மதுரை, ஆக 2- தமிழ்நாடு விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக புதிய சிக்கலில் சிக்கியுள்ளனர். தவெக அரசு அறிவித்த கடன் தள்ளுபடி நடவடிக்கைகளுக்கு மத்தியில், மதுரை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு புதிய அறிவிக்கைகளை அனுப்பி உள்ளன. இந்த அறிவிக்கையில் கடன் தள்ளுபடி பெறுவதற்கு முன்னர், விவசாயிகள் தாங்கள் பெற்ற முழு கடன் தொகையையும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும், பின்னரே தள்ளுபடி தொகை அவர்களின் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
தவெக தேர்தல் அறிக்கை யில், ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை கடன் தள்ளுபடியும் அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தவெக அரசு பதவியேற்ற பின்னர் முதலில் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறி வித்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அரசு தனது அறிவிப்பை திருத்தி, ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாகவும், ரூ.75 ஆயிரத்திற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான கடன் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை கிழக்கு தாலுகா பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற பெரும்பாலான விவ சாயிகளுக்கு புதிய அறிவிக்கை கொடுக்கப் பட்டுள்ளது. அந்த அறிவிக்கையில், “இச்சங்கத்தில் தாங்கள் பெற்ற பயிர் கடன் தொகையினை கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல் டிஎன்ஜிசிஏ பகுப்பாய்விற்கு பின்னர் தகுதியானோர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு தள்ளுபடி தொகை விடுவிக்கப்படும் நாள் வரையிலான இடைப்பட்ட காலத்தில் தவணை தவறிய கடன்களாக மாறும் சூழல் உள்ளது. எனவே, தாங்கள் பெற்ற கடன் தொகையினை தவணை தவறும் தேதிக்கு முன் செலுத்த தெரிவிக்கப்படுகிறது. தள்ளுபடி தொகை பட்டியல் இறுதி செய்யப்பட்டு சங்கத்திற்கு விடுவிக்கும் போது தங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த அறிவிக்கையில் “கடன் தொகை யுடன் அந்த காலத்திற்குரிய வட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது.” அதாவது, விவசாயிகள் முதலில் வட்டியுடன் கூடிய முழு கடன் தொகையையும் செலுத்த வேண்டும். பின்னரே தள்ளுபடிக்கு தகுதியானவர் களின் பட்டியல் இறுதி செய் யப்பட்டு, தள்ளுபடி தொகை அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த அறிவிக்கை குறித்து கள்ளந்திரி வட்டார விவசாயிகள் கூறுகையில், “முதலில் முழு கடன் தொகை யையும் செலுத்தினால் மட்டுமே தள்ளுபடி என்றும், பின்னர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறி முழுத் தொகையையும் கட்டுமாறு வங்கி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். ஏற்கெனவே ரூ.75 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி அறிவிப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது. தற்போது முதிர்வடைந்த கடன்களுக்கு வங்கிகள் முழு தொகையை வசூலிக்க அறிவிக்கை வழங்கி வருவது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றனர். மேலும், “தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தள்ளுபடி நடைமுறை குறித்து அரசு உடனடியாக தெளிவான விளக்கம் அளித்து, அதுவரை முதிர்வடைந்த பயிர் கடன்களுக்கான கட்டாய வசூல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்” என்று வலி யுறுத்தினர்.
இந்த நிலையில், கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்த விவ சாயிகளின் குழப்பத்திற்கு அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்பதும், வங்கிகள் மேற்கொள்ளும் வசூல் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதும் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.
