புதுடில்லி, ஆக. 3- அரசுப் பணி நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஅய் பதிவு செய்த 158 வழக்குகள், விசாரணை முடிந்தும் நீதிமன்றங்களில் தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில் சில வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு முன்பாகப் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைவு நீதிமன்றங்களுக்கு மாற்ற சிபிஅய் முடிவு செய்துள்ளது.
விரைவு நீதிமன்றங்கள்: வினாத்தாள் கசிவைத் தடுக்கும் புதிய சட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு வரும் விரைவு நீதிமன்றங்களுக்கு இவ்வழக்குகள் மாற்றப்படும்
சிறப்பு வழக்குரைஞர்கள்: வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு அரசு வழக்குரைஞர்களை நியமிக்கவும், தேவையான அனைத்து வளங்களையும் வழங்கவும் தயார் என உயர் நீதிமன்றங்களுக்கு சிபிஅய் தெரிவிக்கவுள்ளது.
அண்மையில் அமலுக்கு வந்துள்ள பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டத்தின்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் விரைவு நீதிமன்றங்கள் வழக்கை விசாரித்து முடிக்கும்.
சிபிஅய்யின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த தேர்வு முறைகேடு வழக்குகளில் விரைவில் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
