிட்ட 4 பேருக்கு முன்பிணை வழங்கியும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கெனவே பலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *