பிரிந்து வாழும் கணவன் மனைவி இருவரும் வீட்டுத்தவணை, குழந்தையின் செலவினைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்! மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மும்பை, ஜூலை 30- வருமானம் ஈட்டும் கணவன், மனைவி இருவரும், மண முறிவிற்குப் பின் குடும்பப் பராமரிப்பு, குழந்தைகளின் கல்வி செலவுகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். சமத்துவத்தை தேவைக்கு ஏற்றுவாறு தேர்ந்தெடுத்து உரிமை கோர முடியாது’ என, குடும்ப நல வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக மனைவியிடம் இருந்து மண முறிவு பெற்ற கணவர், பீகாரில் தனியே வசித்து வருகிறார். அவரது மனைவியும் குழந்தைகளும் மகாராட்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், கரோனா காலத்தில் வேலை பறிபோனதால், வாழ்வுரிமைத் தொகையை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக குறைக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் கணவர் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், ‘தற்போது குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதால், மனைவி மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக வழங்கப்படும் வாழ்வுரிமைத் தொகையை பாதியாக குறைத்து உத்தரவிட வேண்டும். மும்பையின் அந்தேரி மற்றும் பான்வெல் பகுதியில் உள்ள இரு வீடுகளுக்கு மாதத் தவணை செலுத்தி வருகிறேன். நிதி நெருக்கடியை சமாளிக்க அந்தேரியில் உள்ள வீட்டைக் காலி செய்துவிட்டு பீகாரில் உள்ள வீட்டில் சேர்ந்து வாழ அறிவுறுத்தினேன். அல்லது பான்வெல் வீட்டிற்கு குடியேறி, அந்தேரி வீட்டை விற்று கடன் பிரச்னையை சமாளிக்க, உதவுமாறு வலியுறுத்தினேன். இரு கோரிக்கைகளையுமே மனைவி நிராகரித்து விட்டார்’ என குறிப்பிட்டிருந்தார்.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சதாயே முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு வந்த நிலையில், கணவர் கோருவதில் எந்த தவறும் இல்லை என நீதிபதி தெரிவித்தார்.

இது குறித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கணவன், மனைவி இருவரும் வருமானம் ஈட்டும் ஒரு வீட்டில், அந்தேரி போன்ற உயர்தர பகுதியில் மனைவி வசிக்க விரும்பினால், அந்த வீட்டிற்கான மாதத் தவணையை தன் சொந்த வருவாயில் இருந்து செலுத்த முன் வரவேண்டும். அதைச் செய்யாமல், கணவரே முழு தவணையையும் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை.

பாலின சமத்துவமும், உரிமைகளும் சாதகமாக இருக்கும் இடத்தில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது அல்ல. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொள்ள விரும்பும்போது இருவருமே குடும்ப பாரத்தை சமமாக சுமக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என விரும்பும்போது, இருவருமே அதற்கான செலவை பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

கணவரின் நிதி நிலைமை மற்றும் பொறுப்புகளை கருத்தில் கொண்டு வாழ்வுரிமைத் தொகையை பாதியாக குறைத்து வழங்க உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *