ஓசூர், ஜூலை 27– காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலி யுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், கருநாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து கருநாடகாவுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டன.
மேகதாதுவில் அணை கட்டும் கருநாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சூழலில், மேகதாதுவில் கருநாடக அரசு உடனே அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி, கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் சார்பில் கருநாடகாவில் தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள அத்திப்பள்ளியில் நேற்று (26.7.2026) சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு செல்லும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் நேற்று (26.7.2026) அதிகாலை 4 மணி முதல் ஓசூரில் நிறுத்தப்பட்டன.
அதேநேரம், தமிழ்நாடு பதிவெண் கொண்ட கார்கள், கனரக வாகனங்கள் மற்றும் கருநாடக அரசு, தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் அந்தந்த மாநில காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நண்பகல் 12 மணி அளவில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அத்திப்பள்ளியில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு தமிழ்நாடு எல்லையை நோக்கி வந்தனர். அவர்களை கருநாடக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஓசூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, செய்தி யாளர்களிடம் மஞ்சுநாத் தேவா கூறியதாவது:
பருவமழை போதிய அளவில் பெய்யாததால் காவிரியின் முக்கிய அணைகளில் நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியபோது, குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நாங்கள் ஒத்துழைப்பு அளித்தோம். அதேபோல, தற்போது பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்காக மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு ஆதரவு அளிக்க வேண்டும்.
கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆக.3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திக்க உள்ளார். அப்போது, இரு மாநிலங்களுக்கும் ஏற்ற சுமுகமான முடிவை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைபிடித்தால், போராட்டம் தீவிரப் படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மதியம் 1 மணிக்குப் பிறகு, ஓசூரில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் வழக்கம்போல கருநாடகாவுக்கு இயக்கப் பட்டன. பேருந்துகள் 8 மணி நேரமாக நிறுத்தப் பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
