திருமணம் ஆகாத பெண் கர்ப்பமாகிவிட்டார். அதிர்ந்து போய், கருவைக் கலைக்க மருத்துவரைச் சந்தித்து இருக்கிறார்.
அப்போது, “ஒரே ஒரு முறை உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பமடைய மாட்டேன் என நினைத்தேன்” என்று கூறி அழுதிருக்கிறார். இத்தனைக்கும் அவர் பட்டப்படிப்பு முடித்து, உயர் பொறுப்பு வகிக்கிறார். நண்பர் சொன்ன தகவல் இது.
இந்த நிலையில், அண்மையில் ஒரு சிறுமிக்கு, 28 வார கர்ப்பத்தைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள செய்தியைப் படித்தேன். “சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக, கருவைச் சுமக்கச் சொல்ல முடியாது. அது அவரது மனநிலையைப் பாதிக்கும்” எனத் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவில் பொதுவாக 24 வாரங்களுக்கு மேலான கருவைக் கலைக்க அனுமதி இல்லை, தாய்க்கு ஆபத்து என்பதால். அதே நேரம், அரிதாக அனுமதிக்கப்படுவது உண்டு. அப்படியோர் அரிதான சம்பவம் இது.
‘பலாத்காரம், காதல் என்கிற பெயரில் உறவு, பால்ய திருமணம் ஆகியவற்றால் சிறுமிகள் கர்ப்பமடைவது இந்தியாவில் அதிகரித்து வருகிறது’ எனப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு, ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் எச்எம்அய்எஸ் தரவுகள், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB), போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகள், மாதிரி பதிவு முறை (SRS – Sample Registration System) உள்ளிட்ட அமைப்புகளின் தரவுகளை ஆராய்ந்தபோது கிடைத்த இந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
2020ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமியரின் மொத்த எண்ணிக்கை சுமார் 6 கோடி. இவர்களில் 40,80,000 சிறுமியர் கர்ப்பமடைந்தனர். அதாவது, 15 சிறுமியரில் ஒரு சிறுமி கர்ப்பம்.
பால்ய விவாகம் காரணமாக 38,76,000 பேரும், காதல் – வன்புணர்வால் 2,04,000 சிறுமிகளும் பாதிக்கப்பட்டனர்.
இப்படி காதல் – வன்புணர்வு உள்ளிட்டவற்றால் கருக்கலைப்பு செய்துகொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3,00,000 முதல் 4,00,000 வரை! இவர்களில் சுமார் 1 லட்சம் பேர் நிரந்தர மலட்டுத்தன்மை, நிரந்தர உடல் பாதிப்பு ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள்.
இன்னும் கொடுமை 2,500 முதல் 3,500 பேர் வரை மரணமடைகிறார்கள்.
இன்னொரு குண்டைத் தூக்கிப் போடுகிறது, India Child Protection (ICP) என்ற அமைப்பு. “இதெல்லாம் வழக்கு, வாய்தா என வருவதால் கிடைத்த புள்ளிவிவரங்கள். இதைவிடப் பல மடங்கு வன்புணர்வுகள், கர்ப்பங்கள் மறைக்கப்படுகின்றன” என்கிறது.
உலகிலேயே அதிக பெண் தெய்வங்கள், சிறுமி தெய்வங்கள் உள்ள நாடு இந்தியாதான். “கற்பு” என்கிற வார்த்தையையும் பெண்கள் மீது மட்டும் அழுத்தி “புனிதம்” காக்கப்படுவதும் இங்குதான். ஆனால் இங்குதான் இந்தப் பிரச்சினை!
இதற்கு வெறும் சட்டத்தை மட்டுமே வைத்துத் தீர்வு காண முடியுமா…?
வெறும் காமத்தையே வியாபாரமாக்கும் திரைப்படம், தொலைக் காட்சி, சமூக ஊடகங் களின் தாக்கம் முக்கிய காரணம்.
பாலியல் குறித்த அறியாமை ஒரு காரணம். சமூக மற்றும் பெற்றோர் போக்கு ஒரு காரணம். சிறுமி கர்ப்பமாகிவிட்டால், “வெளியில் தெரிந்தால் அவமானம்” என நினைத்து, தகுதி இல்லாதவர் மூலம் கருக்கலைப்பு செய்வது.. அதனால் மரணம் ஏற்படுவதும் இங்கே அதிகம்.
நெதர்லாந்து நாட்டிலும் நம் நாட்டைப் போல 18 வயது வரை சிறுமி, சிறுவர்தான். ஆனால் 16 வயதைச் சம்மத வயது (Age of Consent) என வைத்துள்ளார்கள். அதற்குப் பின் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் உறவு கொண்டால் சட்டப்படி குற்றம் அல்ல.
தவிர, “வளரிளம் பருவத்தினர் பாலியல் மற்றும் உறவு விஷயங்களில் ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இது இயற்கை” என்பதை அந்தச் சமூகம் உணர்ந்து அங்கீகரிக்கிறது. ஆகவே, அதைத் தடுப்பதை விட, “பொறுப்புடன்” இருக்க உதவுகிறது.
முக்கியமாக, “ஒரு விஷயத்தை மறைத்துச் செய்வதுதான் ஆபத்து” என்பது இவர்களது கொள்கை. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பாதுகாப்பான உடலுறவு, கருத்தடை, பாலியல் நோய்கள் குறித்து வெளிப்படையாகக் கலந்துரையாடுவார்கள்.
உலகிலேயே (சதவிகித அடிப்படையிலும்!) மிகக் குறைந்த வளரிளம் பெண்களின் கர்ப்பங்கள் இங்குதான் பதிவாகின்றன.
நாமோ வெளிப்படையாக ஆபாச, தரம்கெட்ட சினிமா – டிவி நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவது.. இன்னொரு பக்கம் “கற்பு” என்கிற பெயரில் பெண்களை அடிமைப்படுத்துவது என இரட்டை வாழ்க்கை வாழ்கிறோம். அதுவரை சிறுமிகள் கர்ப்பங்களையும், அதனால் ஏற்படும் உடல்பாதிப்புகள்/ மரணங்களையும் தடுக்கவே முடியாது!
