காவிரி நீர் கிடைக்காத நிலையில் குறுவை சாகுபடி பரப்பளவு 93 ஆயிரம் ஏக்கர் குறைந்தது விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்குமா?

சென்னை, ஆக.2- காவிரி நீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங் களில் குறுவை சாகுபடிக்கான பரப்பளவு 1 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்டது.

தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திரு வாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என மூன்று பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெல் பயிரிடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் காவிரி நீர் திறந்துவிடப்படுவது வழக்கமாக உள்ளது.

அதன் பின்னர் அதே மாதத்தில் இருந்து குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். அதாவது, 90 முதல் 120 நாட்களுக்குள் குறுகிய காலத்தில் பலனை அடையக் கூடிய பயிரீடு இது. எனவே இதில் பெரும்பாலன விவசாயிகள் தீவிரமாக செயல்படுவார்கள்.

கடந்த ஆட்சியில்…

கடந்த 5 ஆண்டுகளாக காவிரி டெல்டா பகுதிகளில் மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக குறித்த காலங்களில் திறந்துவிடப்பட்டது. அதோடு, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகவும் குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தையும் அரசு செயல் படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. எந்திர நடவை ஊக்கப்படுத்தும் வகையில், நடவுக்கு பின்னர் மானியம் வழங்கப்படுகிறது.

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் ரூ.482 கோடி செலவில் செயல் படுத்தப்பட்டு, 19.51 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2025-2026ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் குறுவை பருவத்தில் 12.48 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட 3 லட்சம் ஏக்கர் கூடுதலாகும்.

இலக்கை எட்டலாமா?

ஆனால், மேட்டூரில் சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாவிட்டால், பம்புசெட் போன்ற நிலத்தடி நீராதாரம் மூலம் மட்டுமே குறைவான பரப் பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட வேண்டியதாகிவிடும். இதனால் ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதார நிலை கேள்விக்குறியாகிவிடும். அந்த நிலை இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வரத்து இதுவரை கிடைக்கவில்லை. எனவே உரிய காலத்தில் மேட்டூர் அணை திறந்துவிடப்படவில்லை. இதனால் கடந்த ஜூன் மாதமே தொடங்கி இருக்க வேண்டிய குறுவை சாகுபடி தற்போது முழு அளவில் தொடங்காத நிலையில் உள்ளது. சாகுபடி பரப்பளவும் குறைந்துள்ளது. எனவே குறுவை சாகுபடியில் எதிர்பார்க்கப்படும் இலக்கை எட்ட முடியுமா? என்பது சந்தேகமாகவே உள்ளது. குறுவை சாகுபடியை நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு மிகப் பெரிய வாழ்வாதார பிரச்சினையை இது ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. அதுபற்றி விவசாயிகள் இப்போதே வலியுறுத்தி வருகின்றனர்.

குறைந்துவிட்டது

இதுகுறித்து கேட்டபோது அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி இயல்பாக 5.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப் படுகிறது. நடப்பு 2026-2027ஆம் ஆண்டிலும் 5.32 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேட்டூர்ணையிலிருந்து நீர் திறக்கப்படாத நிலையிலும், நிலத்தடி நீர் மற்றும் பம்புசெட் வசதிகளை பயன்படுத்தி கடந்த 31ஆம் தேதி நிலவரப்படி 4.39 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 93 ஆயிரம் ஏக்கர் குறைவாகும்.

(டெல்டா அல்லாத மாவட்டங்களில் நடப்பு 2026-2027ஆம் ஆண்டில் 5.35 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது)

இழப்பீடு இல்லை

கடந்த 2025-2026ஆம் ஆண்டில், காவிரி டெல்டா பகுதியில் 6.35 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. நீர் வரத்து போதுமான அளவு இருந்ததால் அப்போது இலக்கை தாண்டி சாகுபடி நடந்தது. குறுவை சாகுபடியில் ஆற்றுப்பாசனத்தின் மூலம் 1.85 லட்சம் ஏக்கர்லும், பம்புசெட் போன்ற பிற நிலத்தடி நீர் ஆதாரங்கள் மூலம் 3.47 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. 2026-2027ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் 2.80 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். நீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு கடந்த காலத்தில் என்ன இழப்பீடு வழங்கப்பட்டது? என்றால், இதுவரை தனியாக எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *