மத்திய கிழக்கில் போர் பதற்றம்! அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு  அய்நா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நியூயார்க், மார்ச் 3– மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்து அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ (X) வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் ராணுவ ரீதியான பதற்ற அதிகரிப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களும், அதனைத் தொடர்ந்து ஈரான் முன்னெடுத்துள்ள பதில் தாக்குதல்களும் பன்னாட்டு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இத்தகைய ராணுவ நடவடிக்கைகள், ஏற்கெனவே கொந்தளிப்பாக இருக்கும் அந்தப் பிராந்தியத்தில், யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சங்கிலித் தொடர் விளைவுகளைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளன. இது ஒட்டுமொத்த உலக அமைதியையும் குலைத்துவிடும்.

அமைதிப் பேச்சுவார்த்தை

உண்மையான உரையாடல் மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் போன்ற அமைதியான வழிமுறைகள் மூலமாக மட்டுமே இந்தப் பிராந்தியத்தில் நீடித்த அமைதியை நிலைநாட்ட முடியும்.

அய்நா சாசனம்

பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கான அடிப்படை அடித்தளத்தை அய்நா சாசனம் வழங்குகிறது. அதை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அண்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

‘தமிழ்நாடு தலைகுனியாது’ பிரச்சாரக் கூட்டத்தில்

கண் கலங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்

தலைவாசல், மார்ச் 3– ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பெயரில் தி.மு.க. தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், “ஓலைக் குடிசையில் பிறந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான், கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய 3 தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது, டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்று இருந்தோம்.

எந்த ஜாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ.. அந்த ஜாதியில் பிறந்த என்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக்கினார்.

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பது வாய் வார்த்தை அல்ல. அதன் வழியில் எளியவனான எனக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வித்துறையை அளித்திருக்கிறார். இது அம்பேத்கர் கொள்கைக்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவித்தார். அப்போது உணர்ச்சி மிகுதியில் அமைச்சர் கோவி செழியன் கண் கலங்கினார்.

 

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி

சென்னை, மார்ச் 3- சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரியின் 4 நாட்கள் ஆய்வைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மெட்ரோ சேவையின் 2ஆம் கட்ட பணிகள் 118.9 கி.மீ தொலைவிற்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பூவிருந்தவல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடம் 4இல் சுமார் 26 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் பணி என்பது நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ள நிலையில், ஏற்கெனவே தொடர்ந்து இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை என்பது வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில், மேலும் பூவிருந்தவல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் இந்த ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது – சான்றிதழ் பெறப்பட்டது.

தற்போது 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கி பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில் தண்டவாளத்தின் தரம், பயணிகளின் பாதுகாப்பு, ரயில்பெட்டிகளின் வசதி, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருந்தது. இந்த சோதனையின் அடிப்படையில் பாதுகாப்பு சான்றிதழ் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்க இறுதி ஆய்வு என்பதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மேற்கொண்டிருந்தார்.

4 நாட்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தண்டவாளத்தின் தரம், பயணிகளின் பாதுகாப்பு, ரயில்பெட்டிகளின் வசதி, கட்டுமானம் குறித்து முதல் 2 நாளும், தொடர்ந்து 3ஆவது நாளில் மெட்ரோ ரயிலை 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் இயக்கியும், 4ஆவது நாளில் மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து மெட்ரோ ரயிலை இயக்கியும் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *