ஆவடி, ஜூலை 28– ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 26. 7. 2026 அன்று மாலை 6 மணிக்கு, ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ. கார்வேந்தன் தலைமையில், மாவட்ட செயலாளர் க. இளவரசன் ஒருங்கிணைப்பில், ஆவடி நகர கழக செயலாளர் இ. தமிழ்மணி கடவுள் மறுப்பு கூற நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கமான சேலம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கியும், நீட்டுக்கு எதிராக கழகம் சார்பாக நடைபெறும் இரு சக்கர வாகன பேரணி குறித்தும், குறிப்பாக சென்னை மண்டலம் சார்பாக நடைபெறும் இரு சக்கர வாகன பேரணியில் ஆவடி மாவட்ட கழகம் சார்பில் இளைஞரணி தோழர்கள் அதிகமாக பங்கேற்க வேண்டும் எனவும், விடுதலை சந்தா சேர்க்கவும், மாவட்ட கழக வளர்ச்சி குறித்தும் நோக்கவுரை ஆற்றினார்.
தீர்மானங்கள்
திராவிடர் கழக தலைமை நிலையத் தின் பணித்தோழர் க.கலைமணியின் தந்தையார் கோ. கருணாநிதி மறைவிற்காக ஆவடி மாவட்ட கழகம் ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் இரு சக்கர வாகனப் பேரணிக்கு 31. 7. 2026 வெள்ளிக்கிழமை மாலை 05-00 மணிக்கு உற்சாக வரவேற்பினை ஆவடி மாவட்ட எல்லையான அம்பத்தூர் O. T. பேருந்து நிலையம் அருகில் அளிப்பது எனவும், தொடர்ந்து திருமுல்லைவாயல், ஆவடி அண்ணாசிலை, ஆவடி நகராட்சி 01. 8. 2026 அன்று காலை 09-00 மணிக்கு ஆவடி பெரியார் சிலை அருகில் துவங்கி தொடர்ந்து பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக வேப்பம்பட்டிற்கு வழியனுப்பும் வரை மாவட்ட கழக தோழர்கள் திரளாக பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டது.
ஆவடி மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் அவர்கள் கடந்த மே மாதம் சாலை விபத்தில் சிக்கி சுயநினைவிழந்து உயிருக்கு போராடி வரும் செய்தி காலதாமதமாகத் தெரிந்தாலும் தெரிந்த உடனே மாவட்ட கழக தலைவர், செயலாளர், துணைச்செயலாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மற்றும் திடல் வை. கலையரசன் ஆகியோர் தர்மபுரி மருத்துவமணைக்கு அதிகாலையில் சென்று நலம் விசாரித்து அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவி செய்துவிட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 20.7.2026 அவரது தங்கை தமிழரசி (எ) தமிழ்ச்செல்வி மீண்டும் ரவீந்திரனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் பொருளாதார உதவி செய்யுமாறு வேண்டுகோள் ஒன்று விடுத்திருந்தார்.
அச்செய்தியை ஆவடி மாவட்ட திராவிடர் கழக குழுவில் வெளியிட்டதும் மாவட்ட தோழர்கள் தொண்டற உள்ளத் தோடு உடனே நிதியளித்தனர்.
மனிதநேய தொண்டற உள்ளத்தோடு வழங்கிய தோழர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் மாவட்ட கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
நீட்டுக்கு எதிரான இருசக்கர வாகன பேரணியில் ஆவடி மாவட்டம் சார்பாக பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கலந்து கொண்டும், முழுவதுமாகவும் கலந்து கொள்ள இயலாதவர்கள் சனி- ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக கலந்து கொண்டு பேரணி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைக்குமாறு வேண்டு கோள் விடப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங்களையொட்டி ஆவடி மாவட்ட ப. க. துணைத்தலைவர் மு.ரகுபதி, துணைச்செயலாளர் க.தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க. செயலாளர் க.கார்த்திக்கேயன், துணைத்தலைவர் ஜெயராமன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாவட்ட இளைஞரணி தலைவர் வி. சோபன்பாபு, துணைத்தலைவர் கலைவேந்தன், துணைச்செயலாளர் சென்னகிருஷ்ணன், ஆவடி நகர தலைவர் கோ. முருகன், செயலாளர் இ. தமிழ்மணி, பட்டாபிராம் நகர தலைவர் இரா. வேல்முருகன், பூந்தமல்லி நகர தலைவர் பெரியார்மாணாக்கன், திருமுல்லைவாயல் நகர தலைவர் இரணியன், அம்பத்தூர் நகர தலைவர் பூ. இராமலிங்கம், திருநின்றவூர் நகர இளைஞரணி அமைப்பாளர் மா.சிலம்பரசன், பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ. வெ. நடராசன், ஆவடி தேவி நகர் புருசோத்தமன், பருத்திப்பட்டு செல்வராஜ், அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், ஆவடி விஜய் ஆகியோர் உரையாற்றினர். ஆவடி தேவி நகர் புருசோத்தமன் விடுதலை நாளிதழுக்கான ஓராண்டு சந்தா வழங்கினார். இறுதியாக வை. கலையரசன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.
