பன்னாட்டு பெருமக்கள் வாழ்த்துரை! தமிழர் தலைவர் பாராட்டுரை!

8 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கவிஞர் கலி.பூங்குன்றனுக்கு பெரியார் பன்னாட்டமைப்பின்
”சமூகநீதிக்கான கி.வீரமணி விருது”

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’ வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் 04.08.2026 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிகள் போல் மட்டும் இல்லாமல், கருஞ்சட்டை குடும் பங்களின் குடும்ப விழாவாக, மகிழ்ச்சிப் பெருவிழாவாக, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மனதுக்கு நெருக்கமான கொள்கைத் திருவிழாவாக நடைபெற்றது.

கவிஞர் அவர்களின் மின்சாரம்
பாயாத இடமே இல்லை!

பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார். அவரது உரையில்: “தந்தை பெரியார் அவர்கள் தன் உடல் நிலையைப் பற்றி கவலை கொள்ளாமல் தமிழினத்திற்காக உழைத்தார். அதே நேரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தன் உடல் நலனையும் பேணிக் கொண்டு, சமூகநீதிக்காக, தமிழினத்திற்காக எத்தகைய வகைகளில் உழைத்து வருகிறார்” என்பதை எடுத்துரைத்து சமூகநீதிக்கான கி.வீரமணி விருது எத்தகைய சிறப்புக்குரியது என்பதை விளக்கினார். விருதினைப் பெறுபவர்களை நேரில் சந்தித்து அவர்களைப் பாராட்டும் ஆசிரியரின் பண்பை வியந்துரைத்தார். ‘ ஊருக்கு ஒரு கலியமூர்த்தி இருந்தால் என் பணி சுலபமாகிவிடும் ‘ என்று தந்தை பெரியார் கூறியது எவ்வளவு ஆழமானது என்பதையும், இன்று அனைத்து ஊர்களிலும் மின்சாரம் பாயாத இடமே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் கவிஞரின் எழுத்துகள் தமிழ்ச் சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், கவிஞரைச் சமூகப்பணி செய்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் கவிஞர் அவர்களின் வாழ்விணையர் வெற்றிச்செல்விக்கும் நன்றி தெரிவித்தார். தன்னலமின்றி அரசுப் பணியை துறந்து, எமர்ஜென்சி காலகட்டத்தில் கவிஞரின் இயக்கத் தொண்டு எத்தகையது என்பதையும், அவரை எப்படி பாராட்டுவது என்று நினைத்த நேரத்தில் ஆசிரியர் அய்யா தொடங்கி அடியேன் வரை பொழிந்த அன்பு, பாசம், நன்றி உணர்ச்சிதான் இன்று பன்னாட்டு அமைப்பின் சார்பில் வெளிவரும் கவிஞர் அவர்களைப் பற்றிய இந்த தொகுப்பு என்று “கவிஞர் கலி.பூங்குன்றன் வாழ்த்து மலரினை” அறிமுகம் செய்து, வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

முக்காலத்திற்கும் இவ்விருதுக்கு
தகுதியானவர் கவிஞர்!

நிகழ்வின் தலைமை உரையினை மும்பை லெமூரியா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சு. குமணராசன் வழங்கினார். அவரது உரையில்: கவிஞர் அவர்களுக்கு இவ்விருதினை வழங்கும் நிகழ்ச்சி சற்றுதாமதமாக நடைபெறுகிறதோ என்று நினைக்கிறேன் என்ற அவரின் எண்ணத்தைப் பதிவு செய்து, இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்பது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாழ்நாள் பேறு; இதைவிட வாழ்வில் வேறு எந்த சிறப்பும் தனக்கு இருக்க முடியாது என்றார். இந்திய அரசியலிலும், சமூகவியலிலும் எத்தகைய வரலாறுகள் இந்த இயக்கத்துடனும், தந்தை பெரியார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடும் இணைந்து இருக்கிறது என்பதை ஆண்டுவாரியாக விவரித்தார். குறிப்பாக 1951, 1976, 1993 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய அளவிலான அரசியல் அமைப்புச் சட்ட மாற்றங்களை எடுத்துரைத்தார்.. அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தமான வகுப்புவாரி உரிமைக் கொள்கைக்கு தந்தை பெரியாரின் குரல் எத்தகையது என்றும், மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த திராவிடர் கழகம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்த முயற்சிகளையும், இந்தியாவிலேயே 69 சதவீத இட ஒதுக்கீட்டைச் சட்டமாகப் பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்குப் பின்னால் ஆசிரியரின் உழைப்பு அடங்கி இருக்கிறது என்பதனையும், வரலாற்றுக் குறிப்புகளுடன் பதிவு செய்தார். தந்தை பெரியாருக்கு ஆசிரியர் எப்படியோ அதேபோல் ஆசிரியருக்கு வலதுகரமாக கவிஞர் இருக்கிறார் என்றும் படம் பிடித்தார். இந்தியா முழுவதும் பரவி இருக்கும் பிஜேபியின் கேட்டினை அகற்றும் ஆயுதம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது; அதுவும் தமிழ்நாட்டில் சென்னையில் தான் இருக்கிறது; சென்னையிலும் பெரியார் திடலில் தான் இருக்கிறது என்றார். 20 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படும் பன்னாட்டு அமைப்பின் சமூகநீதிக்கான கி.வீரமணி விருதைப் பெற்ற சிலருக்கு இறந்த காலம் ஒன்றாகவும் , எதிர்காலம் ஒன்றாகவும் இருந்திருக்கலாம். ஆனால், இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என்று முக்காலத்திற்கும் இவ்விருதினைப் பெறுவதற்குத் தகுதியான நபர் கவிஞர் அவர்கள் தான் என்று உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்தார். கழகத் தொண்டர்கள் இயங்குவதற்கு மின்சாரமாக, எரிசக்தியாக உள்ள கவிஞருக்கு வழங்கப்படும் விருதுக்கு நன்றி தெரிவித்தார். மகிழ்ச்சியான சூழலில் மற்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் அரங்கம் நிறைந்த கைத்தட்டலுடன் பதிவு செய்தார். இனிமேல் பன்னாட்டு அமைப்பின் சார்பில் வழங்கப்படும் சமூகநீதிக்கான கி.வீரமணி விருதுடன் பன்னாட்டு அமைப்பு கொடுக்கும் விருதுத் தொகையுடன் சேர்த்து ரூபாய் அய்ம்பதாயிரத்தினை (ரூ.50,000) மராத்திய மாநில, தமிழர்களின் சார்பாகவும், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்களின் சார்பாகவும் இணைந்து வழங்கப்படும் என்று அறிவித்து தனது தலைமை உரையினை நிறைவு செய்தார்.

உணர்வுகளின் ஊற்றாக
வெளியிடப்பட்ட காணொலி!

87 வயதில் 60 ஆண்டுகள் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரும், 60 ஆண்டுகள் பெரியார் திடலுக்கு சொந்தமானவரும், 1957 நவம்பர் 3 அன்று தஞ்சையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டின் மூலம் திராவிடர் கழகத்திற்கு கிடைக்கப்பெற்ற கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை இயக்கத் தொண்டர்களுக்கு கண்முன்னே கொண்டு வரும் வரலாற்று சிறப்பு வாய்ந்த, உணர்வுகளின் ஊற்றாக காணொலி ஒன்று வெளியிடப்பட்டது.

அவரது வாழ்வு அனைவருக்குமான முன்னுதாரணம்!

பெரியார் பன்னாட்டு அமைப்பின் விருது குழுத் தலைவர் இலக்குவன் தமிழ் அவர்கள் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களுக்கு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கி உரையாற்றினார். அவரது உரையில்: ஆசிரியர் அவர்களின் தொண்டுக்கு நன்றி கூறியும் தந்தை பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணியை ஆசிரியர் அவர்கள் அப்படியே மேற்கொண்டதன் விளைவாகத்தான், தாங்கள் எல்லாம் இந்நிலையில் இருக்கிறோம் என்ற நன்றி உணர்வினை வெளிப்படுத்தியும், அந்த நன்றி உணர்வின் வடிவங்கள் தான் வழங்கப்படும் இவ்விருதுகள் என்றும் எடுத்துரைத்தார்.

திராவிடர் கழகம்

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் விருது வழங்கப்படுவதன் நோக்கத்தை எடுத்துரைத்து, சமூக நீதிக்கான பெயரில் வழங்கப்படும் இவ்விருதைத் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ஏன் வழங்குகிறோம் என்ற கேள்வி எழலாம், அக்கேள்விக்கான பதில் இம்மலரில் இருக்கிறது என்றும், பெயர் சொல்பவன் பெயரன் என்பார்கள்; அப்படி கவிஞரின் பெயரன் அவரைப் பற்றி எழுதியதே இந்த கேள்விக்கான பதில் என்றார். கவிஞரின் பேரன் செம்மொழிப் பூங்குன்றன் அவர்கள் கவிஞரைப் பற்றி இப்படி கூறுகிறார் “My admiration for him comes from his selflessness. He has spent decades working tirelessly to educate society and spread the rationalist and social justice ideals of Periyar, he is someone who has dedicated his life to this party asking for nothing in return”. இதில் மிகக் குறிப்பாகக் கவிஞர் அவர்களின் சுயநலமற்ற தன்மையையும் இயக்கத்தில் இருந்து எது ஒன்றையும் எதிர்பார்க்காமல் செயல்படும் அவரது அர்ப்பணிப்பு உணர்வினையும் எடுத்துரைத்தார். மேலும், கவிஞரின் மற்றொரு பேரன் இன்சொல் அவர்களின் எழுத்துக்களின் மூலம் இந்த விருது கவிஞருக்கு எவ்வளவு பொருத்தமானது என்பதை விளக்கினார். “சோர்வுற்றிருக்கும் வேலைகளில் உண்மையான விளக்கொளியாகவே அவரது வாழ்வு எனக்குப் பொருள்படுகிறது. லட்சியத்திற்காக எரிந்து எரிந்து விளக்காகவே மாறியுள்ள அவரது வாழ்வு அனைவருக்குமான முன்னுதாரணம்” என்று இன்சொல் கவிஞரின் பொது வாழ்வினை படம் பிடிக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கிற போது நமது குடும்பங் களில் அடுத்த தலைமுறையில் உள்ள இளைஞர்களுக்கு வரலாற்றைச் சொல்லித் தர வேண்டிய அவசியத்தினை விளக்கினார். மேலும் திராவிடம் என்பது எந்த கொம் பனாலும் அழிக்க முடியாத கோட்டை என்றார். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு நமது கொள்கைகளை, திராவிட இயக்கத்தின் வரலாறுகளை சொல்லித் தந்து இருக்க வேண்டும் என்றும் பள்ளிப் பாடங்களில் நமது வரலாறுகள் இடம்பெற்று இருக்க வேண்டும் என்ற தனது கருத்தினை வெளிப்படுத்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் உலக அளவில் வாழும் தமிழர்கள், இளைஞர்கள் இடத்தில் நமது கருத்தினை கொண்டு செல் லும் நோக்கில் இணைய வழியில் சான்றிதழ் படிப்பினை (Internet Certificate course) நடத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தினைப் பதிவு செய்து நிறைவு செய்தார்.

தேநீர் கடைகள் நமது
இயக்கச் சிந்தனையின் பிறப்பிடங்கள்!

நிகழ்வில் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தணிக்கையாளர் மானமிகு மாறன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவரது வாழ்த்துரையில்: விருது என்பது அந்த தனிமனிதருக்கானது மட்டுமல்ல; அவர் எழுதிய எழுத்து, வாழ்ந்த வாழ்க்கைக்கானது. அந்த வகையில் மிகவும் பொருத்தமான தேர்வு தான் கவிஞர் அவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது என்றும், கவிஞர் அவர்களின் வாழ்க்கைக்கும் அவரின் எழுத்துக்கும் இந்த விருது மேலும் பெருமை சேர்க்கின்றன என்றார். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் பிரதிநிதியாக மட்டுமல்லாமல், தான் மயிலாடுதுறை மண்ணைச் சார்ந்த பிரதிநிதியாகவும் வந்திருக்கிறேன் என்றார். கவிஞர் அவர்களின் குடும்பத்தில் ஒருவராகக் குடும்ப உறுப்பினராகவும் வந்திருக்கிறேன் என்றார். தங்களுக்கும் கவிஞர் அவர்களுக்கும் எத்தகைய குடும்ப உறவு இருந்தது என்பதையும், தனது தந்தை நாகரத்தினம் அவர்களின் இயக்கத் தொண்டினையும் வரலாற்று ரீதியாக ஆழமாக எடுத்துரைத்தார். கருஞ்சட்டை குடும்பங்களின் கொள்கை உறவு எத்தகையது என்பதை ‘அரங்கசாமி சித்தப்பா’ என்று குடும்ப முறை சொல்லி அழைத்ததின் மூலமே அரங்கத்திற்கு தெரியப்படுத்தினார். தேநீர் கடைகள் சிந்தனைகளின் பிறப்பிடமாக எப்படி இருந்தது என்பதை தனது சொற்களின் மூலம் காட்சிப்படுத்தினார்.

திராவிடர் கழகம்

கவிஞருக்குக் கிடைத்துள்ள இந்த விருது அவர் பயணத்தின் நிறைவு அல்ல; இன்னும் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கான தொடக்கம் என்றார். சிங்கப்பூரிலும் கவிஞர் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்த விரும்புவதாகவும், அதற்கு அவர் வருகை தர வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்தும் நிறைவு செய்தார்.

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ஆசிரியர் ப.திருமாவேலன் வாழ்த்துரை வழங்க, கவிஞர் கலி.பூங்குன்றன் ஏற்புரை வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.

திராவிடர் கழகம்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு நன்றி கூறினார். அவரது நன்றி உரையில் உரையாற்றிய ஒவ்வொருவரின் உரையின் குறிப்புகளையும், பன்னாட்டு அமைப்பின் சிறப்புகளையும், கவிஞர் அவர்களின் வரலாற்றுச் சிறப்பினையும் எடுத்துரைத்து நன்றி தெரிவித்தார். நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை ஆற்றினார்.

திராவிடர் கழகம்

தமிழ்நாடெங்கிலும் இருந்து வருகை தந்த கழகப் பொறுப்பாளர்கள் மேடையில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து, வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தனர்.

தொகுப்பு: சே.மெ.மதிவதனி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *