ஒடிசாவில், மேனாள் மனைவிக்கு முறையாக வாழ்வூதியம் தர மறுக்கும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார். ஆண் அரசு ஊழியர்கள் மீது தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். பிடித்தம் செய்யப்படும் தொகையானது மேனாள் மனைவி அல்லது குழந்தைகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றார்.
பா.ஜ.க. இடஒதுக்கீட்டுக்கு எதிரானது: தேஜஸ்வி
ஆர்.எஸ்.எஸ். கட்டளையின் படி இடஒதுக்கீடு தொடர்பாக சிராக் பாஸ்வானும் ஜிதன் ராம் மஞ்சியும் சண்டையிடுவதாக தேஜஸ்வி விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாஜக எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே இருந்துள்ளது. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பேசவைத்து ஆழம்பார்ப்பது அவர்களின் பாணி. சிராக், ஜிதன்ராம் இருவரும் தனி தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுவிட்டு இப்போது அதற்கு எதிராக பேசுகிறார்கள் என சாடினார்.
மோடியை விமர்சித்த
பா.ஜ.க. மூத்த தலைவர்
மோடி ஆட்சியில் கல்விக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் முரளி மனோஹர் ஜோஷி விமர்சித்துள்ளார். ஊடகத்திடம் பேசிய அவர், கல்வி வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும், ஊழல் ஒழிப்பை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும். ஆனால் தற்போதய அரசின் முன்னுரிமை பட்டியலில் கல்வி இல்லை. அதனாலேயே மாணவர் போராட்டங்கள் அதிகரித்துள்ளன என்றார். வாஜ்பாய் ஆட்சியில் முரளி மனோஹர் ஜோஷி கல்வியமைச்சராக இருந்தார்.
