சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட சியென்-ஷியுங் வூ, அங்குள்ள நான்ஜிங்கில் உள்ள தேசிய மத்திய பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். அவர் அறிவியலில் ஒரு முன்னணி ஆளுமையாகத் திகழ்ந்தார். மன்ஹாட்டன் திட்டத்தில் ஆற்றிய பங்கிற்காக வூ புகழ்பெற்றவர். மேலும், என்ரிக்கோ ஃபெர்மியின் கதிரியக்க பீட்டா சிதைவுக் கோட்பாட்டை உறுதிப்படுத்தி, பின்னர் அதைச் செம்மைப்படுத்திய முதல் விஞ்ஞானியும் இவரே. இயற்பியலில் சமநிலைக் கோட்பாட்டைத் தலைகீழாக மாற்றிய தனது ” வூ பரிசோதனை ” க்காகவும் அவர் அறியப்படுகிறார் . இந்த திருப்புமுனைக்கு வழிவகுத்த நோபல் பரிசு, அவரது ஆண் சகாக்களுக்கு வழங்கப்பட்டது ; இந்தப் பணியில் வூவின் முக்கியப் பங்கு புறக்கணிக்கப்பட்டது.
புறக்கணிப்பு இருந்தபோதிலும், வூ அணு இயற்பியல் மற்றும் அதற்கடுத்த துறைகளில் தொடர்ந்து பங்களித்தார். 1958இல், அவரது ஆய்வுகள் குருதி மற்றும் அரிவாள்செல் குருதிசோகை தொடர்பான முக்கியமான உயிரியல் சிக்கல்கள் குறித்த முக்கியப் புரிதல்களை வழங்கின. அவர் 1975இல் தேசிய அறிவியல் பதக்கத்தை வென்றார், மேலும் 1978இல் வுல்ஃப் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி ஆனார். அவர் அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் முதல் பெண் தலைவராகவும் இருந்தார் .
கணிதவியலாளர் கேத்தரின் ஜான்சன்
கேத்தரின் ஜான்சன் ஒரு தலைசிறந்த அமெ ரிக்கக் கணிதவியலாளர் ஆவார். அவர் நாசாவில் ஒரு முக்கியப் பங்காற் றினார். அவர் இனம் மற்றும் பாலினத் தடைகளைத் தாண்டி, விண்கலங்களின் பயணப் பாதைகளுக்கான முக்கியக் கணக் கீடுகளை மேற்கொண்டார். மெர்குரி திட்டம், அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்குதல் மற்றும் விண்வெளி ஓடம் ஆகியவை அமெரிக்க விண்வெளிப் பயணங்களுக்கான அவரது பங்களிப்புகளில் அடங்கும்.
தனது பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஜான்சன், 2015இல் அதிபர் சுதந்திரப் பதக்கத்தைப் பெற்றார். ‘ஹிட்டன் ஃபிகர்ஸ்’ திரைப்படத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட அவரது மரபு, ஸ்டெம் (STEM) துறைகளில் உள்ள தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கிறது. ஜான்சன் 2020இல் தனது 101ஆவது வயதில் மறைவுற்றார்; விண்வெளி ஆய்வு மற்றும் பணியிடங்களில் சமத்துவம் ஆகியவற்றில் அவர் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளார்.

